நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர்கள் தங்கம், தென்னரசு, கே,கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் விடுவித்ததை எதிர்த்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெறவுள்ளது.
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான மறு ஆய்வு வழக்குகளில் பிப்ரவரி 5 முதல் 9 வரை தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெறும்.
ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 12,13 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெறும்.
பொன்முடிக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை விசாரணை நடைபெறும் என்று நீதிபதி ஆனந்த் வெஙக்டேஷ் தெரிவித்தார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் விளக்கத்தை பதில் மனுவாகவோ, எழுத்துப்பூர்வமான வாதமாகவோ ஜனவரி 30க்குள் தாக்கல் செய்யலாம் என்று அறிவித்தார்.
இந்தசூழலில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் கோரியுள்ளனர்.
அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தமிழ்நாடு பாஜக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே திமுக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகள் தொடர்பான சட்ட நெருக்கடி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது வீட்டில் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
இந்த வழக்குகளை சட்ட ரீதியாக எவ்வாறு எதிர்கொள்வது, சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சர்களும் தனித்தனியாக உச்ச நீதிமன்றம் செல்லலாமா என்று திமுக மேலிடம் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தது.
இந்தசூழலில் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
முன்னதாக பொன்முடியும் தனக்கு எதிரான சூமோட்டோ வழக்கிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா