உலகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 30) ஒளிப்பரப்பான நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழக பெண்களை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ‘மன் கி பாத்’ வானொலியில் உரை நிகழ்ச்சி கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி முதன்முறையாக ஒலிபரப்பானது. இதனையடுத்து மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது அத்தியாயம் நாடு முழுவதும் ஒலிபரப்பானது.
மகளுடன் செல்ஃபி
அதில் பேசிய பிரதமர் மோடி தமிழக பழங்குடியின பெண்களின் முயற்சியைக் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர், “’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்ட அனைவரும் இந்த நிகழ்ச்சியை உயிர்ப்பித்த ஹீரோக்கள். இன்று, 100 வது அத்தியாயத்தின் மைல்கல்லை எட்டியிருக்கும் போது, அவர்கள் அனைவரையும் பற்றி மீண்டும் ஒருமுறை சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஹரியானாவின் சுனில் ஜக்லான் ஜியின் ‘மகளுடன் செல்ஃபி’ பிரச்சாரத்தை நான் பார்த்தபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
அவரை இன்ஸ்பிரேஷன் ஆக கொண்டு தான் நான் ’பேட்டி பச்சாவோ-பேட்டி படாவோ’ பிரச்சாரத்தை தொடங்கினேன்.
சுனிலின் ‘மகளுடன் செல்ஃபி‘ ஒரு உலகளாவிய பிரச்சாரமாக மாறியது. அதன் முக்கியத்துவம் செல்ஃபியோ, தொழில்நுட்பமோ அல்ல.
அதன்மூலம் நம் வாழ்க்கையில் ஒரு பெண் குழந்தையின் முக்கியத்துவம் வெளிப்பட்டது. இதன் பலனாக இன்று ஹரியானாவில் பாலின விகிதம் மேம்பட்டுள்ளது.” என்றார்.
தமிழக பெண்களின் முயற்சி
தொடர்ந்து அவர் பேசுகையில், ”ஆயிரக்கணக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த சுடுமண் கோப்பைகளை ஏற்றுமதி செய்த தமிழக பழங்குடியின பெண்களிடமிருந்து நாடும் நிறைய உத்வேகம் பெற்றது.
தமிழ்நாட்டில் 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து வேலூரில் உள்ள நாகை நதிக்கு புத்துயிர் அளித்தனர். இதுபோன்ற பல பிரச்சாரங்கள் நமது பெண் சக்தியால் வழிநடத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற பெண்களின் முயற்சிகளை உலகிற்கு கொண்டுவருவதற்கு ‘மன் கி பாத்’ சிறந்த தளமாக செயல்பட்டது.” என்றார்.
மேலும் மன் கி பாத் மூலம் பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. நமது நாட்டு நாய்களான இந்திய இன நாய்கள் பற்றிய விழிப்புணர்வு, ஏழை சிறு கடைக்காரர்களிடம் பேரம் பேச மாட்டோம் என்ற பிரச்சாரம் ஆகியவை ‘மன் கி பாத்’ மூலம் தொடங்கப்பட்டவை.
மோடியின் வேண்டுகோள்!
இன்று இந்தியாவில் சுற்றுலாத்துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. நமது இயற்கை வளங்கள் எதுவாக இருந்தாலும் சரி, ஆறுகள், மலைகள், குளங்கள் அல்லது நமது புனிதத் தலங்கள் என எதுவாக இருந்தாலும், அவற்றை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இது சுற்றுலாத்துறைக்கு பெரிதும் உதவும்.
இந்தியர்கள் சுற்றுலாவுக்காக வெளிநாட்டிற்குச் செல்வதற்கு முன், குறைந்தபட்சம் நம் நாட்டில் உள்ள 15 சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல வேண்டும்.” என்று வேண்டுகோள் விடுத்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
முதல்வர் டூ பிரதமர் பயணம்: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் உருக்கம்!
சிறப்புக் கட்டுரை: டாலர் உலகப் பணமானதும், இந்தியா சோசலிசத்திற்கு மாறியதும் எப்படி? பகுதி -4
‘விரூபாக்ஷா படத்திற்கு இன்ஸ்பிரேஷன் ரஜினி சார் தான்’: சாய் தரம் தேஜ்