சூரன்குடி கிராம உதவியாளர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருந்தால் ரத்து செய்ய நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் தலையாரி எனப்படும் கிராம உதவியாளர் தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் மாவட்ட வாரியாக வெளியாகி வரும் நிலையில், பணம் வாங்கிக் கொண்டு மெரிட் லிஸ்ட்டில் இல்லாதவர்களுக்கு நியமனஆணை வழங்கப்பட்டு வருவதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், கன்னிமார் கோட்டம் பகுதியைச் சேர்ந்த முத்துமாரி அம்மாள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கிராம உதவியாளர் தேர்வு தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். என் கணவரை 2014ல் இழந்துவிட்டேன். விளாத்திகுளம் பகுதியில் 17கிராம உதவியாளர் பதவிக்கான தேர்வு நடத்தப்பட்டது.
இதில் சூரன்குடி பகுதி கிராம உதவியாளர் பணி பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் எம்.பி.சி வகுப்பைச் சேர்ந்த அருண்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நான் சூரன்குடி கிராமத்திலிருந்து 6கி.மீ தொலைவில் வசிக்கிறேன். அருண்குமார் 35கிமீ தொலைவில் வசிக்கிறார். தலையாரி தேர்வில் உள்ளூர் தேர்வர்களைத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது விதி. ஆகவே சட்ட விரோதமாக அருண்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எனவே முறைகேடாகத் தேர்வு செய்யப்பட்டவரின் பணி நியமனத்தைத் ரத்துசெய்ய வேண்டும். சூரன்குடி கிராம உதவியாளராக என்னைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று(பிப்ரவரி 23) விசாரணைக்கு வந்தது.
அப்போது, சூரன்குடி கிராம உதவியாளர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்பட்டதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி இதுகுறித்து ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மேலும் இந்த பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருந்தால் சூரன்குடி கிராம உதவியாளர் பணி நியமனத்தை ரத்துசெய்ய நேரிடும் என்று எச்சரித்து வழக்கு விசாரணையை 2வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.
பிரியா
பிஎஸ்என்எல் டூ ஜியோ: 38 ஆயிரம் இணைப்புகளை மாற்றிய கர்நாடகா காவல்துறை!