நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விவேக் மறைவையொட்டி நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தடுப்பூசி போடுமாறு மக்களை ஏன் கட்டாயப்படுத்துகிறார்கள்? அப்படி அந்த தடுப்பூசியில் என்ன இருக்கிறது? அதில் என்ன கன்டென்ட் இருக்கிறது? நல்லா இருந்த மனுஷன் விவேக் ஏன் செத்துப் போனார்? நான் தெருக்களில் தூங்கினேன், பிச்சைக்காரர்களுடன் உணவைப் பகிர்ந்து கொண்டேன், நான் வைரஸால் பாதிக்கப்படவில்லை. முகக் கவசங்களை கட்டாயமாக்க வேண்டாம்”என பேசினார். இதுசம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
மன்சூர் அலிகான் பேச்சு அரசின் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் மக்கள் நலப் பணிக்கு எதிராக இருப்பதாக சென்னை மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சென்னை வடபழனி போலீசார் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார். முதல் முறை அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இரண்டாம் முறையாக மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று(ஏப்ரல் 29) நீதிபதி தண்டபாணி விசாரித்தார். அப்போது, தடுப்பூசி குறித்து புரளி பரப்பக் கூடாது. பதற்ற நிலையை உருவாக்கக் கூடாது. அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து அவருக்கு முன்ஜாமீன் வழங்க உத்தரவிட்ட நீதிபதி, தடுப்பூசி வாங்குவதற்காக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பெயரில் ரூ.2 லட்சம் டிடியாக வழங்க வேண்டும் என மன்சூர் அலிகானுக்கு உத்தரவிட்டார்.
**வினிதா**
.�,