mஅதிமுக பொலிடிக்கல் லீக்: ஆட்ட நாயகர்கள்!

politics

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (அக்டோபர் 7) அறிவிக்கப்பட்டிருக்கிறார். துணை முதல்வரும் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமே இதை அதிமுக தலைமைக் கழகத்தில் அறிவித்தார்.

காரசாரமான அதிமுகவின் செயற்குழு கூட்டம் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்து அக்டோபர் 7ஆம் தேதி அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார் என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றுவிட்டார் கே.பி.முனுசாமி.

செப்டம்பர் 28ஆம் தேதிக்கும் அக்டோபர் 7ஆம் தேதிக்கும் இடையிலான ஒன்பது நாட்களில் பல திருப்பங்கள், சந்திப்புகள், தடுமாற்றங்கள், நகர்வுகள், காய் நகர்த்தல்கள் என்று நடந்து கே.பி.முனுசாமி சொன்னபடியே அக்டோபர் 7ஆம் தேதி காலையே முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டார்.

இந்த ஒன்பது நாட்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே இடைவெளிகள் அதிகரிப்பதாகவே தோற்றம் இருந்தது. செயற்குழுக் கூட்டத்துக்கு மறுநாள் தலைமைச் செயலகத்தில் நடந்த கொரோனா ஊரடங்கு குறித்த கலெக்டர்கள் கூட்டத்திலும், மருத்துவ நிபுணர்கள் கூட்டத்திலும் துணை முதல்வர் கலந்து கொள்ளவில்லை. அடுத்த நாள் தலைமைச் செயலகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தபோது அதே தலைமைச் செயலகத்தில் தன் அறையில் இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. சென்னை மாநகராட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பன்னீரின் பெயரே இடம்பெறவில்லை. இதையெல்லாம்விட அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் அருகருகே நின்றும் பன்னீரும், எடப்பாடியும் முகம் பார்த்துக்கூட பேசிக்கொள்ளவில்லை. அன்றே பன்னீர்செல்வம் தேனி புறப்பட்டுவிட்டார். ஆக செயற்குழுவுக்குப் பின் அவர் சென்னையில் இருந்த நான்கு நாட்களிலும் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கவே அவர் விரும்பவில்லை.

இப்படிப்பட்ட நிலைமை அக்டோபர் 7ஆம் தேதி மாறியது எப்படி என்று அதிமுக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது இருவரைக் கை காட்டுகிறார்கள் ஒருவர் கே.பி.முனுசாமி, இன்னொருவர் எஸ்.பி.வேலுமணி. இந்த இருவரின் உறக்கம் தொலைத்த கடுமையான முயற்சிதான் அதிமுகவில் நேற்று எட்டப்பட்டிருக்கும் உடன்பாட்டுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

“கே.பி.முனுசாமி துணை முதல்வருக்கு மிகவும் நெருக்கமானவர். பன்னீர் பார்ப்பது எதற்காக, அவர் நினைப்பது என்ன என்பதை குறிப்பறிந்து செயல்படக் கூடியவர். அதேபோல எஸ்.பி.வேலுமணி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர். கொங்கு முதல் டெல்லி வரை எடப்படிக்கு எல்லாமுமாக இருப்பவர்.

கே.பி.முனுசாமி பலமுறை துணை முதல்வரையும் முதல்வரையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டியதன் யதார்த்த சூழலை விளக்கியிருக்கிறார். ஒருவேளை ஓ.பன்னீர் தினகரனோடு உடன்பாடு கண்டுவிட்டாரோ என்ற சந்தேகம் கட்சியில் பலருக்கும் ஏற்பட்டுவிட்டது என்ற நிலையில், அந்த எஸ்டீமுக்கு பன்னீர் சென்றுவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார் கே.பி.முனுசாமி. அதன் அடிப்படையில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதற்கு பன்னீரை சம்மதிக்க வைத்தார் கே.பி.முனுசாமி. எஸ்.பி.வேலுமணி பன்னீர்செல்வத்தைச் சந்தித்து, ‘நாம் மீண்டும் ஆட்சி அமைக்கத்தான் போகிறோம். நீங்கள் உம் என்று சொல்லுங்கள். வழிகாட்டுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நமக்குள் பிரிவு வந்து அதில் வேறு யாரும் குளிர்காய்ந்துவிட வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறார்.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி – தினகரன் ஒன்றாக இருந்தபோது தினகரன் நடத்திய கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தவர் வேலுமணி. கே.பி.முனுசாமி எவ்வாறு சசிகலாவை எதிர்த்தாரோ அதேபோல அவர் சிறை சென்றபின் கட்சிக்குள் தினகரனின் ஆதிக்கத்தை முதலில் எதிர்த்தவர் வேலுமணி. அதனால்தான் தினகரன் தனது பத்திரிகையாளர் சந்திப்புகளில் வேலுமணியை அவ்வப்போது விமர்சித்து வந்தார்.

இந்த இருவரின் மன ஓட்டமும், நிலைப்பாடும் இந்த மோதலில் சசிகலாவோ, அமமுகவோ பலன் அடைந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தது. முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பன்னீரை முனுசாமி சமாதானப்படுத்திவிட்டார்.

6ஆம் தேதி முழுவதும் வழிகாட்டும் குழுவில் இடம்பெறும் 11 பேர் கொண்ட பட்டியல் தயாரிப்பது தொடர்பாகவும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. முதல்வர் கொடுத்த பட்டியலில் எட்டு பேர் கொங்கு கவுண்டர்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். அதில் அமைச்சர்களும் இருந்திருக்கிறார்கள். ஓ.பன்னீர் இந்தப் பட்டியலைப் பார்த்துவிட்டு, ‘நானே செயற்குழுவில் பத்து அமைச்சர்கள் என்னோடு பதவியை ராஜினாமா பண்ணிவிட்டு கட்சி வேலை பாக்க வாங்கனுதானே சொன்னேன். இந்த குழுவில் இருப்பவர்கள் அமைச்சர்களாக இருந்தால் சரிவராது. அமைச்சர்கள் கட்சி வேலையெல்லாம் முழுதாகப் பார்க்க முடியாது. எனவே கட்சி வேலை பார்க்கிற வகையில் அமைச்சராக இல்லாதவர்களைப் போடுங்கள். அல்லது அமைச்சர்கள் பதவி விலகிட்டு இந்த குழுவுக்கு வாருங்கள்’ என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார்.

அதன்பின் வேலுமணி பன்னீரிடம் பேசும்போது, ‘அமைச்சர்கள் இப்ப மாவட்டச் செயலாளர்களாகவும் இருக்கோம். அப்ப மாவட்டத்துல கட்சிப் பணியாற்ற முடியலையா? இந்தப் பணியையும் சிறப்பாகச் செய்வார்கள்’ என்று சொல்லி அமைச்சர்கள் கட்சிப் பணியாற்றுவதில் இருக்கும் வசதிகளையும் எடுத்துக் கூறியிருக்கிறார். அதன் பிறகே பன்னீர் சம்மதித்திருக்கிறார்.

அதன்பின் பன்னீரும், எடப்பாடியும் வழிகாட்டும் குழுவின் பட்டியலை மாறி மாறி திருத்தி 7ஆம் தேதி அதிகாலை 3 மணியளவுக்கு பட்டியல் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த பட்டியல் பரிமாற்ற தூதுவர்களாகச் செயல்பட்டது முனுசாமியும், வேலுமணியும்தான். இரு தரப்பினரையும் சந்தித்து இவர்களும் தங்களுக்குள் அமர்ந்து விவாதித்து அதன் பிறகே பட்டியல் தயாராகிவிட்டது. சுமார் நான்கு மணி நேர உறக்கத்துக்குப் பிறகு காலை அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் வந்துவிட்டார்கள்.

எனவே இப்போதைக்கு எடப்பாடிக்கும், பன்னீருக்கும் ஏற்பட்டுள்ள உடன்பாட்டுக்குக் காரணம் அவர்கள் என்பதைவிட பன்னீர் சார்பாக கே.பி.முனுசாமியும், எடப்பாடி சார்பாக எஸ்.பி.வேலுமணியும் மேற்கொண்ட முயற்சிகளும் முனுசாமிக்கும், வேலுமணிக்கும் இடையே இருந்த ஒற்றைப் புரிந்துணர்வும்தான்” என்கிறார்கள் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள்.

**-ஆரா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *