}இல்லம் தேடி கல்வி திட்டம் அவசியமா? : விஜயகாந்த்

politics

கொரோனாவால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்ட நிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. ஆனால் இந்த திட்டத்துக்குத் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி எதிர்ப்புத் தெரிவித்தார்.

‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நுழையவே வழிவகுக்கும் என்று அவர் கூறியிருந்தார்.

இதற்கு விளக்கமளிக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “ இத்திட்டம் குறித்து ஊடகங்கள் வாயிலாக சில மாற்றுக் கருத்துகள் அரசின் கவனத்திற்குத் வந்தது. அவற்றை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. இத்திட்டத்துக்காகத் தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் முறை, அவர்களுடைய பங்களிப்பு, அவர்களால் கற்பிக்கப்படும் மாணவ மாணவியரின் கற்றல் மேம்பாடு ஆகியவை தொடர்ந்து கல்வியாளர்கள் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும். அரசின் வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே தன்னார்வலர்களாகத் தொடர அனுமதிக்கப்படுவர். ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை. மாநில அளவிலான கல்விக் கொள்கையினை வகுத்திடக் கல்வியாளர் அடங்கிய குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும்” என்று கூறியிருந்தார்.

இந்த சூழலில் இல்லம் தேடி கல்வித் திட்டம் அவசியமா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ” பள்ளிகள் முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ள நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டம் தற்போது அவசியமா? எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் இந்த திட்டம் மக்களிடையே பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தை முழுக்க முழுக்க தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாது.

எனவே இல்லம் தேடி கல்வித் திட்டம் அவசியமா? எனத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து அவர், நவம்பர் 1 ஆம் தேதி “தமிழ்நாடு நாள்” என அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தற்போது ஜூலை 18ஆம் தேதி கொண்டாடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருப்பது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் தமிழக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாமல் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் தேதியை மாற்றுவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. எனவே மக்கள் பிரச்சனைகளுக்குத் தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *