அகவிலைப்படி -என்ன ஏமாற்று வேலை?: அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

politics

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியைக் கூட ஒழுங்காகத் தர இயலாத திறமையற்ற அரசாக திமுக அரசு உள்ளது என ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சென்னையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் கடந்த பத்தாண்டுக் காலத்தில் அதிமுக கஜானாவை காலி செய்து சென்றுவிட்டது. தற்போது தமிழகம் ரூ.5 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. நாம் அனைவரும் சேர்ந்துதான் கஜானாவை நிரப்ப வேண்டும். நிதிநிலை சீரானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்குப் பதிலளிக்கும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையெல்லாம் நிறைவேற்றுவதற்குக் கடன் வாங்கப்பட்டது என்பது உண்மைதான். நாங்கள் ஆட்சியை விட்டுச் செல்லும்போது, அதாவது 31-03-2021 நாளன்று 4 லட்சத்து 82 ஆயிரத்து 502 கோடி ரூபாய் கடன் இருந்தது என்பதும், இது 2021-22ஆம் ஆண்டில் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்பதும் தெளிவாக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் தெரிந்துகொண்டு தானே புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்” என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியைக் கூட ஒழுங்காகத் தர இயலாத திறமையற்ற அரசாக திமுக விளங்கிக் கொண்டிருக்கிறது. என்ன ஏமாற்று வேலை!

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 1988-ம் ஆண்டு போராட்டம் நடத்தியபோது, 70 ரூபாய் இடைக்கால நிவாரணம் ஆளுநர் ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்டது. 1989-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன.

அப்போது குறைந்தபட்ச ஊதிய உயர்வு வெறும் 100 ரூபாய்தான். ஆளுநர் ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்ட இடைக்கால நிவாரணமான 70 ரூபாயைக் கழித்துவிட்டால் நிகர ஊதிய உயர்வு வெறும் 30 ரூபாய்தான். அப்போது நடைபெற்ற அரசு ஊழியர்கள் மாநாட்டில் பேசிய அப்போதைய முதல்வர், “ஆளுநர் பேனா கொடுத்தார், அதை மூடிபோட்டு மூடினேன்” என்றார். அவர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், அதிமுக கொடுத்துச் சென்ற மூடியுடன் கூடிய பேனாவை முக்காலாக்கி விட்டார், அதாவது மூடியை எடுத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

கொரோனா காலகட்டத்தில், மத்திய, மாநில அரசுகளின் வருவாய் – கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஏற்ப, அரசு ஊழியர்களின் அகவிலைப்படியையும், ஈட்டிய விடுப்பிற்குப் பதில் ஊதியம் பெறும் உரிமையையும் ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், இப்போது அதைவிடப் பன்மடங்கு கூடுதல் வருமானம் வருகின்ற இந்தக் காலகட்டத்தில், மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியைக் கூட அளிக்கத் தயக்கம் காட்டுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், மாநிலப் பொருளாதாரத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில், மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களைக் கொண்ட “முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு” ஒன்று அமைக்கப்பட்டது. மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவிற்குத் துணைத் தலைவரையும், உறுப்பினர்களையும் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நியமித்தது. ஆனால், இந்தக் குழுக்களின் கூட்டங்கள் கூட்டப்பட்டதா என்பது குறித்தும், பரிந்துரைகள் அளிக்கப்பட்டதா என்பது குறித்தும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

கோவிட்-19 பெருந்தொற்று நோயின் தாக்கம் முடிந்தவுடன் தமிழகத்தின் கடன் சுமை தாமதமின்றி சரி செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தற்போது கோவிட்-19 பெருந்தொற்று கணிசமாகக் குறைந்து, பள்ளிகளெல்லாம் திறந்துள்ள சூழ்நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாவது ஆளுநர் உரை சமர்ப்பிப்பதற்கான தேதி குறிப்பிட்டுள்ள நிலையில், சீர்திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டனவா என்பது குறித்தும் தகவல் இல்லை.

தமிழக அரசின் வருவாயைப் பெருக்குவதிலோ, சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலோ, சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதிலோ எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுத்ததாகத் தெரியவில்லை. உண்மை நிலை இவ்வாறிருக்க, அதிமுக மீது வீண் பழி போடுவதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

மத்திய அரசிடமிருந்து நமக்கு வரவேண்டிய வருவாய் மற்றும் நிவாரணத்தைப் பொறுத்தவரையில், தொடர்புடைய மத்திய அமைச்சர்களுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வலியுறுத்துவதும், தேவையான அழுத்தத்தைக் கொடுப்பதும், திமுகவைச் சார்ந்த 34 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை டெல்லிக்கு அனுப்பி வற்புறுத்தச் சொல்வதும், அதன் வாயிலாக வருவாயைப் பெறுவதும்தான் நிர்வாகத் திறமைக்கு எடுத்துக்காட்டு. இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் திமுக அரசு கவனம் செலுத்தாமல் அதிமுகவைக் குறை சொல்வது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்குச் சமம்.

அதிமுக அரசு மூன்றாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்திருந்தால், திறமையோடு செயல்பட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை நிச்சயம் வழங்கியிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு ஊழியர்களின் நண்பன் யார் என்பதை இனிமேலாவது அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், ஓய்வூதியதாரர்களும் புரிந்து கொள்வார்கள் என்று கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *