p10,11,12 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு எப்போது?

politics

பத்தாம், பதினோராம், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதி அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால், இந்தாண்டு பொதுத் தேர்வு கட்டாயமாக, பாதுகாப்பான முறையில் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவ்வப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி வந்தார்.

இந்த நிலையில் இன்று(மார்ச் 2) சென்னை டிபிஐ வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “கொரோனா காரணமாக கடந்த காலங்களில் பொதுத் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், இந்தாண்டு 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். அதன்படி, இன்று பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது.

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதிவரை செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும். இதை 9 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வை 8.49 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மே 5ஆம் தேதி முதல் மே 28ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வை 8.36 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 17ஆம் தேதியும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 7ஆம் தேதியும், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் விவரங்கள் தற்காலிகமானதுதான். அதற்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியிடவும் வாய்ப்பு உள்ளது. எந்தெந்த பாடத்திற்கு எந்தத் தேதியில் தேர்வு நடைபெறும் என்பது குறித்த விரிவான அட்டவணை விரைவில் வெளியாகும்” என்று கூறினார்.

மற்ற மாணவர்களுக்கான வகுப்புகள் குறித்து பேசிய அவர், “1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13 வரையில் பள்ளிகள் செயல்படும். 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் மே 13 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்.

தேர்வு விடுமுறை முடிந்த பிறகு, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், 12ஆம் மாணவர்களுக்கான வழக்கமான வகுப்புகள் ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்கப்படும். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழக்கமான வகுப்பு ஜூன் 24 ஆம் தேதி முதல் தொடங்கப்படும்.

தேர்வு தேதி அறிவித்த உடனே அனைவருக்கும் தேர்வு காய்ச்சல் வந்துவிடும் என்று சொல்வார்கள். அப்படி மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். தைரியமாகவும், மகிழ்ச்சியாகவும் தேர்வுக்கு படிங்கள். அனைவரும் நல்லமுறையில் தேர்வு எழுத என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

வினாத்தாள் கசிவை தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிவை நாங்கள் சாதாரணமாக கடந்து செல்லவில்லை. இது அஜாக்கிரதை காரணமாக நடந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேலும், இதுபோன்ற தவறுகள் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுத் தேர்வு வினாத்தாள்களும், தேர்வு நடைபெறும் அன்று காலையில் பள்ளிகளுக்கு விநியோகிக்க முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *