cரஜினி மீது வழக்கு: மறுத்த நீதிமன்றம்!

Published On:

| By Balaji

ரஜினிக்கு எதிராக திவிக தொடர்ந்த வழக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தந்தை பெரியார் குறித்து ரஜினி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பெரியாரிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும், தான் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி தெரிவித்துவிட்டார். இந்த விவகாரத்தில் ரஜினி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் விடுதலை கழகத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஜனவரி 18ஆம் தேதி புகார் அளித்தார்.

இந்த புகாரின் மீது ஒரு மாதகாலம் ஆகியும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உமாபதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி ரோஸ்லீன் துரை முன்பு கடந்த 4ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ரஜினிக்கு எதிரான புகாரின் மீது இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து சென்னை மாநகர ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆறுமுகம் என்பவரின் சார்பில் வழக்கறிஞர் நமோ நாராயணன் இடையீட்டு மனுதாக்கல் செய்தார். அதில் ரஜினிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, விளம்பரத்திற்காக நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் தொடரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மனுதாரர் உமாபதி தரப்பில், “ரஜினி பேசியதற்கான உரிய ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் மூன்றாவது நபர் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் இன்று (மார்ச் 10) வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரோஸ்லீன் துரை, “ரஜினியின் பேச்சால் எந்த ஒரு சட்டம் – ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாத நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட முடியாது” என்று கூறி, ரஜினிக்கு எதிராக உமாபதி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஆறுமுகம் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.

எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக மனுதாரர் உமாபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் துரை.அருண், “ரஜினிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரலாம். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படவில்லை என்று கூறிதான் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ரஜினி பேச்சின் எதிரொலியாகத்தான் செங்கல்பட்டு அருகேயுள்ள கிராமத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டுக்குச் செல்வோம்” என்று கூறினார்.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share