வேலைவாய்ப்பை உறுதி செய்யும் புதிய ஐடிஐ பாடத்திட்டம்: அமைச்சர் கணேசன்

Published On:

| By Balaji

அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுப்பதே அரசின் கனவு என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று (அக்டோபர் 21) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.பி.கணேசன் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கணேசன், “பத்தாண்டு காலமாக தொழிற்பயிற்சி நிலையங்கள் எந்தவித கவனிப்பும் இல்லாமல், பார்வையிடாமல் இருந்தவண்ணமே இருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 90 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மொத்தமே 25,000 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். இதுவரை 30 நிலையங்களை ஆய்வு செய்து இருக்கிறேன். மதுரை, சென்னை அம்பத்தூர்,செங்கல்பட்டு ஆகிய தொழிற்பயிற்சி மையங்களில் மட்டுமே மாணவர்கள் அதிகளவில் படிக்கின்றனர். ஒவ்வொரு ஐடிஐயிலும் குறைந்தபட்சம் 1,000 மாணவர்களாவது படிக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். அதன் அடிப்படையில் ஆண்டுக்கு 1 லட்சம் மாணவர்கள் ஐடிஐயில் கல்வி பெற்றால் அந்த மாணவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு அரசுத் துறையிலோ அல்லது தனியார் துறையிலோ மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பதுதான் முதல்வரின் கனவு.

இந்தாண்டு புதிதாக திறன் மேம்பாட்டு என்ற துறையை உருவாக்கி, படித்த மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளித்து, அவர்களைத் தகுதிப்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஒவ்வொரு ஐடிஐக்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறோம்.

ஆண்டிப்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அதிகமான பெண்கள் ஆர்வமுடன் டெக்ஸ்டைல்ஸ் தொடர்பான பயிற்சி பெற்று வருகின்றனர். அதேபோல் எந்தெந்த இடங்களில், எந்தெந்த பயிற்சிக்கு (டிரேடு) அதிக முக்கியத்துவம் இருக்கின்றதோ, மாணவர்கள் எந்த பயிற்சியில் சேர்ந்து படிக்க ஆர்வமாக இருக்கின்றார்களோ அவற்றை புதியதாகக் கொண்டுவர வேண்டும். தற்காலத்துக்கு ஏற்றவாறு புதிய பயிற்சிகள் உருவாக்கப்படும். 50, 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்களைக் கண்டறிந்து புனரமைக்கப்படும். ஐடிஐ படிக்கும் மாணவர்களுக்கு வேலை என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தற்போது ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் மாணவர்கள் இன்ஜினீயரிங் படித்து வெளியே வருகின்றனர். ஆனால், அவர்களைவிட ஐடிஐ படிக்கும் மாணவர்களுக்கே வேலைவாய்ப்பு அதிகம்.

அனைத்து தொழில்பயிற்சி நிலையங்களிலும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தும் வகையில் அனைத்து தொழில் இயக்குநர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். மதுரை தொழிற்பயிற்சி நிலையத்தில் 460 மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைக்குச் சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய கட்டட வசதிகள், புதிய இயந்திரங்களை வாங்குவது, புதிய வகுப்புகள் தொடங்குவது உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share