அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனது பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக நயினார் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழு தலைவரும் திருநெல்வேலி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி பாஜக கட்சியில் மாநில இளைஞரணி துணைத் தலைவராக உள்ளார்.
நயினார் பாலாஜி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மதுரையைச் சேர்ந்த இளையராஜா என்பவருடன் சேர்ந்து மோசடியாக பத்திரப்பதிவு செய்திருப்பதாக அறப்போர் இயக்கம் கடந்த 2022 ஆம் ஆண்டு குற்றம் சுமத்தியது.
மேலும் இளையராஜா சட்டத்துக்கு புறம்பாக நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இடத்தையும் அதனுடன் சேர்ந்து விருகம்பாக்கம் இடத்தையும் நயினார் பாலாஜிக்கு கிரையம் செய்து கொடுத்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நயினார் பாலாஜி பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்ட உத்தரவை இன்று (ஜூலை 20) பத்திர பதிவுத்துறை துணைத் தலைவர் ரத்து செய்தார்.
பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நயினார் பாலாஜி 100 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்திருப்பதாக வெளியான இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,
தன் மீதான குற்றச்சாட்டு குறித்து நயினார் பாலாஜி நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில் அதனையும் மீறி பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் என்னுடைய கிரைய ஒப்பந்த பத்திரப்பதிவை ரத்து செய்துள்ளனர்.
விருகம்பாக்கத்தில் உள்ள சார்பதிவாளரிடம் தடையில்லா சான்றிதழ் மற்றும் அரசு வழக்கறிஞரிடம் சான்று பெற்றுக் கொண்டுதான் இந்தக் கிரைய ஒப்பந்த பத்திரப்பதிவை செய்தேன்.
நீதிமன்றத்தின் மூலம் குலோப் தாஸ், நாராயணதாஸ் சொத்தை அவரது வாரிசுகள் மூலம் இளையராஜா என்பவர் உதவியுடன் வாங்குவதற்கு முன்பு கிரய ஒப்பந்தம் செய்துள்ளேன்.
சட்டரீதியாக உண்மையான வாரிசுதாரர்கள் நீங்கள் தான் என பத்திரப்பதிவுத்துறை அதிகாரி சத்யபிரியா கடந்த 23. 11 .2022-ல் தெரிவித்ததோடு, இதனை ரத்து செய்வதற்கு அதிகாரம் கிடையாது எனவும் தெரிவித்திருந்த நிலையில்,
அதே அதிகாரி தற்போது இதனை ரத்து செய்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் என எண்ணத் தோன்றுகிறது.
இது சம்பந்தமாக நான் நீதிமன்றத்தில் முறையிட உள்ளேன். இது நான் சார்ந்த பாஜக கட்சி மீதான தாக்குதலாக கூட இருக்கலாம்” என்று பேசினார் நயினார் பாலாஜி.
‘புராஜெக்ட் கே’ : பிரபாஸின் முதல் பார்வை!