oசட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் சீமான்

politics

சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வேலப்பன் சாவடியிலுள்ள கே.வி.என். திருமண மண்டபத்தில் இன்று (ஜனவரி 4) நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு, நடிகர்கள் மன்சூர் அலிகான், ஆர்.கே.சுரேஷ், தமிழன் தொலைக்காட்சி உரிமையாளர் கலைக்கோட்டுத்தயம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், என்.ஆர்.சியைக் கொண்டுவரக் கூடாது எனவும், என்.ஐ.ஏ சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே பொதுவிநியோகம் உள்ளிட்ட மத்திய அரசின் ஒரே நாடு கொள்கையை கண்டித்தும், பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய வேண்டுமெனவும், ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டுமெனவும், நீட் தேர்வு விலக்கை வலியுறுத்தியும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், காவிரியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும், நெல்லைக் கண்ணனை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது எப்படி, தமிழீழ விடுதலை, கச்சத்தீவு மீட்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கவுள்ளோம். 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இம்மாத இறுதிக்குள் தேர்வு செய்து அவர்களை களப்பணிக்கு அனுப்பவுள்ளோம். ஒன்றரை ஆண்டுகள் தொடர்ச்சியாக களத்தில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை அவர்களுக்கு அளிப்போம். 234 இடங்களில் ஆண்கள் 117, பெண்கள் 117 என சம வாய்ப்பாக வேட்பாளர்களை களமிறக்கவுள்ளோம். இது எங்களின் கொள்கை முடிவு” என்று தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விக்கு, “உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்குப் பின்னடைவு இல்லை. ஊரகப் பகுதிகளில் சாதியும், பணமும்தான் வேலைசெய்யும். அதையெல்லாம் தாண்டி நாங்கள் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளோம் என்பதை பார்க்க வேண்டும். எங்களுடைய வாக்கு 4 லிருந்து 10 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஊரகப் பகுதிகள் அனைத்திலும் கட்சியைக் கொண்டு சேர்த்துள்ளோம் என்பதே எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி” என்று குறிப்பிட்டார்.

மேலும், “ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 120க்கும் மேற்பட்ட இடங்களில் நாங்கள் வென்றுள்ளோம். வார்டு உறுப்பினர்களில் பல இடங்களில் வென்றுள்ளோம். ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் நாகர்கோவிலில் சுனில் வெற்றிபெற்றுள்ளார். இரண்டு பெரிய கட்சிகள், பண அழுத்தத்தை தாண்டி நாங்கள் வெல்வது என்பது பெரிய மாற்றுதான்” என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாத இறுதிக்குள் வேட்பாளர்களை அறிவிப்போம் என்று சீமான் சொல்லியிருப்பதன் மூலம் மற்ற கட்சிகளை விட சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் நாம் தமிழர் முந்திக்கொண்டுள்ளது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *