காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் ஒற்றுமை நடைபயணத்தில் இன்று (டிசம்பர் 23) நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெறவும் ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தமிழகத்தில் துவங்கினார்.
தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா,மகாராஷ்டிரா,ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட அவர் தற்போது ஹரியானாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
ராகுல் காந்தியின் நடைபயணத்தில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர், நடிகை ஸ்வரா பாஸ்கர், தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகை ரியா சென் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை தனது தொண்டர்களுடன் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
அந்தவகையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி இன்று ராகுல் காந்தியுடன் ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொண்டார்.
இன்று காலை ஹரியானா மாநிலம் கெர்லி லாலா பகுதியில் நடைபயணத்தை துவங்கிய ராகுல் காந்தியுடன் ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நடைபயணமானது, ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பாகல், பாலி செளக், கோபால் கார்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று முடிவடைய உள்ளது.
இன்றுடன் ஹரியானா மாநிலத்தில் நடைபயணத்தை நிறைவு செய்யும் ராகுல் காந்தி, நாளை முதல் தலைநகர் டெல்லியில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
செல்வம்
காலை சிற்றுண்டி திட்டம்: விசிட் அடித்த உதயநிதி
கலைஞர் வரலாறு – திராவிடமும் சமூக மாற்றமும் புத்தக வெளியீட்டு விழா!