கிட்டத்தட்ட எல்லோருக்குமே திடீரென உடலின் ஒரு பகுதி வீங்கிப்போன அனுபவம் ஏதோ ஒரு கட்டத்தில் நிகழ்ந்திருக்கும். காலையில் தூங்கி எழுந்ததும் காணப்படுகிற முக வீக்கமாகட்டும், திடீரென ஊதிப் பெரிதான கால் வீக்கமாகட்டும்….
பெரும்பாலான நேரங்களில் தானாகவே சரியாகிவிடும் என்றாலும், வீக்கம் குறித்த பயம் பலருக்கும் இருப்பதையும் பார்க்கிறோம்.
காரணமே தெரியாமல் திடீரென ஏற்படுகிற வீக்கத்துக்குக் காரணம் என்ன? இதற்கு சிகிச்சைகள் அவசியமா? இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட்ஸ் என்ன சொல்கிறார்கள்?
”வீக்கம் என்பது பொதுவாக அழற்சி அல்லது நீர் கோப்பதன் விளைவாக ஏற்படக்கூடும். பூச்சிக்கடி, காயங்கள் போன்றவற்றின் விளைவாகவும் வீக்கம் ஏற்படலாம்.
இவை தவிர, மாதவிடாய், கர்ப்பம் போன்றவற்றாலும் உடலில் வீக்கம் தென்படலாம். வீக்கத்தில் ‘லோக்கலைஸ்டு’ (Localised) மற்றும் ‘வைட்ஸ்பிரெட்’ (Widespread) என இருவகை உண்டு.
லோக்கலைஸ்டு வகையில், குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் வீக்கம் இருக்கும். உதாரணத்துக்கு, கண்களில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டுள்ள நிலையில், கண்களைச் சுற்றி வீக்கம் காணப்படும்.
அதுவே அலர்ஜி உள்ளிட்ட காரணத்தால் ஏற்படும் வைட்ஸ்பிரெட் வகையில், உடல் முழுவதுமோ, பல இடங்களிலோ வீக்கம் தென்படலாம்.
பெரும்பாலான நேரங்களில் இன்ஃபெக்ஷன் காரணமாக வீக்கம் வரலாம். அப்படிப்பட்ட வீக்கத்தின் உள்ளே சீழ் கோத்திருந்தால் அதை வெளியேற்ற வேண்டும் அல்லது ஆன்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.
உடல் முழுவதும் வீங்கியிருந்தாலோ, கால்கள் முழுவதும் வீங்கியிருந்தாலோ, மருத்துவர்கள் சில காரணங்களைச் சந்தேகிப்பார்கள். அதாவது இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் போன்றவற்றில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளனவா என்ற கோணத்தில் பரிசோதிப்பார்கள்.
இதுபோன்ற பிரச்சினைகளில் உடல் முழுவதும் நீர்கோப்பது நடக்கும். அனீமியா எனப்படும் ரத்தச்சோகை, தைராய்டு பாதிப்புகளாலும் இவ்வகை வீக்கம் வரலாம்.
வெறும் வீக்கம் மட்டும் தென்படுகிறதா, கூடவே மூச்சு வாங்குதல், நெஞ்சு படபடத்தல் போன்றவையும் இருக்கின்றனவா என கேட்கப்படும். அப்படி இருக்கும்பட்சத்தில் ஹீமோகுளோபின் அளவு, தைராய்டு அளவுகளுக்கான ரத்தப் பரிசோதனையும், இதயத்துக்கான இசிஜி பரிசோதனையும் பரிந்துரைக்கப்படும்.
அடுத்து, வீக்கத்துக்கான காரணம், அதன் தன்மையைப் பொறுத்தே சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும். அதன்படி, சாதாரண ஆன்டிபயாடிக் மருந்துகள் முதல் அறுவை சிகிச்சை வரை சிகிச்சை எப்படியும் இருக்கலாம். உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு போன்றவற்றின் காரணமாக ஏற்பட்ட வீக்கமாக இருந்தால், நோய்க்கான பிரத்யேக சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். அவற்றை முறையாகப் பின்பற்றுவதுடன், வாழ்வியல் முறை மாற்றங்களையும் கடைப்பிடித்தாலே வீக்கத்திலிருந்து விடுபடலாம்” என்று விளக்கமளிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாகிஸ்தானில் நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா?
கிச்சன் கீர்த்தனா : காளான் பாஸ்தா