எண்ணூர் துறைமுகத்தை விரிவுபடுத்தினால்…: எச்சரிக்கும் சீமான்

politics

சென்னை அருகே உள்ள கடற்கரை பகுதியான திருவொற்றியூர் தொகுதியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளை அடக்கியது இந்த தொகுதி.

இந்த தொகுதியில், திமுக சார்பில் கே.பி.பி.சங்கர் , அதிமுக சார்பில் கே.குப்பன், அமமுக சார்பில் எம்.சவுந்திரபாண்டியன், மநீம சார்பில் டி.மோகன் போட்டியிடுகின்றனர். திருவொற்றியூர் தொகுதியில் 5 முனை போட்டி நிலவுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்த தொகுதிக்கு ஆட்சியிலிருந்தவர்கள் எதுவும் செய்யவில்லை என திமுகவும், மெட்ரோ ரயில் உட்பட பல திட்டங்கள் இந்த தொகுதியில் செயல்படுத்தியிருப்பதாக அதிமுகவும் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ரேஷன் கடைகளிலேயே பொருள் இல்லை. சிலிண்டர் விலை உயர்வது குறித்து கேள்வி கேட்டால் விறகு அடுப்பை பயன்படுத்துங்கள் என்கிறார்கள். விறகு அடுப்பிலிருந்து முன்னேறிதானே சிலிண்டரை பயன்படுத்தினோம். தற்போது மீண்டும் விறகு அடுப்பை பயன்படுத்துங்கள் என சொல்கிறார்கள்” என்று விமர்சித்தார்.

தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை கடுமையாகத் தாக்கி பேசிய சீமான், பிச்சைக்காரர்களே இல்லாத நாடாக மாற்றுவேன், விவசாயிகள் கடனாளியாக இல்லாதவர்களாக பார்த்துக்கொள்வோன், அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த கல்வியைக் கொடுப்பேன் என்று கூறி வாக்குசேகரித்தார்.

இதனிடையே, அந்த பகுதியில் உள்ள மீன் கடைகளுக்குச் சென்று மீனவர்கள், மீனவ பெண்களிடம் விவசாய சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “காமராஜர் துறைமுகம் அரசு துறைமுகமாக இருந்த வரை எவ்வித பிரச்சினையும் இல்லை. இதையடுத்து தனியாருக்கு ஒப்படைத்த பிறகு 6111 ஏக்கர் நிலம் விரிவாக்கத்துக்காகக் கொடுக்கப்படுகிறது. சென்னையில் வெள்ளம் ஏற்படும்போது, கொசஸ்தலை உள்ளிட்ட ஆற்று நீர், பழவேற்காட்டில் உள்ள முகத்துவாரத்தில் சென்று கலக்கிறது. இந்நிலையில், துறைமுக விரிவாக்கத்தால் இந்த இடத்தில் சுவர் கட்டி தடுக்கும் போது மழை வெள்ளம் செல்ல முடியாமல், காட்டுப்பள்ளி எண்ணூர் மட்டுமின்றி மொத்த சென்னையும் மூழ்கும் அபாயம் ஏற்படும். அதனால் தான் இந்த திட்டத்தை எதிர்க்கிறோம்” என்று கூறினார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *