கிக் பொருளாதாரத்தில் காலனியப் பண்புகள்! பகுதி -1
லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்
நவ காலனியம் என்பது காலனியப் பண்புகள் சமகாலத்தில், குறிப்பாக உலகமயமாக்கலில், மீண்டும் உருவெடுத்துள்ளதைக் குறிக்கும் ஒரு கருத்தியல். இந்த நவகாலனியம் மனிதகுலத்தின் அடிப்படை மாண்புகளைச் சிதைக்கும் கொடும் திறன் படைத்தது என்பதையே இக்கட்டுரை தொடர்ந்து பேசிவருகிறது. காலனியத்தின் சமகாலப் பண்புகளைப் புரிந்துகொள்ள தாதுகளில் உள்ள அரசியல் பற்றியும் விவாதித்தது. இப்பத்தியின் இறுதிப் பகுதியானது காலனியப் பண்புகள் எவ்வாறு இன்றைய தகவல் தொழில்நுட்பத் துறையையும் பாதித்துள்ளது என்பது பற்றியதாகும்.
இணையம் என்பது விடுதலைக் கருவியாகவும், ஜனநாயகத்தைத் தக்கவைக்கக் கூடிய தொழில்நுட்பமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. இதில் ஓரளவு உண்மை உள்ளது. தகவல்களை எங்கும் உடனடியாகக் கொண்டு சேர்ப்பதிலும் அது குறித்த அரசியல் பொருளாதாரப் பயன்களும் சொல்லி மாளாது. உதாரணமாக இணையம் இல்லையெனில் இந்தக் கட்டுரைகூட சாத்தியமில்லை.
அதே சமயத்தில் இணையம் காலனியப் பண்புகளை விட்டு இன்னும் வெளிவரவில்லை என்பதை எச்சரிக்கை செய்வதே இந்த இறுதிப் பத்தியின் நோக்கமாகும். இணையத்தைச் சொல்லி முடிப்பதற்கான காரணம், அதுவே நம் எதிர்காலச் சமுதாயத்தின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கப் போகிறது. எனவே, அது குறித்த விவாதத்தைத் தொடங்கி இப்பத்தியை முடிப்பதே சரியாக இருக்கும்.
25 வருடமே ஆன இந்தத் தொழில்நுட்பத்தை காலனியம் மற்றும் சுரண்டும் முதலீட்டியப் பண்புகளில் இருந்து எப்படி விடுவித்துக்கொள்வது என்பதற்கான விவாதத்தை வளரும் நாடுகளிலிருந்துதான் தொடங்க வேண்டும். தற்போதைய இணையத்தின் வடிவம் மேற்குலக அரசியல், பொருளாதாரத்துக்குத் துணைபோவதால் அங்கிருந்து இந்த விவாதங்கள் அவ்வளவு எளிதாகத் தொடங்கிவிடாது.
இதற்கு ஓர் உதாரணமாக இன்று பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் கிக் பொருளாதாரத்தை (Gig Economy) பார்க்கலாம். நம்மூரில் உள்ள ஓலா, ஊபர் எல்லாம் இந்த கிக் பொருளாதாரத்தின் விளைவுகள்.
கிக் என்ற பெயர் வரக் காரணம் என்ன? கிக் என்பது மேற்குலகில் நிகழ்த்துக் கலை (Performance Arts) குறித்த வடிவம். உதாரணமாக ஒரு நகைச்சுவைப் பேச்சாளரின் (நிகழ்த்துத்) திறமை – அதாவது எந்தளவுக்குச் சிரிக்க வைக்கிறாரோ அந்தளவுக்கு அன்னாரின் பிழைப்புக்கான சந்தை இருக்கும். திறமைக்கேற்ற ஊதியம். நடிகனின் புகழுக்கேற்ற சம்பளம் என்பது போல (திறமையின் அளவுகோலாகப் புகழ் இங்கு இருக்கிறது). சந்தையின் தேவையானது ஒருவரின் வருமானத்தைத் தீர்மானிக்கிறது.
இப்போது இணையத்தில் பேசப்படுகிற கிக் பொருளாதாரத்துக்கு வருவோம். ஓலா, ஊபர் ஓட்டுநர்களும் கிக் தொழிலாளர்கள் என அறியப்படுகிறார்கள். அதாவது இவர்கள் தொழிலாளர்கள் என்ற கட்டிலிருந்து விலக்கப்பட்டு திறமைசார் தொழிலாளர்களாக மறு அறிமுகம் செய்யப்படுகிறார்கள். இப்படிச் செய்வதினால் தொழில் அங்கீகாரம் கிடைக்கலாம். ஆனால் தற்போதைய கிக் மாடல் இவர்களுக்கு உண்மையிலேயே பயனுள்ளதா?
(திறமைசார்) கிக் தொழிலாளிகள் எவ்வளவு உழைக்கிறார்களோ அவ்வளவுக்கு ஊதியம் அல்லது ஊக்கத்தொகை. இதில் என்ன தவறு? இந்த கிக் பொருளாதாரத்தில் சில முக்கியமான தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட உரிமைப் பிரச்சினைகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
கிக் பொருளாதாரப் பண்புகளில் ஒன்று தொழிலாளர்களுக்குக் குறிப்பிட்ட நேரம் என்று கிடையாது. ஆண்டாண்டு காலமாக இருந்துவந்த பொருளாதார, தொழிலாளர் அமைப்புகளை இணையம் பிளவு (disrupt) செய்வதை வரவேற்கத்தக்கதாக மேற்குலகப் பொருளாதார நிபுணர்கள் உரக்கக் கூறி வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் வேலைக்குச் செல்லலாம், கிளம்பலாம் என்பதைச் சுதந்திரமாகப் பார்க்க வேண்டுமெனச் சொல்லப்பட்டு வருகிறது. இதன் மறுபக்கம் என்ன?
இடது சாரி இயக்கங்கள் பல ஆண்டுகளாகப் போராடி, கட்டிக்காத்து வந்த குறைந்த / அதிகபட்ச தொழில் நேரங்கள் குறித்த தொழிலாளர்கள் சார்ந்த உரிமை கிக்கின் வருகையால் தகர்க்கப்பட்டு வருகிறது.
உதாரணமாக பிரிட்டனில் உள்ள டெலிவரூ என்ற இணைய நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். இது சென்னையில் உள்ள ஸ்விக்கியைப் போன்றது. டெலிவரூ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் ஒப்பந்ததாரர்கள் அல்லது சுயவேலை செய்து சம்பாதிக்கிறவர்கள் என்றளவிலேயே கருதப்பட்டு அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன.
உலகத் தொழிலாளர்கள் அமைப்பின் (International Labour Organisation) ஒரு சர்வேயின்படி பத்தில் ஒன்பது கிக் ஓட்டுநர்கள், தங்களுக்குச் சரியான அளவு சவாரி கொடுக்கப்படுவதில்லை எனவும், பலமுறை சவாரிக்கான தொகை மறுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். தொழிலாளர்கள் உரிமையில் முற்போக்கான பார்வை கொண்ட பிரிட்டன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் (அமெரிக்காவில் அல்ல என்பது முக்கியம்) இது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இந்த விவாதம் மற்றொரு பிரச்சினையையும் வெளிக்கொண்டு வந்துள்ளது.
டெலிவரூ போன்ற கிக் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் ஆரம்பிப்பதற்காக முயற்சி எடுத்தபோது, அது செல்லாது என கிக் நிறுவனங்கள் நீதிமன்றத்துக்குச் சென்றன. ஏனெனில் கிக் தொழிலாளர்கள் சுயவேலை அல்லது ஒப்பந்ததாரர்கள் என்ற வாதத்தை கிக் நிறுவனங்கள் முன்வைத்தன. லண்டன் உயர் நீதிமன்றம் தொழிற்சங்கம் அமைத்துக்கொள்ளலாம் எனக் கூறினாலும், மேல் முறையீட்டில் இது முறியடிக்கப்பட்டது. அதாவது பிரிட்டனின் மக்கள் நல நீதிமன்றமும், கிக் நிறுவனங்களும் ஒரே பக்கத்தில் நின்று தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு முடிவைச் சட்ட உத்தரவாக்கியது. காலனிய ஏகாதிபத்தியம், கரிபீயத் தோட்டத்தில் உள்ள கரும்புத் தொழிலாளர்களை நடத்தியதற்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.
(கட்டுரையின் தொடர்ச்சி இன்று மதியப் பதிப்பில்…)
கட்டுரையாளர் குறிப்பு: முரளி சண்முகவேலன்
முரளி சண்முகவேலன்
ஊடக மானுடவியலாளர், லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும்: முரளி சண்முகவேலன்