முதல்வர் டூ பிரதமர் பயணம்: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் மோடி உருக்கம்!

Published On:

| By christopher

பிரதமர் நரேந்திர மோடியின் ‘மன் கி பாத்’ எனப்படும் மனதின் குரல் வானொலியில் உரை நிகழ்ச்சி கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி முதன்முறையாக ஒலிபரப்பானது. இதனையடுத்து மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஏப்ரல் 30) காலை 11 மணிக்கு மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது அத்தியாயம் நாடு முழுவதும் ஒலிப்பரப்பானது.

அதில் பிரதமர் மோடி பேசுகையில், “இன்று ‘மன் கி பாத்’ 100வது எபிசோட். உங்கள் அனைவரிடமிருந்தும் எனக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள், லட்சக்கணக்கான செய்திகள் வந்துள்ளன. முடிந்தவரை பல கடிதங்களைப் படிக்கவும், அவற்றைப் பார்க்கவும், செய்திகளை சற்று புரிந்துகொள்ளவும் முயற்சித்தேன்.

பல சமயங்களில் உங்கள் கடிதங்களைப் படிக்கும் போது, நான் உணர்ச்சிவசப்பட்டு மூழ்கிவிட்டேன். என் இதயத்தில் இருந்து சொல்கிறேன், உண்மையில், ’மன் கி பாத்’ கேட்பவர்களான நீங்கள் அனைவரும் வாழ்த்துக்கு தகுதியானவர்கள். ‘மன் கி பாத்’ என்பது கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளின் வெளிப்பாடு.

2014 அக்டோபர் 3 விஜய தசமி தினத்தன்று நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து ‘மன் கீ பாத்’ பயணத்தைத் தொடங்கினோம். விஜய தசமி என்பது தீமையை வென்ற நன்மையின் திருநாளாகும். ‘மன் கி பாத்‘ என்பது நாட்டு மக்களின் நன்மை மற்றும் நேர்மறையின் தனித்துவமான திருவிழாவாகவும் மாறியுள்ளது.

‘மன் கி பாத்’ தொடங்கி இத்தனை மாதங்கள், இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதை சில நேரங்களில் என்னால் நம்புவதற்கு கடினமாக இருக்கிறது.

எனக்கு ஒரு வழிகாட்டி இருந்தார் – ஸ்ரீ லக்ஷ்மண்ராவ் ஜி. நாங்கள் அவரை வக்கீல் சாஹேப் என்று அழைத்தோம். பிறருடைய குணங்களை வணங்க வேண்டும் என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தார். உங்களுடன் நேருக்கு நேர் யாராக இருந்தாலும், அது உங்கள் நாட்டவரானாலும் சரி, உங்கள் எதிரியாக இருந்தாலும் சரி, அவர்களின் நல்ல குணங்களைப் பற்றி அறிந்து அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அவருடைய இந்தப் பண்பு எனக்கு எப்போதும் உத்வேகம் அளித்தது. ‘மன் கி பாத்’ என்பது மற்றவர்களின் குணங்களிலிருந்து கற்றுக்கொள்ள சிறந்த ஊடகமாக மாறியுள்ளது.

நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, அங்குள்ள சாமானியர்களைச் சந்தித்து உரையாடுவது எனக்கு இயல்பாக இருந்தது. முதலமைச்சரின் பணியும், பதவிக்காலமும் அப்படித்தான் இருந்தன. ஆனால், 2014ஆம் ஆண்டு பிரதமராக டெல்லிக்கு வந்த பிறகு, இங்குள்ள வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தேன். பதவி, பொறுப்பு, சூழ்நிலைகள், பாதுகாப்பு மற்றும் நேர வரம்பு ஆகியவற்றுக்கு கட்டுபட்ட பிரதமராக இருக்க வேண்டியது முக்கியம். ஆரம்ப நாட்களில் அதில் ஒரு வெறுமை இருந்தது.

ஆனால் எனக்கு எல்லாமுமாக இருக்கும் நாட்டுமக்களிடமிருந்து பிரிந்து என்னால் வாழ முடியவில்லை. ‘மன் கி பாத்’ இந்த சவாலுக்கு ஒரு தீர்வை, சாமானியர்களுடன் இணைவதற்கான வழியை எனக்கு அளித்தது. ஒவ்வொரு மாதமும் நான் நாட்டு மக்களிடமிருந்து ஆயிரக்கணக்கான செய்திகளைப் படிக்கிறேன். ஒவ்வொரு மாதமும் நாட்டு மக்களின் ஏதாவது ஒரு அற்புதமான வெளிப்பாட்டைப் பார்க்கிறேன். நாட்டுமக்களின் தவம் மற்றும் தியாகத்தின் உச்சத்தை நான் உணர்கிறேன். நான் உங்களிடமிருந்து கொஞ்சம் கூட தொலைவில் இருப்பதாக உணரவில்லை.

‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நாம் குறிப்பிடும் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்கு உயிர்கொடுத்த ஹீரோக்கள் தான். நம் நாட்டவர்களில் சிலர் 40 ஆண்டுகளாக பாலைவனமான மலைகளிலும் தரிசு நிலங்களிலும் மரங்களை நட்டு வருகின்றனர், பலர் 30 ஆண்டுகளாக நீர் பாதுகாப்பிற்காக படிகிணறுகள் மற்றும் குளங்களை தோண்டி, அவற்றையும் சுத்தம் செய்கிறார்கள். சிலர் 25-30 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு கற்பிக்கிறார்கள், சிலர் ஏழைகளின் சிகிச்சைக்கு உதவுகிறார்கள்.

‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பலமுறை அவர்களைக் குறிப்பிடும்போது உணர்ச்சிவசப்பட்டு பேச முடியாமல் நின்றிருக்கிறேன். இதனால் பலமுறை மீண்டும் மீண்டும் நான் பேசி பதிவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதற்கு நாட்டு மக்களின் இந்த முயற்சிகள் தான் என்னை தொடர்ந்து இயங்க தூண்டியது” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

‘விரூபாக்‌ஷா படத்திற்கு இன்ஸ்பிரேஷன் ரஜினி சார் தான்’: சாய் தரம் தேஜ்

திமுக- மதிமுக இணைப்பு: துரை வைகோ பதிலால் கடுப்பான துரைசாமி

pm modi about his cm life