அரசு பள்ளி மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் ஜூலை மாதம் முதல் துவங்கப்படும் என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (மே 8) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்லூரி கனவு 2024 என்ற நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம், பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சிவ்தாஸ் மீனா, “நானும் அரசு பள்ளி மாணவர் என்பதால் பெருமைப்படுகிறேன். பசியோடு இருப்பவனுக்கு முதலில் உணவு கொடு. பின்னர் போதனை செய் என்பதன் அடிப்படையில் காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு பெரும் பயனளித்திருக்கிறது. கல்வி என்பது உண்மையான முதலீடு. அதை யாரும் திருட முடியாது” என்று பேசினார்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிவ்தாஸ் மீனா, “தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வி ஆண்டான ஜூலை மாதம் முதல் துவங்கப்படும். தேசிய அளவில் கிராஸ் என்ரோல்மெண்ட் ரேஷியோவில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவர்களையும் மருத்துவம், பொறியியல், கலைக்கல்லூரி போன்ற உயர்கல்வியில் கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்பதற்காக தான் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? ஆளுநர் நடத்திய முக்கிய ஆலோசனை!
தென்னிந்தியர்கள் கருப்பர்கள்: சர்ச்சையை கிளப்பிய சாம் பிட்ரோடா ராஜிமானா!