ELECTORAL BOND: “பாவப்பணத்தை பெற்ற திமுக- எடப்பாடி விமர்சனம்” – டி.ஆர்.பாலு பதிலடி!

Published On:

| By Kavi

தேர்தல் நிதி பத்திர விவகாரத்தில் திமுகவை கேள்வி கேட்கும் எடப்பாடி பழனிசாமி பாஜகவை ஏன் கேட்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் டி.ஆர்.பாலு

தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக 656 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது. இதில் கோவையைச் சேர்ந்த லாட்டரி மார்டின் நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் திமுக 509 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

எடப்பாடி விமர்சனம்

இதனை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது.

சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், ஜெயலலிதா ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டது.

ஆனால், இந்த ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி , மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது.

மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர், ஸ்டாலினுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டி.ஆர்.பாலு பதிலடி!

இதற்கு பதிலடி கொடுத்துள்ள திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, “தான் வகித்த பொதுப்பணித்துறையில் ஒப்பந்தங்களை மொத்தமாகத் தனது சம்பந்திக்கும், அவர் வழி உறவினர்களுக்கும் கொடுத்துச் சிக்கிக் கொண்டவர் பழனிசாமி.

குட்கா விற்பனையாளர்களிடம் மாமூல் வசூலிப்பதற்காகத் தனியாக ஒரு அமைச்சரை வைத்திருந்தவர் பழனிசாமி. சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது. வருமான வரித்துறையினர் இவரது ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலாளர் அறையிலேயே சோதனை செய்தார்கள். டி.ஜி.பி.யே சிபிஐ விசாரணையில் சிக்கினார்.

தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக் கொன்றது தொடர்பான விசாரணை ஆணையத்தில், ‘முதலமைச்சரிடம் சொல்லி விட்டுதான் சுட்டோம்’ என்று குற்றம் சாட்டப்பட்டவர் பழனிசாமி.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கியவர்களைக் காப்பாற்றியவர் பழனிசாமி. கொடநாடு கொலை, கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளே பழனிசாமி பெயரை வெளியில் சொன்னார்கள்.

இப்படிப்பட்ட நீண்டதொரு ‘குற்றப்பட்டியல்’ கொண்ட பழனிசாமி, இன்று விடுத்த அறிக்கையில், பாவத்தைப் பற்றியெல்லாம் பாலபாடம் எடுத்துள்ளார்.

இன்று பாஜக அமைத்துக் கொடுத்த திருட்டு வழியில் ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பழனிசாமிக்கு, பாவத்தைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு யோக்கியதை உண்டா?

திமுக சார்பில் யாரிடம் நன்கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளோம். இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட்டு, அவர்களிடம் பணம் பெற்றது நியாயமா என்று கேட்டுள்ளார் பழனிசாமி.

அதற்காக அந்த நிறுவனத்துக்கு எந்தச் சலுகையும் கழக ஆட்சியில் தரப்படவில்லை. ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தைப் போராடிக் கொண்டுவந்து நிறைவேற்றியது திமுக அரசுதான்.

பழனிசாமி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஆன்லைன் தடைச் சட்டம் செல்லாது, அது சட்டப்பூர்வமானதாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் சொன்னபோது, சட்டப்பூர்வமான ஒரு சட்டத்தை உருவாக்கியது திமுக அரசுதான்.

அந்தச் சட்டத்துக்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வந்தார் ஆளுநர் ரவி. அவர் அதனைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் நிறைவேற்றி அனுப்பினோம். ஒப்புதலைப் பெற்றோம். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை நடத்துபவர்களைச் சந்தித்து பேசினார் ஆளுநர். அப்போது ஆளுநரைக் கண்டித்தாரா இந்த பழனிசாமி?
இப்போது ஏன் அறிக்கை வெளியிடுகிறார் பழனிசாமி? தனது எஜமானர்களான பாஜகவைக் காப்பற்றுவதற்காக அறிக்கை விடுகிறார்!

அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி, நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாகப் பணத்தைப் பறித்துள்ளது பாஜக. பாஜகவால் மிரட்டப்பட்ட 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்கள் அதிகளவு பணத்தை பாஜகவுக்கு வாரி வழங்கி உள்ளது.

இதன் மூலமாக, ‘மிரட்டிப் பணம் பறிக்கும் பாஜக’ என்று அகில இந்திய அளவில் பாஜக அம்பலப்பட்டுள்ளது. பாஜகவால் இதற்கு எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. இத்தகைய பாஜக பற்றி பழனிசாமி ஏதாவது கண்டித்துள்ளாரா?

‘பாஜகவுடன் கூட்டணியே கிடையாது’ என்று சொல்லும் பழனிசாமிக்கு, பாஜகவின் மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடித்தனத்தைக் கண்டித்து அறிக்கை விட முதுகெலும்பு உண்டா? ஏன் வாயை மூடிக் கொள்கிறார்? நாங்கள் யாரையும் மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ பணம் வசூலிக்கவில்லை என்பதை ‘டெண்டர் மோசடி’ பழனிசாமிக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்” என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஐபிஎல் : சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பயிற்சி!

“ஊ சொல்றியா” பாடல் முதல் ஷாட்டில் பயந்து நடுங்கினேன் – சமந்தா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment