2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி சலசலப்போடு சத்தமிட தொடங்கியுள்ளது.
ஜூலை 16ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது. நாங்கள்தான் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம். எடப்பாடியாரே மீண்டும் முதலமைச்சராக வருவார். 2021 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை மையப்படுத்தியே அதிமுகவின் வியூகம் இருக்கும் என்று அறிவித்தார்.
இந்த நேரத்தில் அமைச்சர் ஏன் இப்படி பேசுகிறார் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தங்களது சமூக தளங்களிலும் வாட்ஸ்அப் குழுக்களிலும் எதிர்வினை ஆற்றினார்கள்.
இதற்கிடையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்த நிலையில்… ஆகஸ்ட் 11ஆம் தேதி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டரில், “ எடப்பாடியார் என்றும் முதல்வர்” என்று எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்தார்.
ஆகஸ்ட் 12ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர். பி. உதயகுமார், “மக்களவைத் தேர்தல் மற்றும் மினி சட்டமன்ற தேர்தல் எனக் கருதப்பட்ட இடைத் தேர்தலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை முன்னிறுத்திதான் சந்தித்தோம். உள்ளாட்சித் தேர்தலையும் இருவரையும் முன்னிறுத்தியே சந்தித்தோம். அதேபோல அனைவரும் ஒற்றுமையாக இருந்து வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தோடு தர்ம யுத்தத்தில் இணைந்து பணியாற்றியவருமான கே.பி. முனுசாமி நேற்று (ஆகஸ்ட் 12) இரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்து பேசினார்.
அப்போது, “ அதிமுகவில் எந்த அதிகார மையமும் கூடி ஆலோசிக்காத நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் இவர்தான் என்று வெளியே கூறுவது கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும். அதையும் சில அமைச்சர்களே திரும்பத் திரும்ப சொல்லும்போது ஊடகங்களுக்கும் நமது எதிர்க்கட்சிகளுக்கும் அது பலனை உண்டாக்கித் தரும். எனவே தேர்தல் நெருங்கும் சமயத்தில் முடிவெடுக்கப் பட வேண்டிய விஷயம் பற்றி இப்போது விவாதிக்க வேண்டாம் என்று நீங்களே வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இல்லையெனறால் இந்தப் பிரச்சினை வேறு மாதிரி செல்லக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன” என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தி கூறியிருக்கிறார் கே.பி. முனுசாமி. அதற்கு முதல்வர் இப்போது இது பற்றி பேச வேண்டாம் என்று சில குறிப்பிட்ட அமைச்சர்களிடம் தான் ஏற்கனவே தெரிவித்திருப்பதாகவும் மீண்டும் இது பற்றிப் பேசுவதாகவும் கூறியிருக்கிறார்.
இதன் பின்னணியில்தான், இன்று ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன், சிவி சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி, “யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பேச இது நேரமில்லை. விரைவில் அதுபற்றி தலைமைக் கழகம் முடிவெடுக்கும்” என்று கூறினார்.
நேற்று கே.பி. முனுசாமி முதல்வரை சந்தித்து கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையில்தான் இன்று இந்த ஆலோசனையும் அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது என்கிறார்கள் அதிமுகவில்.
**-வேந்தன்**�,”