uஓ.பன்னீருக்கு என்னாச்சு? ஹெல்த் ரிப்போர்ட்!

Published On:

| By Balaji

துணை முதல்வர் பன்னீர்செல்வம் மருத்துவப் பரிசோதனை முடிந்து இன்று மாலை வீடு திரும்புகிறார்.

துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் தாமதமாக இன்றுதான் வெளியாகியது.

மருத்துவமனை நிர்வாகம் இன்று (மே 25) காலை 11.30 மணிக்கு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “வழக்கமான உடல் பரிசோதனைக்காக பன்னீர்செல்வம் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். இன்று காலை மருத்துவ நிபுணர்கள் குழு அவரை பரிசோதனை செய்தது. இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார்” என்று தெரிவிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் மருத்துவமனையில் பன்னீர்செல்வத்தை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து அளித்து நலம் விசாரித்தார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். அப்போது, தன்னுடைய உடல்நிலை நன்றாக இருப்பதாக அவரிடம் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுபோலவே அதிமுக அமைச்சர்களும், முக்கிய தலைவர்களும் நலம் விசாரித்து வருகிறார்கள்.

பன்னீர்செல்வம் உடல்நலனுக்கு என்ன ஆயிற்று என்ற தகவல் குறித்து மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்தோம்…

“திடீரென மயக்கம் வருவது போலவும், நெஞ்சு வலிப்பது போலவும் இருந்ததாகக் கூறி பன்னீர்செல்வம் நேற்று மாலை மருத்துவமனைக்கு வந்தார். அவரை அட்மிட் ஆகும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அவருக்கு இன்று காலை ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் இதயத்தில் பெரிய அளவில் அடைப்போ, பிரச்சினையோ இல்லை என்றும், மருந்து, மாத்திரைகளிலேயே சரி செய்துவிடலாம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். மேலும், பிரச்சினை ஏதும் இல்லாததால் இன்று மாலையே வீடு திரும்பலாம் என்றும், சிறிது ஓய்வெடுத்தால் போதும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்” என்று தெரிவிக்கிறார்கள்.

**எழில்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share