பதினெட்டாவது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல்! வெல்லட்டும் மக்களாட்சி! வீழட்டும் அதிகாரக் குவிப்பு!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை 

நூறு கோடியை நெருங்கும் வாக்காளர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய மக்களாட்சிக்கான தேர்தல் எழுபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்யப்போகும் இந்திய கூட்டாட்சிக் குடியரசில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு முறை நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட தால் தேர்தல் சிறிது தாமதமாகியிருக்கிறது. நான்கு முறை ஆட்சி குறுகிய காலத்திலேயே பெரும்பான்மை இழந்து கவிழ்ந்துள்ளது. 

மற்றபடி இந்திய குடியரசு தொடர்ந்து தேர்தல் மூலம் மக்களின் வாக்குகளைப் பெற்று அமைந்த ஆட்சிகளாலேயே ஆளப்பட்டுள்ளது. முக்கியமான தருணங்களில் ஒரே ஆளும் கட்சியோ, ஆட்சியோ தொடர்ந்து அதிகாரத்தை ஒற்றை புள்ளியில் குவித்துக்கொள்ள விடாமல் மக்கள் ஆட்சியை மாற்றியமைத்துள்ளனர். 

இந்திய மாநிலங்களில் பல புதிய கட்சிகள் உதயமாகியுள்ளன. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளன. பல மாநிலங்களில் மக்கள் இரண்டு கட்சிகளுக்கோ, இரண்டு அணிகளுக்கோ அடுத்தடுத்த தேர்தல்களில் மாற்றி வாக்களித்துள்ளனர். அதன் மூலம் தங்கள் அதிருப்தியை, தேவைகளை, அரசிடம் தங்களுக்குள்ள கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். கட்சிகளை அடித்தட்டு மக்களுக்கான நலத்திட்டங்களை அறிவிக்க, நடைமுறைப்படுத்த வைத்துள்ளனர். 

சீர்குலையும் சட்டத்தின் ஆட்சி! மக்களாட்சி எதிர்கொண்டுள்ள சவால்! 

மக்களாட்சி என்பது தேர்தல்களால் மட்டும் கட்டமைக்கப் படுவதல்ல. அது சட்டத்தின் ஆட்சியும் கூடத்தான். அண்ணல் அம்பேத்கர் தலைமையேற்ற வரைவுக்குழு அரசியலமைப்பு அவையின் மூலம் உருவாக்கித் தந்த அரசியலமைப்பு சட்டமே நம் குடியரசின் உயிர் மூச்சாகும். 

ஒரு மக்களாட்சிக் குடியரசின் அரசியலமைப்பு சட்டம் அதிகாரத்தை ஒரு புள்ளியில் குவியாமல் பரவலாக்குவதையே தன் முதன்மை நோக்கமாகக் கொண்டது. இரண்டு வகையான அதிகாரப் பரவல்கள் நம் அரசியலமைப்பில் உறுதி செய்யப்படுகின்றது. 

ஒன்று குத்துக்கோட்டு பிரிவினை. அதில் மூன்று முக்கிய தூண்கள் என்று அழைக்கப்படும் பிரிவுகள். ஒன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சட்டமியற்றி, முடிவெடுத்து செயல்படுத்தும் அதிகாரம். இதனை ஆங்கிலத்தில் legislature என்பார்கள். அடுத்து அமைச்சரவை, அதிகாரிகளாலான அரசு இயந்திரம், அதன் நிறுவனங்கள், இயங்கு விதிகள் ஆகியவை. நாட்டை நிர்வகிப்பது இந்த நிர்வாகம், executive, என்ற தூண்தான். மூன்றாவது, நீதிமன்றம். சட்ட த்திற்கு புறம்பாக யார் நடந்தாலும் விசாரித்து தண்டிக்கும், சீர்செய்யும் தன்னாட்சி அமைப்பு, judiciary. 

கடந்த பத்தாண்டுகளாக பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் இந்த அதிகாரப் பகிர்வு கடுமையான சீர்குலைவை சந்தித்துள்ளது. அரசு நிர்வாகம் ஆளும் கட்சியின் எதேச்சதிகாரப் போக்கிற்கு முழுவதும் வளைந்து, பணிந்து கொடுப்பதாக மாறியுள்ளது. அரசியலமைப்பு சட்ட த்தின் தரிசனங்களை சிதைக்கும் விதமாக ஆட்சி செயல்படுகிறது. நீதிமன்றங்களும் பல சந்தர்ப்பங்களில் அரசினை கட்டுப்படுத்தத் தவறுவதை பார்க்க முடிகின்றது. அரசு நிர்வாகத்துறை, நீதித்துறை இரண்டின் மீதும் ஆளும் கட்சியின் அரசியல் சார்பு நிழலாகப் படிகிறது. 

சுதந்திர இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்ற நீதிபதிகளே பத்திரிகையாளர்களை சந்தித்து தாங்கள் சுதந்திரமாக பணியாற்ற இயலவில்லை என்று முறையிட்ட காட்சி முதல் ஐந்தாண்டுகளிலேயே அரங்கேறியது. பிரதமர் எதேச்சதிகார நோக்கில் திடீரென பணமதிப்பிழப்பை அறிவித்ததில் எளிய மக்களும், ஒட்டு மொத்த பொருளாதாரமும் பெரும் இடர்பாடுகளை சந்தித்தது. அதிகாரத்தை ஒற்றை புள்ளியில் குவித்து மகிழ்ந்ததைத் தவிர இந்த நடவடிக்கையால் எந்த பயனும் விளையவில்லை.  

இரண்டாம் ஐந்தாண்டின் துவக்கத்திலேயே ஜம்மு,காஷ்மீர் மாநிலத்தையே இல்லாமலாக்கி, அதனை மூன்று யூனியன் பிரதேசங்களாக ஒன்றிய அரசு பிரித்து அதிர்ச்சியளித்தது. கூட்டாட்சி தத்துவத்தின் முதுகெலும்பையே முறிக்கும் இந்த செயலினை உச்ச நீதிமன்றம் கண்டிக்கவில்லை என்பது கூட்டாட்சி தத்துவத்தின் எதிர்காலத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. ஒன்றிய அரசு நினைத்தால் எந்த மாநிலத்தையும் ரத்து செய்யலாம், அதனை ஒன்றிய அரசுப் பகுதியாக மாற்றலாம் என்றால், கூட்டாட்சிக்கு என்ன பொருள் இருக்க முடியும்? 

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தேர்தல் பத்திரங்களை யாரும் வாங்கி ரகசியமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாகத் தரலாம் என்ற அதிசய நடைமுறையை உருவாக்கியது பாஜக அரசு. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாரத ஸ்டேட் பாங்க் மூலம் இது நிகழ்வதால், ஆளும் கட்சியால் யார் எந்த கட்சிக்கு நிதியளிக்கிறார்கள் என அறிய முடியும். ஆனால் எதிர்கட்சிகளுக்கோ, மக்களுக்கோ எந்த விவரமும் தெரியாது.

தேர்தல் பத்திரங்களில் அறுதிப் பெரும்பான்மையானவை ஆளும் கட்சிக்கே அளிக்கப்பட்டன என்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை. வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, உளவுத் துறை என பல்வேறு அரசு அமைப்புகள் மூலம் நெருக்கடிக்கு உள்ளாகும் வர்த்தக, தொழில் நிறுவனங்கள் ஆளும் கட்சிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியளிப்பதன் மூலம் தங்களை காத்துக்கொண்டன என்று எதிர்கட்சிகளும், பொதுநல செயல்பாட்டாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர். 

ஈ.டி. என்று சுருக்கமாக அழைக்கப்படும்  அமலாக்கத்துறை அரசியல் வாதிகளுக்கு அழுத்தம் கொடுத்து கட்சி மாறும்படி செய்வதற்கும், எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்கும், தேர்தல் பத்திரங்களை வசூலித்துத் தருவதற்கும் பயன்படுத்துப் படுவதாக பகிரங்கமாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர். அதற்கான காரணங்கள் பொதுவெளியில் மக்கள் காணும்படியாகவே உள்ளது. ரெய்டு நடக்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பது வெளிப்படையாக இருப்பதில்லை. 

இது ஒரு புறம் என்றால், மற்றொரு முக்கிய கிடைக்கோட்டு அதிகாரப் பகிர்வான மூவடுக்கு கூட்டாட்சி வடிவமும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. ஒன்றிய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் என்று மூன்று தளங்களில் மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தை பகிர்ந்துகொண்டு ஆட்சி செய்யவேண்டும் என்பதே அரசியலமைப்பு சட்டமாகும். இதில் முக்கியமான பகிர்வு மாநில அரசுகளின் அதிகாரங்கள், ஒன்றிய அரசின் அதிகாரங்கள் என்ற பகிர்வுதான். மாநில அரசு தன் நிர்வாக அதிகாரங்களை உள்ளாட்சி அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளும். 

கடந்த பத்தாண்டுகளாக மாநில அரசுகளின் அதிகாரங்கள் வெகுவாக மட்டுப் படுத்தப்பட்டு வருகின்றன. முதலில் வணிக வரி, விற்பனை வரி போன்றவை மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு ஜி.எஸ்.டி என்ற பெயரில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் முகாண்மையிடம் கொடுக்கப்பட்டு விட்டது. இதனால் மாநில அரசின் நிதி மேலாண்மை சுயாட்சியானது பறிக்கப் பட்டுவிட்டது. வரிப்பகிர்வில் ஆளும் கட்சி எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஓரவஞ்சனை செய்வதாக கடுமையாக குற்றம் சாட்டப் படுகிறது.  

அடுத்து பல்வேறு துறைகளிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒன்றிய அரசின் தலையீடும், அரசியல் ரீதியான பாரபட்சமான நடவடிக்கைகளும் அதிகரித்து விட்டன. உதாரணமாக பேரிடர் நிவாரண நிதி என்பதன் ஒரு சிறு பகுதியை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கிறது ஒன்றிய அரசு. ஆனால் பேரிடரின் தாக்கம் அதிகமாக இருந்தால் ஒன்றிய அரசின் வசமுள்ள கணிசமான பேரிடர் நிதியின் தொகுப்பிலிருந்து அது தரவேண்டும். அப்படி தருவதில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கும். எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டப் படுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.   

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில், ஒன்றிய அரசின் ஆளுனர்களின் அத்துமீறிய தலையீடுகள் அதிகரித்து வருகின்றன. மக்களாட்சி மரபுகளை காப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஆளுனருக்கு அளிக்கப்பட்டுள்ள குறியீட்டு மதிப்பை பயன்படுத்தி எதேச்சதிகரமாக நடப்பது நடைமுறையாகி வருகிறது. உச்சநீதிமன்றமே பல சமயம் கண்டித்தும் இந்த போக்கு தொடர்வது மாநில அரசுகளின் சுயாட்சிக்கு பெரும் சவாலாக மாறி வருகிறது. 

பெருமுதலீட்டிய நிறுவனங்களின், கார்ப்பரேட்களின் வளர்ச்சியை பெரிதும் ஆதரிக்கும் பாஜக ஆட்சி, ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியை, மக்களின் நல்வாழ்வு மேம்பாட்டை புறக்கணிப்பதாகவே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. ஆனால் ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதன் மூலம் பாஜக, கார்ப்பரேட் கூட்டணி பெரும் கோயபல்ஸ் பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. 

சிதைந்து சரியும் நான்காவது தூண்!

மக்களாட்சியின் மூன்று தூண்களென சட்டமியற்றும் மன்றங்கள், அரசு நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றை பார்த்தோம். ஆனால் இவற்றின் செயல்பாடுகளிலுள்ள நிறை குறைகளை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லவேண்டிய முக்கியமான நான்காவது தூண் ஊடகங்கள். 

ஊடகங்கள் முழுக்கவும், குறிப்பாக காட்சி ஊடகங்கள், ஆளும் கட்சியின் ஊதுகுழல்களாக மாறிவிட்டதாகவே தோன்றுகிறது. அரசினை, ஆளும் கட்சியினை விமர்சிக்கும் குரல்களுக்கு இடம் கொடுக்கப்படுவதில்லை. பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளும் கூட பின்னுக்குத் தள்ளப் படுகின்றன. ரஃபேல் விமான ங்களை கொள்முதல் செய்வதில் நிகழ்ந்த பல சந்தேகத்திற்குரிய நடைமுறைகளை ஊடகங்கள் கவனப்படுத்த மறுத்தன. 

சி.ஏ.ஜி, அதாவது ஒன்றிய அரசின் தன்னாட்சி தணிக்கை நிறுவனம், கடுமையான முறைகேடுகளை, ஊழல்களை சுட்டிக்காட்டியும் ஊடகங்கள் அதற்கு எந்த வெளிச்சமும் போட்டுக் காட்டவில்லை. இதே சி.ஏ.ஜி அறிக்கை காங்கிரஸ் ஆட்சியில் அலைக்கற்றை ஊழலை குறித்த கணிப்புகளை வெளியிட்ட போது ஊடகங்கள் அதை பூதாகாரமாக ஊதிப்பெருக்கியதும், அதன் மூலம் மன்மோகன் சிங் தலைமையிலான யூ.பி.ஏ அரசினை வீழ்த்த வகைசெய்ததையும் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். 

அதானி குழுமத்தின் அசுர வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளில் எப்படி சாத்தியமாகியது என்பதை ஹிண்டென்பர்க் என்ற அமெரிக்க நிறுவனம் அம்பலப்படுத்தியும் கூட, அதனை ஊடகங்கள் அழுத்தம் கொடுத்து பேசவில்லை. அதன் பின்னணியில் உள்ள வங்கி மற்றும் பங்குச் சந்தை முறைகேடுகள் ஆராயப்படவில்லை. முக்கியமான ஆங்கில செய்தி சேனலையே அதானி குழுமம் வாங்கிவிட்டது. 

பாசிச அதிகாரக் குவிப்பா? மக்களாட்சி அதிகாரப் பரவலா? 

அதிகாரக் குவிப்பினை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க, சிவசேனா, ஆர்.ஜே.டி, சமாஜ்வாடி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ அனைத்தும் அணி திரண்டு போராடினாலும் ஊடகங்கள், அரசு நிறுவனங்கள் எல்லாம் அதிகாரக் குவிப்பின் பக்கமே நிற்கின்றன. அந்த அதிகாரக் குவிப்பின் அடையாளமாக பிரதமர் மோடியின் பிம்பம் நிறுத்தப் படுகிறது. 

தேர்தலைக் குறித்த கருத்துக் கணிப்பு என்ற பெயரிலே மிகப்பெரிய பிரசாரத்தை ஊடகங்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளன. பாஜக வெற்றிபெறுவது ஐயத்திற்கு அப்பாற்பட்ட உறுதி என்றும், மோடி அலை வீசுகிறது என்றும் தினமும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.  பாஜக, அதனுடன் ஒரு சில கட்சிகளே உள்ள தேசிய ஜன நாயக கூட்டணி என்ற என்.டி.ஏ 400 தொகுதிகளைப் பெறும் என்றெல்லாம் கூறப்படுகிறது. உண்மையில் மாநிலங்களில் உள்ள நிலை என்ன என்பதை யாருமே ஆராய முடியாதபடி அவர்களது செய்திப் பிரசாரம் அமைவதைக் காண முடிகிறது. 

உள்ளபடி சொன்னால் பாஜக இப்போது பெற்றுள்ள 303 நாடாளுமன்ற தொகுதிகள் என்பது அது செல்வாக்காக உள்ள மாநிலங்களில் அது பெற்றுள்ள அதிகபட்ச வெற்றியாகும். அதனை அப்படியே மீண்டும் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்பதுடன், மேலும் தொகுதிகளை எங்கிருந்து பெறும் என்பதும் விடையற்ற கேள்விதான்.   

பாஜக, நிதிஷ் குமார் கட்சி இரண்டும் சேர்ந்து 321 தொகுதிகள் வைத்துள்ளன. இந்தியா கூட்டணி கட்சிகள் 221 தொகுதிகள் வைத்துள்ளன. இதில் ஐம்பது, அறுபது தொகுதிகள் இடம் மாறினால் பெரும்பான்மை மாறிவிடும் என்பதுதான் உண்மை. 

கர்நாடகா, ஹரியானா, டெல்லி, அஸ்ஸாம். மகாராஷ்டிரா, பீஹார், மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, ஜம்மு&காஷ்மீர் ஆகியவற்றில் கடும் போட்டி நிலவப் போகிறது.  இவற்றின் மொத்த தொகுதிகள் 216. இவற்றில் பாஜக வைத்துள்ள 142 தொகுதிகளில் சரிவு ஏற்பட்டால் அது பெரும்பான்மையை எட்டுவது சாத்தியமில்லை.  கீழேயுள்ள பட்டியலை பகுப்பாய்வு செய்தால் நிலவரம் புரியும். 

இதைத்தவிர பாஜக வலுவாக உள்ள மாநிலங்கள் என்று கருதப்படக்கூடிய மாநிலங்களில் உள்ள 194 தொகுதிகளில் பாஜக 171 தொகுதிகளை ஏற்கனவே வைத்துள்ளது. இத்தகைய இமாலய வெற்றியை மீண்டும் பெற முடியுமா என்ற ஐயத்திற்கு ஊடகங்கள் இடமளிப்பதில்லை. இந்த மாநிலங்களில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலுவாகவே உள்ளன. அவையும் தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்யும், களப்பணி செய்யும், போராடும். 

ஆனால் ஊடகங்கள் இந்த தேர்தலில் பாஜக-விற்கு போட்டியே இல்லை என்ற பிம்பத்தை கட்டமைக்கின்றன. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை புறக்கணிக்கின்றன. ராகுல் காந்தியின் யாத்திரைகளை முற்றிலும் புறக்கணித்தன ஊடகங்கள். 

ஆனாலும், மக்களாட்சியில் இறுதி அதிகாரம் மக்களிடம்தான் இருக்கிறது. இந்திய மக்கள் ஒவ்வொரு முறையும் அதிகாரக் குவிப்பு முயற்சிகளை முறியடித்துள்ளார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாமல் இருக்கலாம்; பொருளாதாரம் புரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரே கட்சியிடம் அதிகாரம் குவிந்தால் அது தங்களுக்கு நல்லதல்ல என்ற புரிதல் இருக்கிறது. விழிப்புணர்வு இருக்கிறது. அவர்கள் மீண்டும் தங்கள் அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்வார்கள். 

கட்டுரையாளர் குறிப்பு:

Parliamentary Elections for the Eighteenth Lok Sabha: Let democracy win and Let the concentration of power fall down by Rajan Kurai article in Tamil

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

WPL 2024: முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய RCB அணி!

மோடியின் வடக்கு வாதம்: அப்டேட் குமாரு

ELECTORAL BOND: “பாவப்பணத்தை பெற்ற திமுக- எடப்பாடி விமர்சனம்” – டி.ஆர்.பாலு பதிலடி!

ஐபிஎல் : சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பயிற்சி!

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *