இந்திய சினிமா நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் அமீர்கான். கடந்த 1999 -ஆம் ஆண்டு அமீர் கான் நடிப்பில் ஜான் மேத்யூ மாத்தன் இயக்கத்தில் வெளியான “சர்பரோஷ்” திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சமீபத்தில் இந்த படத்தின் சிறப்பு காட்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் அமீர்கான், இயக்குநர் ஜான் மேத்யூ மாத்தன் மற்றும் சர்பரோஷ் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் அமீர்கான் பேசிய போது, படத்தின் அடுத்த பாகம் விரைவில் உருவாகும் என்று உறுதி அளித்தார். மேலும் இரண்டாம் பாகத்தில் இயக்குநர் ஜான் மேத்யூ பணிபுரிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இது குறித்து அமீர்கான் பேசியதாவது, “இந்த முறை இன்னும் சீரியஸாக, சரியான ஸ்கிரிப்ட் உடன் நாங்கள் வர இருக்கிறோம். இதற்கு ஜான் தான் சரியான தேர்வாக இருப்பார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்பதை நானும் ஃபீல் செய்கிறேன்” என்றார்.
இந்த படம் குறித்து நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஜான் மேத்யூ, “முதலில் இந்த கதைக்கு நடிகர் அமீர்கான் வேண்டாம் என்று பலரும் என்னிடம் கூறினார்கள். அமீர்கானுக்கு பதிலாக ஷாருக்கானை நடிக்க வைத்தால் மட்டுமே படம் லாபம் தரும் என்றும் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால், இந்த கதைக்கு நான் ஷாருக்கானை மனதில் நினைக்கவே இல்லை என்று சொல்லி விட்டு, அமீர்கானை தேர்வு செய்தேன்” என்று கூறினார்.
விரைவில் சர்பரோஷ் 2 படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘அம்மா என்னும் மந்திரமே… அகிலம் யாவும் ஆள்கிறதே…’ : மறக்கமுடியாத நினைவுகள்!
கரீனா கபூருக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்… காரணம் என்ன?