zநீட் ஆய்வுக் குழு செல்லும்: பாஜக மனு தள்ளுபடி!

politics

நீட் ஆய்வுக் குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பாஜக மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்களுக்கு பாதிப்பு உள்ளதா? பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் அதற்கான மாற்று வழி என்ன? என்பது குறித்து ஆய்வுசெய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. நான்கு ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ள இக்குழு, இதுவரை 90 சதவிகித பணிகள் முடிவடைந்துவிட்டதாக கடந்த வாரம் தெரிவித்தது.

இதற்கிடையில் நீட் ஆய்வுக் குழுவை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ”உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது. அதனால், அக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு அரசியல் ஆதாயத்திற்காக தொடரப்பட்டிருப்பதால், தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

”நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது, மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயலாகும். தமிழ்நாடு அரசு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்யக் குழு அமைக்க அதிகாரமில்லை. நீட் தேர்வு சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்பது குறித்து விசாரிக்க, தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது” என்று ஒன்றிய அரசு கடந்த வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், மீண்டும் இவ்வழக்கு இன்று (ஜூலை 12) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, “அரசு பள்ளி மாணவர்கள், பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதே தவிர, வேறு ஏதும் கூறப்படவில்லை. குழு அமைத்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும், ஒன்றிய அரசு சட்டங்களுக்கு எதிராகவும் இல்லை.

குழு தரும் பரிந்துரைகளின் படி உச்ச நீதிமன்றத்தில் நீட் குறித்து அரசு வலியுறுத்தும். பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவிக்க முடியும்.

குழு நியமனம் என்பது வீண் செலவு எனக் கூறமுடியாது. மக்கள் கருத்துக் கேட்பது தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையைத் தடுக்கும் வகையில், மாநில அரசு தனது அதிகார வரம்பை மீறவில்லை.

எனவே, தமிழ்நாட்டில் நீட் பாதிப்பு குறித்து ஆராய அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு செல்லும்” என உத்தரவிட்ட நீதிபதிகள், பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜனின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி,” ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு, நீட் தேர்வு தாக்கம் பற்றிய அறிக்கையைத் தருவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த முதல் வெற்றி; இவ்வழக்கில் இணைத்துக்கொண்ட அத்தனை கட்சி, அமைப்புகளுக்கும் உளமார்ந்த பாராட்டு கலந்த நன்றி. இது தொடக்கம்தான் – நாம் தாண்டவேண்டிய தடைகளும், கடக்கவேண்டிய தூரமும் அதிகம். அடுத்த வியூகம் பல்முனை வியூகமாக அமைவதே பிரச்சினைக்குத் தீர்வு காண உதவக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

நீட் ஆய்வு குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நாளை தமிழ்நாடு அரசிடம் அறிக்கையை சமர்பிக்கவுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *