பொதுத் தேர்வில் எந்த மாற்றமுமில்லை: அன்பில் மகேஷ்

politics

பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடக்காமல் போக வாய்ப்பே இல்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கணபதி அரசுப் பள்ளியில் நேற்று (டிசம்பர் 8) மலபார் கோல்டு அண்ட் டைமண்ட் நிறுவனம் சார்பில் அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் என நாற்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் 174 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு உதவித் தொகையை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “முதலில் சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் நடந்த பாலியல் தொல்லை வெளிவந்ததையடுத்து கிட்டதட்ட ஆறு ஏழு மாதங்களாக ஆங்காங்கே இந்த பிரச்சினை வெளியே வந்து கொண்டிருக்கிறது. இதுதொடர்பான விஷயங்களில் முதல்வரின் நடவடிக்கையால் மாணவிகளுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் வெளியில் புகார்களை தெரிவிக்கின்றனர். கரூரில் ஆசிரியர் ஒருவர் தவறான சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்தியதால் அவமானமாக இருப்பதாகக் கூறி தற்கொலை செய்துக் கொண்டார். இதுபோன்று ஆசிரியர்கள் யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. மாணவர்களும் முக்கியம், நேர்மையான ஆசிரியர்களும் முக்கியம் என்பதால் இந்த விஷயங்களை நிதானமாகவும், பொறுமையாகவும் கையாள வேண்டும். தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகளில் பார்வை குறைபாடு போன்ற உடல்ரீதியான பிரச்சினைகளுக்குத்தான் தற்போது மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களை உளவியல்ரீதியான மருத்துவர்களாக எப்படி மாற்றலாம் என ஆலோசித்து வருகிறோம். அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு, மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாலியல் வன்முறைக்கு எதிராக புகார் கொடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நவம்பர் 19 அன்று திருச்சியில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அன்று ஒருநாள் மட்டும் போதாது. ஆண்டு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் புகார் பலகைகள் மற்றும் வகுப்பறைகளில் 14417 மற்றும் 1098 எண் கொண்ட பதாகைகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்திகிறேன்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மோதலை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். ஆசிரியர்களின் கண்டிப்பு ஒரு லிமிட் வரைதான். அதைத் தாண்டி ஆசிரியர்கள், மாணவர்களைக் கொடூரமாக தாக்குவதைத் தவிர்க்க வேண்டும். அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

பொதுத் தேர்வு குறித்து பேசிய அவர், “பொங்கல் முடிந்த பிறகு ஜனவரி மாதத்தில் முதல் திருப்புதல் தேர்வும், மார்ச் மாதத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வும் நடைபெறும். இதுவரை எந்த முறையில் தேர்வு நடைபெற்றதோ, அதேமுறையில்தான் நடக்கும். பாடத்திட்டம் மற்றும் நோய் தொற்று ஆகியவற்றை கருத்தில்கொண்டு பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடக்காமல் போவதற்கு வாய்ப்பே இல்லை. அதனால், மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும்.

மாணவர்களுக்கு எது நன்மையை தருமோ அதைதான் செயல்படுத்தி வருகிறோம். புதிய கல்வி கொள்கை எந்த நோக்கத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதோ தெரியவில்லை. ஆனால், அதில் உள்ள நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு திட்டத்தைச் செயல்படுத்தும் போதும் கண்ணும்கருத்துமாகச் செயல்படுத்துவோம்.

மாணவர்கள் பாதுகாப்பாகப் பள்ளிக்கு வருவதும், வீட்டுக்குத் திரும்புவதும் முக்கியம். இளங்கன்று பயமறியாது என்பதுபோல் மாணவர்கள் ஆபத்தை உணராமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். படிக்கட்டில் பயணிப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இதுகுறித்து ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்படும். பள்ளி நேரங்களில் கூடுதலாக பேருந்து சேவை இயக்குவது குறித்து போக்குவரத்துத் துறையிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான இடங்களில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்” என்று கூறினார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *