பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட திட்டம் வகுத்து வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 10, பாஜக 6, திமுக 6, காங்கிரஸ் 2, சுயேச்சை 6 எம்.எல் ஏ.ககள் பேர் உள்ளனர். பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 மற்றும் 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில் மூன்று எம்.எல்.ஏ.ககள் என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவாகவும், மூன்று எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்து முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்று ஒருவருடம் நிறைவு பெறப் போகிறது. ஆனால் இதுவரையில் முதல்வர் ரங்கசாமி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கவில்லை என்று பாஜக தரப்பில் கூறுகிறார்கள்.
இந்நிலையில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடத் திட்டங்களை வகுத்து வருகிறது என்கிறார்கள் புதுச்சேரி அரசியல் பார்வையாளர்கள்.
“ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் துவங்கியபோது மாநில தலைவர், துணைத் தலைவர், பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளரை நியமித்ததுடன் சரி, இதுவரையில் உறுப்பினர்கள் சேர்க்கைக்காக உறுப்பினர் அட்டைகள் வழங்கவில்லை, கிளை, ஒன்றியம், நகரம், மாவட்டம், அணி பொறுப்பாளர்கள் என எந்தவிதமான கட்டமைப்பும் இல்லாமல் இருந்துவருகிறார் ரங்கசாமி. ஏன் பொதுச் செயலாளராக இருந்த பாலன் மறைந்துவிட்ட நிலையில், அந்த பதவியை இதுவரையில் நிரப்ப முடியாமல் இருந்து வருகிறார்.
ஆனால் பாஜக அப்படி இல்லை, புதுச்சேரி மாநிலம் முழுவதும் கிளை, வார்டு, ஒன்றியம் (கொம்பயான்), மாவட்டம், மாநிலம், அணி பிரிவுகள் என அனைத்து பொறுப்புகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து, தேர்தலைச் சந்திக்க அனைத்து விதமான கட்டமைப்பு வேலைகளையும் தயார் நிலையில் வைத்துள்ளார்கள்.
நேற்று முன் தினம் ஏப்ரல் 14ஆம் தேதி சட்டமன்றம் எதிரில் அம்பேத்கர் சிலைக்கு அனைத்து கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது விசிகவினர் சுமார் 50 பேர் அளவில் குறைவாகத்தான் வந்து மரியாதை செலுத்திவிட்டுப் போனார்கள். மற்ற கட்சியினரும் குறைந்த அளவுக்குத் தான் கூட்டத்தை அழைத்து வந்தனர். ஆனால், பாஜக எஸ்சி/எஸ்டி புதுச்சேரி மாநில தலைவர் தமிழ் மாறன், அணைத்து கட்சியினரையும் ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு அதிகளவில் கூட்டத்தைக் கூட்டி ஊர்வலமாகச் சென்று மாலை மரியாதையைச் செலுத்தியது உள்ளாட்சித் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டம்தான்” என பாஜக தரப்பில் கூறுகிறார்கள்.
**-வணங்காமுடி**