வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தனது அண்ணன் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று (மே 8) சந்தித்து நலம் விசாரித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் துரை தயாநிதி அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு, மேஜர் ஆபரேஷன் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 14-ஆம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் துரை தயாநிதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக வேலூர் வந்த முதல்வர் ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் துரை தயாநிதியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அழகிரியிடம் துரை தயாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிலையில் இன்று (மே 8) திடீரென முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் துரைமுருகன், தனது மாப்பிள்ளை சபரீசன் ஆகியோருடன் சிஎம்சி சென்று துரை தயாநிதியின் உடல் நலம் விசாரித்திருக்கிறார்.
இதுகுறித்து வேலூர் திமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.
“மிக சமீபத்தில் ஸ்டாலினின் சகோதரியான செல்வி வேலூர் சிஎம்சி சென்று அங்கு அட்மிட் செய்யப்பட்டுள்ள துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். இதுகுறித்து ஸ்டாலினுக்கு போன் போட்ட செல்வி, ‘போன முறை வந்து பார்த்தப்ப இருந்ததை விட இப்ப துரை தயாநிதி ஹெல்த் பெட்டரா இருக்கு. பிசியோதெரபி கொடுத்துக்கிட்டிருக்காங்க’ என சொல்லியுள்ளார். இதையடுத்து ஸ்டாலினும் அவரது அண்ணன் அழகிரியிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இதைத் தொடர்ந்து உடனடியாக வேலூர் விரைந்த ஸ்டாலின், சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏ பிளாக்கில் துரை தயாநிதியை சந்தித்து உடல் நலன் குறித்து விசாரித்தார். சுமார் அரைமணிநேரம் மருத்துவமனையில் இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் அதன் பின் சென்னை திரும்பினார். பிசியோ தெரபியை அடுத்து துரை தயாநிதிக்கு பேச்சு தெரபி கொடுக்க இருக்கிறோம் என்று மருத்துவர்கள் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்” என்கிறார்கள்.
வேந்தன், செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சவுக்கு சங்கர் உடல்நிலை : அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
தென்னிந்தியர்கள் கருப்பர்கள்: சர்ச்சையை கிளப்பிய சாம் பிட்ரோடா ராஜிமானா!