ராகவன் கைது, அண்ணாமலை ராஜினாமா: ஜோதிமணி அட்டாக்!

politics

தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்து பாலியல் வீடியோ சர்ச்சையில் சிக்கி பதவி விலகிய கே.டி.ராகவனை கைது செய்யக் கோரியும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ராஜினாமா செய்யக் கோரியும் தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் இன்று (ஆகஸ்டு 27) போராட்டம் நடைபெற்றது.

ஆகஸ்டு 24 ஆம் தேதி காலை தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராகவன் வீடியோ காலில் ஒரு பெண்ணுடன் பாலியல் ரீதியாக சைகை காட்டுவதும், மலினமான செயல்கள் செய்வதுமான வீடியோ வெளியானது. இதையடுத்து தன் மீதான புகாரை மறுத்த கே.டி.ராகவன், உடனடியாக தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோரை பாஜகவில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து மதன் ரவிச்சந்திரன் இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலையை தான் சந்தித்துப் பேசியபோது நடந்த உரையாடல்களை ஆடியோவாகவும் வெளியிட்டார். அதில் பல்வேறு விவகாரங்களை அண்ணாமலை பேசியிருக்கிறார்.

இதற்கிடையில் ஆகஸ்டு 24 ஆம் தேதி மாலையே டிஜிபி அலுவலகம் சென்ற கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பாலியல் விவகாரத்தில் சிக்கியுள்ள கே.டி.ராகவன் மீது விசாரணை நடத்திக் கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்தார். ஆனால் மூன்று நாட்களாகியும் இந்த விவகாரத்தில் தமிழக போலீஸின் நிலைப்பாடு என்ன என்பது பற்றிய எந்தத் தகவலும் இல்லை.

இந்தப் பின்னணியில்தான் இன்று (ஆகஸ்டு 27) பிற்பகல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் பாஜக அலுவலகமான கமலாலயத்தை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிடுவது என போராட்டம் அறிவிக்கப்பட்டது.

தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன், கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் பெண்கள் வள்ளுவர் கோட்டத்தில் இருந்து ஆர்பாட்டம் செய்துவிட்டு பேரணியாக புறப்படத் தயாராகினர். ஆனால் போலீசார் பேரணி தொடர்ந்து செல்ல மறுப்பு தெரிவித்து அவர்களை கைது செய்தனர்.

இந்தப் போராட்டத்தின் போது பேசிய ஜோதிமணி எம்பி, “ பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அண்ணாமலை, ‘சாதாரண பெண்கள் இதுபோல பாதிக்கப்பட்டிருந்தால் நான் உங்கள் கால்களில் விழுந்தாவது அதில் சம்பந்தப்பட்ட பாஜக தலைவர்களைக் காப்பாற்றியிருப்பேன்’என்று மனசாட்சியும் வெட்கமும் இல்லாமல் சொல்கிறார். இவரெல்லாம் முன்னாள் காவல்துறை அதிகாரி என்று சொல்வதற்கே வெட்கப்பட வேண்டும். தமிழக பெண்களை அவமதித்ததற்காக பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும். அதுபோல பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட கே.டி.ராகவன் உள்ளிட்ட எந்த பாஜக தலைவராக இருந்தாலும் அவர்களை தமிழக அரசு சட்டப்படி கைது செய்ய வேண்டும்” என்று கூறினார்.

பாஜகவில் வீசி வரும் பாலியல் சூறாவளியை கையிலெடுத்து காங்கிரஸ் சார்பில் வேகமாக செயல்பட்டு வருகிறார் ஜோதிமணி. தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலையும் ஜோதிமணியும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *