�அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு நெஞ்சுவலி: ஆம்புலன்ஸ் மூலம் சென்னை வந்தார்!

Published On:

| By Balaji

அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் முண்டியம்பாக்கத்தில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். அவரது இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் சிலுவம்பாளையம் சென்று துக்கம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவும் எடப்பாடி பழனிசாமியிடம் துக்கம் விசாரிப்பதற்காக இன்று (அக்டோபர் 13) காலை சென்னையிலிருந்து சேலத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.

காலை 10 மணி அளவில் ‌விக்கிரவாண்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது அமைச்சர் துரைக்கண்ணு அசவுகரியமாக உணர்ந்துள்ளார். அவருக்கு திடீரென நெஞ்சுவலியும் ஏற்பட்டது. இதனையடுத்து, முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் அரசு மருத்துவக்கல்லூரிக்கு நேரில் சென்று அவரை நலம் விசாரித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர், அமைச்சர் இதய பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஆம்புலன்ஸில் அவரை சென்னை அனுப்பிவைத்துள்ளதாகவும் தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.

72 வயதாகும் அமைச்சர் துரைக்கண்ணு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2006, 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் பாபநாசம் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் வெற்றிபெற்ற இவர், 2016 ஆம் ஆண்டு முதல்முறையாக வேளாண் துறை அமைச்சராக பதவியேற்றார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share