நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் விவகாரத்தில், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று இதுவரை வெளிவராத அப்டேட்களை மின்னம்பலம் தொடர்ச்சியாக Exclusive ஆக வாசக நேயர்களுக்குக் கொடுத்து வருகிறோம்.
விசாரணையை தீவிரமடையாமல் பார்த்துக்கொள்வதற்காக நயினார் நாகேந்திரன் தரப்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கமான சிலரை அணுகி சமரசத்திற்கு முயற்சித்து வருவதை ’4 கோடி விவகாரம்…நயினார் விட்ட தூது’ என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம்.
மேலும் இந்த விவகாரத்தில்… பாஜக தொழிற்பிரிவுத் தலைவர் கோவர்த்தனன் மற்றும் அவரது டிரைவர் கணேஷ் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதில் தெரியவந்த தகவல்களை ‘பாஜகவின் 200 கோடி நெட்வொர்க்…நயினாரின் 4 கோடி விவகாரம்…அம்பலமாகும் வாக்குமூலம்!’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.
இந்த வழக்கில் தொடர் நடவடிக்கைகளில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக இறங்கி வருகிறார்கள். மே 4 ஆம் தேதி சனிக்கிழமை அன்று கோவர்த்தனனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், நேற்று (மே 7) மீண்டும் அவரது வீடு, அலுவலகம் என ரெய்டு நடத்தியுள்ளனர்.

சிபிசிஐடி போலீசார் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் வட்டத்தில் இந்த விசாரணை தொடர்பாக பேசினோம். “கோவர்த்தனன் வீட்டில் ரெய்டு நடத்தியதற்குப் பிறகு அடுத்தகட்டமாக இந்த வழக்கு நகரவில்லையே, இன்னும் அவரிடம் மட்டுமே விசாரணை நடக்கிறதே?” என்று கேட்டோம்.
இந்த வழக்கின் விசாரணையில் என்ன சிக்கல் இருக்கிறது என்பதைப் பற்றி பல தகவல்களை அவர்கள் தெரிவித்தனர்.
“மொத்தமாக மாட்டிய 4 கோடி ரூபாய் பணத்தில் 1 கோடி ரூபாய் எங்கே இருந்து வந்தது என்று தெரிந்துவிட்டது. மீதி 3 கோடி ரூபாய் எங்கே இருந்து வந்தது என்பதில் இன்னும் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. கோவர்த்தனன் ஆபீஸ்ல ரெய்டு நடத்தி அவரோட டிரைவர் கணேஷை விசாரிச்சதுல, அவர் சொன்ன தகவல்கள் சரியாகத் தான் இருக்கு. ஏப்ரல் 4 ஆம் தேதி இரண்டு பண்டல்களில் பணத்தை புளியந்தோப்பு மற்றும் எலிஃபேண்ட் கேட் பகுதிகளில் இருந்து வாங்கி வந்ததாகவும், அதில் ஒரு பண்டலை அவருக்கு தெரிந்த மார்வாடி ஒருவரிடம் கொடுத்துவிட்டு வந்ததாகவும் சொன்னார். இதை நாங்க பல இடங்கள்ல மறுபடியும் செக் பண்ணி வெரிஃபை பண்ணிட்டோம்.
அந்த இரண்டு பண்டல்களில் ஒரு பண்டலில் 65 லட்சமும், இன்னொரு பண்டலில் 35 லட்சமும் என ஒரு கோடி ரூபாய் இருந்திருக்கிறது. ஏப்ரல் 4 ஆம் தேதி கணேஷ் வாங்கி வந்த அந்த பணத்தை ஏப்ரல் 6 ஆம் தேதி நயினாரின் ஹோட்டல் ஊழியர் சதிஷீடம் கொடுத்து விட்டிருக்கிறார்கள். ஏப்ரல் 4 ஆம் தேதியே பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கோவர்த்தனனுக்கு சொந்தமான பில்டிங்கிற்கு ஆட்டோவில் வந்திறங்கி, டிரைவர் கணேஷிடம் பணம் வாங்கி வந்த விவரங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
அதன்பிறகு ஏப்ரல் 6 ஆம் தேதி எஸ்.ஆர்.சேகர் மற்றும் பாஜக அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் இருவரும் அங்கு வந்து பணத்தை நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷிடம் கொடுத்திருக்கிறார்கள்” என்று காவல்துறை உயர் அதிகாரிகள் சொல்கிறார்கள்.
மேலும், “கோவர்த்தனனின் டிரைவர் கணேஷ் நான் ஒரு கோடி ரூபாய் தான் வாங்கி வந்தேன். மீதி பணத்தைப் பற்றி எனக்கு தெரியாது என்கிறார். நாங்களும் எங்களோட ஸ்டைலில் எவ்வளவோ விசாரித்து பார்த்துட்டோம். அவர் எனக்கு தெரியாது என்பதைத் தான் சொல்கிறார்.
எனவே திரும்பவும் ஏதாவது கிடைக்கிறதா என பார்ப்பதற்காக கோவர்த்தனன் வீடு மற்றும் அலுவலகத்தில் ரெய்டு நடத்தினோம். ஆனால் அந்த ரெய்டில் எதுவும் கிடைக்கவில்லை” என்கிறார்கள்.
(கோவர்த்தனன் வீட்டில் காவல்துறை சோதனையின் போது எதுவும் கிடைக்கவில்லை என்று காவல்துறை கொடுத்துள்ள அறிக்கை இங்கே இணைக்கப்பட்டுள்ளது)
“அடுத்த கட்டமா எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகம், நயினார் நாகேந்திரன் 3 பேரையும் விசாரிக்கணும். ஆனா அப்படி செய்றதுக்கு இன்னும் எங்களுக்கு முதல்வர் தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கல. ஒருவேளை தேர்தல் ரிசல்ட்டுக்காக ஜூன் 4 ஆம் தேதி வரை காத்திருக்கிறார்களா என தெரியவில்லை. ரிசல்ட் எப்படி வருகிறது என்பதைப் பொறுத்து விசாரணைக்கு அனுமதி கொடுக்கப்படுமோ என்னவோ?” என்ற கேள்வியுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் நிற்கின்றனர்.
நயினார் தரப்பைப் பொறுத்தவரை, ”நாங்க பல இடங்களில் அப்ரோச் செய்திருக்கிறோம், முதல்வரை நெருங்கிவிட்டோம், அதனால் எங்களுக்கு இந்த விவகாரத்தில் சிக்கல் இருக்காது” என்கிறார்கள்.
நயினாரின் கோரிக்கையை முதல்வர் ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பதைப் பொறுத்துத்தான் அடுத்து இந்த வழக்கில் என்ன நடக்கும் என்பது தெரியவரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
4 கோடி விவகாரம்… நயினார் விட்ட தூது!
பாஜகவின் 200 கோடி நெட்வொர்க்…நயினாரின் 4 கோடி விவகாரம்…அம்பலமாகும் வாக்குமூலம்!
”நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் முன் இதை செய்யுங்கள்” : சாய்னா நேவாலுக்கு அமைச்சர் பதில்!