மோடி வருகை: திமுக- பாஜக சுமுக இடப்பங்கீடு!

politics

பிரதமர் மோடி இன்று மே 26ஆம் தேதி பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவுக்காக சென்னை வருகிறார்.

தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகள், ரயில்வே திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை துவக்கி வைத்தும், நிறைவுற்ற பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஒன்றிய அமைச்சர் டாக்டர் எல் முருகன், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள், அண்டை மாநில பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் கோபேக் மோடி என்ற முழக்கத்தை முன்னெடுத்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இப்போது திமுக ஆளுங்கட்சியாக தமிழக முதல்வராக ஸ்டாலின் இருக்கும் நிலையில் மோடி வருகை எதிர்ப்பு திமுகவால் முன்னெடுக்கப்படவில்லை.

அதேநேரம் மோடியை வரவேற்க இந்த முறை பிரம்மாண்டமான ஏற்பாடுகளை பாஜக செய்து வருகிறது. சென்னை ஆல் இந்தியா ரேடியோ முதல் நிகழ்ச்சி நடக்கும் நேரு ஸ்டேடியம் வரை சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில் வரவேற்பு ஏற்பாடுகளை பாஜக செய்து வருகிறது.
.
இன்னொரு பக்கம் நேரு உள்விளையாட்டு அரங்கில் விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக நெடுஞ்சாலைத் துறை செய்து வருகிறது. நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு விழாவுக்கான ஏற்பாடுகள் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

நேரு உள் விளையாட்டரங்கில் கேலரி எனப்படும் மாடத்தில் திமுகவினர் பாஜகவினர் வெகுவாக கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இந்த வகையில் பாஜகவினருக்கு 1500 இருக்கைகளுக்கான பாஸ் வழங்கப்பட்டுள்ளது. திமுகவினருக்கு 2500 இருக்கைகளுக்கான பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மற்ற இடங்களில் பிற கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திமுகவினரும் பாஜகவினரும் நேரு உள் விளையாட்டு அரங்கில் செய்து கொண்டுள்ள இந்த இடப் பகிர்வின் படி தங்களது கட்சியினரை அமர வைக்க திட்டமிட்டுள்ளனர்.

இதன் மூலம் நேரு விளையாட்டு அரங்கில் இன்று மாலை தளபதி முதல்வர் வாழ்க என்றும் பாரத் மாதா கி ஜே என்றும் திராவிட மாடல் அரசு வாழ்க என்றும் பல்வேறு முழக்கங்கள் ஆங்காங்கே எழுவதற்கு வாய்ப்பு இருக்கின்றன.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *