பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைவதிலிருந்து விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக உயர்க் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ponmudi was exempted from surrender
இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடியும், விசாலாட்சியும் குற்றவாளி என்று அறிவித்தார். இவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு மாதம் கால அவகாசம் வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பு வந்த சமயத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறைக் காலம் என்பதால், உடனடியாக பொன்முடியால் மேல்முறையீடு செய்யமுடியவில்லை.
இந்நிலையில் விடுமுறைக்குப் பின் கடந்த ஜனவரி 3ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் பொன்முடி.
அதில், தண்டனையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். தண்டனையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி சார்பில் சரணடைவதில் இருந்து விலக்கு கேட்டும் இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இம்மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பதை முடிவு செய்ய இன்று (ஜனவரி 12) நீதிபதி சதீஷ் சந்திர சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, விசாலாட்சி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களது ஜூனியர் வழக்கறிஞர்களும் ஆஜரானார்கள்.
இவ்வளவு பேர் ஆஜராகியிருப்பதைப் பார்த்த நீதிபதி, “இது எதாவது சிறப்பு வழக்கா?. ஒரு சாதாரண வழக்குதானே. இந்த வழக்குக்கு எதற்கு இத்தனை பேர் ஆஜராகியிருக்கிறீர்கள்” என கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த மூத்த வழக்கறிஞர்கள், “மனுதாரர் எங்களது நீண்ட நாள் க்ளைன்ட். இது அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு” என சிரித்தபடியே பதிலளித்தனர்.
இதற்கு நீதிபதி, நான் என்னமோ எதோனு நினைத்துவிட்டேன் என்று சிரித்தபடியே கூறிவிட்டு, பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவை அனுமதித்து, அவர் நீதிமன்றத்தில் சரணடைவதிலிருந்து விலக்களித்து உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
’தான்தோன்றித்தனமாக பேசுவது நல்லதல்ல’: அண்ணாமலையை தாக்கிய கே.பி.முனுசாமி
கேப்டன் மில்லர் : ட்விட்டர் விமர்சனம்!
ponmudi was exempted from surrender