சென்னையில் சர்வதேச தரத்தில் வடிவமைப்பு நிலையம்!

Published On:

| By admin

ரூ.10 கோடி செலவில், சர்வதேச தரத்தில் சென்னையில் வடிவமைப்பு மையம் அமைக்கப்படும் என்று கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் காந்தி அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் துறை ரீதியான அறிவிப்புகளை அமைச்சர் காந்தி வெளியிட்டார்.

அதில், மத்திய , மாநில அரசுகளின் நிதியுதவியுடனும், தனியாருடனும் இணைந்து ரூ.10 கோடி செலவில் சென்னையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் சர்வதேச தரத்தில் வடிவமைப்பு நிலையம் உருவாக்கப்படும்.

தேசிய கைத்தறி வளர்ச்சி திட்டத்தின் கீழ் 6 புதிய வட்டார நிலை குழுமங்களில் உள்ள 1,377 கைத்தறி நெசவாளர்களுக்குத் தறிகள் உபகரணங்கள் மற்றும் தறிக்கூடங்கள் ரூ.1.58 கோடி மதிப்பில் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள கைத்தறிகள் மற்றும் விசைத்தறிகளைக் கணக்கெடுப்பு செய்து புவிசார் மூலம் அடையாளப்படுத்தப்படும். இத்திட்டம் ரூ.10 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு சரிகை ஆலையின் உள்கட்டமைப்புகள் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டு உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும்.

சென்னையில் ஜவுளி நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் விரிவான செயல்திட்டம் ரூ.1 கோடியில் தயாரிக்கப்படும்.

கைத்தறி ஆடைகளின் விற்பனையை அதிகரிக்க ஏதுவாக சென்னை மற்றும் பெங்களூரில் நிஃப்ட் எனப்படும் தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து ரூ.50 லட்சம் செலவில் 500 புதிய வடிவமைப்புகள் உருவாக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share