உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசே மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து நொச்சிகுப்ப மீனவ மக்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்க ஆவண செய்ய வேண்டுமென்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 12- ந்தேதி சென்னை கலங்கரை விளக்கம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் ‘லூப்’ சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அங்கிருந்த மீன்கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.
இதை கண்டித்து மீனவர்கள், மீனவப் பெண்கள் லூப் சாலையில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று 5-வது நாளாக நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான 2 கிலோ மீட்டர் தூர லூப் சாலையில் மீன்பிடி படகுகளை நிறுத்தி வைத்து போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து நேற்று (ஏப்ரல் 18) காலையில் போராட்டம் நடத்தி வரும் மீனவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து அவர்களுக்கு தனது ஆதரவினை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தி வரும் மீனவ மக்களை நேற்று இரவு சந்தித்தார். அவர்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்திலும் பங்கு கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் பேசுகையில், “கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான இந்த பகுதியில் பல ஆண்டு காலமாக ஏராளமான மீனவ மக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கு லூப் சாலை அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பாரம்பரியமாக இந்த பகுதியில் வசித்து வரும் மக்களை சாலையை ஆக்கிரமித்துள்ளார்கள் என்று கூறி உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரடியாக தலையிட்டு உத்தரவிட்டுள்ளார்கள்.” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “சுத்தம், சாலை ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பெயரால் முத்திரையைக் குத்தி பரம்பரை பரம்பரையாக இங்கு வசித்து வரும் மீனவ மக்களை அப்புறப்படுத்தும் இந்த நடவடிக்கை இயற்கை நீதிக்கு புறம்பானது.
போராட்டம் நடத்திவரும் மீனவ மக்களின் உணர்வுகளை அரசும், நீதிமன்றமும் உணர வேண்டும். அவர்களது பாரம்பரியமான வாழ்வாதாரத்தை சிக்கலாக்க கூடிய வகையில் எந்த சட்டமும் எந்த நீதியும் அமைந்து விடக்கூடாது.
அதற்கு ஏற்ப தமிழ்நாடு அரசே நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இந்த மக்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்க ஆவண செய்ய வேண்டும். அரசு எங்கோ கட்ட நினைக்கின்ற மீனவ மக்களுக்கான சந்தையை, இதே பகுதியில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.” என்றார்.

அப்போது, சுயநலவாதிகளின் தூண்டுதலினால் மக்கள் போராட்டம் நடைபெறுகிறது என்று உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் இயல்பாக போராடி வருகின்றனர். இதில் தூண்டுவதற்கு என்ன இருக்கிறது? மக்கள் வீதிக்கு வந்து போராடிய பிறகு தான் அரசியல் தலைவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். யாரும் தூண்டிவிடவில்லை என்பதை நீதிபதிகள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “நீதிமன்றமே நேரிடையாக இதில் தலையிட்டுள்ளதால் தமிழ்நாடு அரசு நிதானமாக செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ’இந்த விவகாரத்தில் முதல்வர் உரிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி கொண்டிருக்கிறார். சுமுகமான முறையில் இதற்கு முடிவு காண முதல்வர் விரும்புகிறார் என்பதை திருமாவளவனுக்கு தெரியப்படுத்துங்கள்” என்று கூறியதாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். அதனை நான் மக்களிடமும் கூறியுள்ளேன்.” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
விஜய் பஞ்ச் வசனத்துடன் அர்ஜூனை பாராட்டிய ரோகித் சர்மா
அணு ஆயுதங்களை பயன்படுத்தினால்… ரஷ்யாவை எச்சரித்த ஜி-7 நாடுகள்!