‘மனிதநேயம்’ மாணவன் கலாமுக்கு புதிய வீடு!

politics

மனிதநேயம் குறித்து பேசிய மாணவர் அப்துல்கலாமுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் அப்துல்கலாம், சமீபத்தில் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், “யாரையும் பிடிக்காதுன்னு முதல்ல சொல்லாதீங்க, என்னையும் எல்லாரும் பல்லன்னு தான் கூப்டுவாங்க. நான் ஏன் எல்லாரையும் பிடிக்காதுன்னு சொல்லணும்? எல்லாரும் நண்பர்கள் மாதிரிதான். ஒற்றுமை இல்லாத நாடு எதுக்கு இருக்கணும். நம்ம நாடு ஒற்றுமையான நாடுனு சொல்றோம், ஒற்றுமை இல்லாம இருந்தா எப்படி? சாதி மத கலவரம் நமக்கு எதுக்கு. நமக்கு முன்னாடி இருந்தவங்க எல்லாம் சாதி மதம்னு சொல்லி தந்துட்டாங்க. அதனாலதான் சாதி பத்தி இப்போ வரைக்கும் பேசிட்டு இருக்கோம். அனைவரிடமும் மனித நேயம் இருக்கணும்” என்று பேசியிருந்தார். இந்த பேட்டியை பார்த்த பலரும் மாணவனுக்கு பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.

இந்த பேட்டியைத் தொடர்ந்து, தங்களை உடனே வீட்டை காலி செய்யச் சொல்லி வீட்டின் உரிமையாளர் நிர்பந்திப்பதாக கலாமின் அம்மா சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில், “எங்கள் வீட்டின் உரிமையாளர் உடனே எங்களை வீட்டை காலி செய்யும்படி நிர்பந்திக்கிறார். எங்களுக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. இந்த பையன் பேசுனது தப்பா? எதுவும் தப்பா பேசிட்டானா?. அவனுக்கு தோன்றத பேசிருக்கான். இதில் என்ன இருக்கு” என்று கண்ணீருடன் பேசும் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்துல் கலாம் மற்றும் அவரது பெற்றோர்களை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது தாங்கள் வறுமை நிலையில், வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். தற்போது திடீரென்று வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி வலியுறுத்துகின்றனர். அதனால், அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என அப்துல் கலாமின் பெற்றோர் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்ற முதல்வர், உடனடியாக அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க அத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு உத்தரவிட்டார்.

இன்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் ட்விட்டரில்,”முதல்வர் உத்தரவின் பேரில் இன்று காலை மாணவர் அப்துல் கலாமின் பெற்றோரை நேரில் அழைத்து அவர்களுக்கு எந்த திட்டப் பகுதியில் வீடு ஒதுக்க வேண்டும் என்று கேட்டறிந்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு அவருக்கு ஒதுக்கீட்டு ஆணையை விரைவாக தயார் செய்யும் படி கேட்டுக்கொண்டேன்.

நாளைக்குள் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கப்படும். பின்னர் யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் என்று உரக்கச் சொன்ன மாணவர் ஏ.அப்துல்கலாமை பாராட்டி அவருக்கு “பெரியார் இன்றும் என்றும்” நூலினை பரிசாக வழங்கினேன்” என்று தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *