அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும்: முரளி சண்முகவேலன்

அரசியல் சிறப்புக் கட்டுரை

டொனல்டு ட்ரம்ப், டிசம்பர் 19ஆம் தேதி வாக்காளர் பிரதிநிதிக் குழுக்களால் (Electoral College), ஜனவரி 20, 2017 அன்று, அமெரிக்க ஜனாதிபதி என தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்துடன், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்க அரசியல் சாசனப்படி, வாக்காளர் பிரதிநிதிக் குழுவின் வாக்களிப்பே – பொதுமக்களின் மொத்த வாக்குகளை மாநிலரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தி 538 வாக்காளர் பிரதிநிதிகள் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை – இறுதி முடிவாகும். இதனடிப்படையில், நடந்துமுடிந்த அதிபர் தேர்தலில் பொதுமக்கள் வாக்கை பெருவாரியாகப் பெற்ற ஹிலாரி கிளிண்டன் (ட்ரம்ப்பை விட 28,64,974 வாக்குகள் அதிகம்) தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

டொனல்டு ட்ரம்பின் வெற்றி எந்தமாதிரியான அரசியலை முன்வைக்கிறது? ட்ரம்பின் ‘அதிர்ச்சி வெற்றி’ குறித்து ஊடகங்களும், ஆய்வாளர்களும், சமூகப் பண்டிதர்களும் எழுதிக் குவித்தவண்ணம் உள்ளனர். முதன்முறையாக, தேர்தலின் முடிவை எதிர்த்து, அமெரிக்கப் பெருநகரங்களில் எதிர்ப்பு ஊர்வலங்களை மக்கள் தன்னிச்சையாக நடத்தினார்கள். ஊடகங்கள் வெளிப்படையாகவே இந்த வெற்றிகுறித்து அதிர்ச்சி தெரிவித்தன. சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் – அமெரிக்கர்களும், மற்ற தேசத்தினரும் – இது எப்படி சாத்தியம் என திகைப்புடன் கேட்டுக் கொண்டனர்.

இந்தத் திகைப்பு, எதை எனக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறது: போக்குவரத்து நெரிசல்மிகுந்த சாலையில், நெடிய கார் வரிசையில் மாட்டிக்கொண்டு அலுவலகத்தில் நேரத்துக்குப் போகமுடியாத ஒருவர், ‘எங்கிருந்துதான் இத்தனைபேர் ஒரே நேரத்தில் இந்தச் சாலையில் கடக்கிறார்களோ?!’ என்று சலிப்பதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் அந்த ஒருவர் நானும், நீங்களும் என்பதை வசதியாக மறந்துவிடுவது பொறுப்பை தட்டிக்கழிக்கும் ஒருவிதமான தந்திர நோய்.

டொனல்டு ட்ரம்புக்கு நம்மைப் போன்ற சாமானியர்களே வாக்களித்தார்கள்.

அது உண்மையில்லையென்றால் பின்னர் யார் தான் வாக்களித்தார்கள்? அவர்கள் நம்மைப் போன்றவர்களா? இந்தக் கேள்விக்கு பலவிதமான பண்டிதத்துவம் நிறைந்த அலசல்கள் முன்வைக்கப்படுகின்றன. அவை எல்லாவற்றிலும் ஓரளவு உண்மையும் உண்டு. ஆனால் சொல்பவரின் அரசியல், நிற, இன அடையாளத்தைப் பொருத்து உண்மைப் பகுதி, பகுதியாகச் சொல்லப்படுகிறது, பதிவு செய்யப்படுகிறது.

சற்று கூர்ந்துநோக்கினால், இந்த அதிபர் தேர்தல் முடிவின் அதிர்ச்சி வெற்றியின் அறிகுறிகள், 2016இன் ஆரம்பங்களிலேயே, அமெரிக்காவுக்கு வெளியே ஐரோப்பாவில் தெரிய ஆரம்பித்துவிட்டது.

அமெரிக்கா மட்டுமல்ல; ஒட்டுமொத்த மேற்குலகில் வெள்ளை இன மக்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம், ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்வீடன், ஆஸ்திரியா – பெருகிவரும் வலதுசாரி மற்றும் இனவெறிச் சிந்தனைகளின் ஆதரவுகளுக்கு காரணமென்ன?

ஆனால் ட்ரம்பின் அதிர்ச்சி வெற்றிக்கு, வெள்ளை இன உழைக்கும் வர்க்கத்தின் (White Working Class) விரக்தியே காரணம் என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. இதுவொரு மிக முக்கியக் காரணமென்று சுதந்திரவாத, (சில) இடதுசாரி கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், ஊடகப் பண்டிதர்கள், அங்கலாய்த்தும் கவலைப்பட்டும் வருகின்றனர். இது எந்தளவு உண்மை?

இது உண்மையெனில், அங்குள்ள இந்திய வம்சாவளியின சாதி இந்துக்கள் ட்ரம்புக்கு வாக்களிக்க வேண்டுமென மொத்தமாகப் புறப்பட்டதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? அது மட்டுமல்ல. குடியரசுக் கட்சியின் கடந்தகால ஜனாதிபதி வேட்பாளர் மிட் ரோம்னியைவிட கறுப்பர்களின் லத்தீனோக்களின் வாக்குகளை டொனல்டு ட்ரம்ப் பெற்றதை, எப்படிப்பட்ட அரசியல் மாற்றமாக நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்?

மாறிவரும் இந்த அரசியல் சூழல், அமெரிக்காவுக்கு மட்டும் பொருந்துமா அல்லது ஐரோப்பாவுக்கும் பொருந்துமா? சுருக்கமாக, இது அமெரிக்கப் பிரச்னையா அல்லது ஒட்டுமொத்த மேற்குலகத்தின் அரசியல் சித்தாந்தப் பிரச்னையா?

Shock victory and commoners Part 1 by Murali Shanmugavelan

சமீபத்தில் நடந்த வாக்கெடுப்பில், ஐக்கிய ராச்சியத்தின் மக்கள் ஐரோப்பாவை விட்டு விலகி நிற்க வேண்டும் (ப்ரெக்ஸிட் / Brexit) என்பது, அங்குள்ள மக்கள் முடிவெடுத்ததற்கும், வெள்ளை இன உழைக்கும் வர்க்கத்தின் (White Working Class) விரக்தியும் காரணம் என்று பரவலாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த பிரச்சாரத்தை முன்னின்று நடத்திய அனைவரும் செல்வந்தர்கள். அவர்களுக்கும் வெள்ளை இன உழைக்கும் வர்க்கத்துக்கும் எந்தவிதமான அரசியல் சித்தாந்த பந்தமும் இல்லை.

அப்படியானால், ப்ரெக்ஸிட் சாத்தியமாக அமைய ஏற்பட்ட காரணிகள் எவை: மேற்குலக சமூகத்தில் உள்ள அசமத்துவத்தால் ஏற்பட்ட விரக்தியா; புத்திசாலித்தனமான பொருளாதார முடிவா? அல்லது ஊடகப் பண்டிதர்களும் இடதுசாரிகளும் கவலையோடு குறிப்பிட்ட ‘பன்மைக் கலாச்சார’ விளைவாக வாழ்வாதார வாய்ப்புகளை இழந்ததால் வெள்ளை உழைக்கும் வர்க்கத்தின் (White Working class) இன வெறுப்பு அரசியலா? அல்லது ப்ரெக்ஸிட் முடிவு ஆங்கிலேய உழைக்கும் வர்க்கத்துக்கு ஏற்பட்ட ஐரோப்பிய ‘இனங்களின் மீதான’ (நிறமல்ல. ஏனெனில், ஐரோப்பியர்களும் வெள்ளையர்களே) வெறுப்பு அரசியலா? ஒருவேளை அது உண்மையானால், தெற்காசியர்கள் அதிகமாக வாழும் பிர்மிங்காம் (50.4%), லெஸ்டர் நகரங்களில் (48.9%) பெருவாரியான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக வாக்களித்ததை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?

அமெரிக்காவுக்கு மீண்டும் வருவோம்: வெள்ளை உழைக்கும் வர்க்கத்துக்கு சற்றும் தொடர்பில்லாத, பிரபல கறுப்பின ராப் பாடகரான கேன்யெ வெஸ்ட், ‘நான் ஒருவேளை வாக்களித்திருந்தால், எனது வாக்கு ட்ரம்புக்கே’ என்று சொல்வதின்மூலம் எந்தவிதமான ‘அரசியலை’ முன்னிலைப்படுத்துகிறார்? கறுப்பின நடிகர் டென்ஸெல் வாஷிங்டன், டொனல்டு ட்ரம்ப் ஆதரவாளரோ என, வாஷிங்டன் போஸ்ட் எழுதியது உண்மையெனில் (டென்ஸெல் மறுக்கவில்லை. மாறாக, இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது ஊடகங்களின் அறம் பற்றி கேமரா முன் ஒரு வகுப்பெடுத்தார்) அதை எப்படி புரிந்துகொள்வது?

இந்த பிரபலங்கள் எல்லாம் அரசியல் விமரிசகர்கள் இல்லையென புறந்தள்ளும் பண்டிதர்களுக்கு: அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டொனல்டு ட்ரம்ப்பே ரியலிட்டி தொலைக்காட்சியின் ஒரு பிம்பம். அதுமட்டுமல்ல; ஹிலாரியின் பிரச்சாரத்துக்கு ஆதரவளித்த மினுமினுக்கும் செல்வந்த ஹாலிவுட் நடிகர்களை, முற்போக்குவாதிகள் பயன்படுத்திக்கொள்ள தயங்கவில்லை. அதே நேரத்தில், ப்ளாக் லைவ்ஸ் மேட்டர் ஹிலாரியை ஆதரிப்பதில் ஆரம்பத்திலிருந்தே தயக்கம் காட்டியது.

2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், டொனல்டு ட்ரம்பின் வெற்றியா அல்லது மேற்கத்திய சமூகம் இதுநாள் வரை முன்வைத்த தாராளவாதம், உலகமயமாக்கம், சுதந்திரவாதம் ஆகிய சித்தாந்தங்கள் உடைய ஆரம்பிப்பதன் அறிகுறியா? அப்படியென்றால், கோடீஸ்வரர் டொனல்டு ட்ரம்பை அமெரிக்க வாக்காளர்கள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

ட்ரம்பின் ஆண் என்ற மப்பு; அவர் பெண்கள்மீது எறிந்த வக்கிரமான வெறுப்புப் பேச்சு; வந்தேறிகளால் உருவாக்கப்பட்ட ‘அமெரிக்க’ தேசத்தில் குடியேறிகளைப் பற்றிய அவரின் துவேசம், அவதூறு – இவையனைத்தையும் ட்ரம்பின் தேர்தல் வெற்றியோடு இணைத்துப் பார்ப்பது எப்படி?

மேற்குலகில், கிழக்கு ஐரோப்பிய இனத்தவர்கள் தொடர்ந்து இனவெறிக்கு உள்ளாகிவரும் வேளையில், அப்பகுதியில் உள்ள ஒரு நாடான ஸ்லோவேனியாவில் பிறந்த மெலனியா என்னும் விளம்பர மாடல் பெண்ணை மூன்றாவதுமுறையாக மணந்து பிறகு, வந்தேறிகளுக்கு எதிராகவே ட்ரம்ப் வெற்றிகரமாக பிரச்சாரம் செய்ததையும், அந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு வாக்களித்த பொதுமக்களையும் விளங்கிக் கொள்வது எப்படி?

அமெரிக்க அதிபர் என்பவர், ஒரு வழமையான அமெரிக்க பிம்பத்தை முன்னிறுத்துபவராகவே இதுவரை இருந்து வந்திருக்கிறார். ஒரு குடும்பம், ஒரு மனைவி, அமெரிக்கக் கனவுகளை முரசொட்டும் கண்ணியமிக்க மகிழ்வான குடும்பம் – இவற்றையெல்லாம் ட்ரம்ப் உடைத்தது எப்படி? அல்லது வாக்காளர்கள் உடைத்தனரா?

எல்லாவற்றுக்கும் மேலாக, ஹிலாரி கிளிண்டன் என்ற சுதந்திரவாத பிம்பம் தோற்றது எப்படி? மிகப் பெரியளவிலான ஊடக ஆதரவு, அவர் பின்நின்ற பில்லியன் டொலர் ஹாலிவுட் நடிகர்கள், பகட்டு இசைக் கலைஞர்கள், வால் ஸ்ட்ரீட் செல்வந்தர்கள், சமூகப் பணிக்கு கொடை செய்யும் கோடீஸ்வர வள்ளல்கள், பெண்ணியவாதிகள் என நீண்ட ஆதரவு வரிசை அவருக்கு வெற்றி தேடித் தராது போனது எவ்வாறு? இந்த பெருநகர, நடுத்தர வர்க்க, தாராளவாத ஆதரவாளர்கள் கூட்டம்தான் அமெரிக்க சுதந்திரவாதத்தின் அடையாளமா? முற்போக்குத்தன்மையும், பாப் இசைபோல ஒரு நுகர்வுப் பொருளாகிவிட்டதா?

அமெரிக்க ஊடகங்கள் கடைசி வரை ஹிலாரி வெற்றி பெறுவார் என்று நம்பியதா அல்லது நம்பவைக்க வாக்காளர்களை முயற்சித்ததா? ஹிலாரி தோல்வியடைந்தவுடன் ஏற்பட்ட அழுகுரல்கள், விரக்தி கூப்பாடுகளின் அரசியல்தன்மையென்ன? தோல்வியடைந்தால் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன் (‘கள்ள ஓட்டு போட முயற்சி நடக்கிறது’) என்று ட்ரம்ப்பின் அழுகுனி வாதத்தை, ஹிலாரியின் அணியினரும் பாட ஆரம்பித்தது எதைக் காட்டுகிறது? இவர்கள் இருவருடைய கொள்கையிலும் உள்ள அரசியல் ஒற்றுமைகள் என்ன?

சமூக வலைதளங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகள் சொல்ல தளம் அமைத்ததால் டொனல்டு ட்ரம்ப் வெற்றிபெற்றாரா? டொனல்டு ட்ரம்பின் ஊடக உத்திதான் என்ன? அவரால், எப்படி ஊடகங்களை முற்றிலும் எதிர்த்துக்கொண்டு இந்த அதிபர் தேர்தலை வெல்ல முடிந்தது?

தேர்தல் சமயத்தில், விடியற்காலை மூன்று மணியளவில் அடிக்கடி ட்ரம்ப் ட்வீட் செய்தது, ஒரு தந்திரமான உத்தியாக இப்போது பார்க்கப்படுகிறது. இந்த ட்வீட்டுகள் மூலம் அதாவது, அன்றைய தினச் செய்திகள் மூன்று மணிக்கு ஊடகத் தொழிற்சாலைகள் தயாரித்துக்கொண்டிருக்கும் வேளையில், ட்ரம்ப் தனது அடிதடி செய்தியை வெளியிட்டு ஊடகங்களின் கவனத்தையும் செய்திக்குவிப்பையும் வெற்றிகரமாக தன்பக்கம் திருப்பிவிட்டார் என்றும்; அதன்மூலம் எந்தச் செய்தி ஊடகங்களில் வர வேண்டும் (அல்லது வரக்கூடது) என்ற தந்திரத்தை தன் கையில் வைத்திருந்தார் என்றும் ஒரு ஊடக பண்டிதப் பார்வை – அவரது வெற்றிக்குப்பின் – வைக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஊடகங்களை வெளிப்படையாக நிராகரித்தும் தனது ட்விட்டர் பக்கங்கள் மூலமாக மக்களுடன் நேரடியாகப் பேசியுமே வெற்றிபெற முடியும் என்று ட்ரம்ப் நிரூபித்திருப்பது, அதிபர் தேர்தலில் இதுநாள் வரை இருந்துவந்த ஊடக சக்தி, அதிகாரம் கிடுகிடுத்துப் போயிருக்கிறது. தேர்தல் கருத்துக் கணிப்பு என்ற வார்த்தை பிரெக்ஸிட்டிற்கு அடுத்தபடியாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் முற்றிலுமாக மரியாதை இழந்துள்ளது. ஊடக பண்டிதர்களுக்கும் வெகுஜன மக்களுக்கும் உள்ள இடைவெளி கடலளவு என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.

முத்தாய்ப்பாக, டொனல்டு ட்ரம்ப் நவம்பர் (2016) மாத இறுதியில் அமெரிக்க ஊடக பிரபலங்களை தனது மாளிகைக்கு அழைத்து ஒரு கூட்டம் கூட்டினார். ஆவலோடு சென்ற பண்டிதர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது: அவர்கள் அனைவரும் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள், நகர்ப்புறத்துக்கு அப்பால் உள்ள வாக்காளர்களின் மனநிலை அறியாதவர்கள் என நேருக்குநேராக ட்ரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார்.

சி.என்.என்-இன் தலைமை அதிகாரி ஜெஃப் ஜக்கரிடம் நேரடியாக, ‘உங்கள் நிறுவனத்தில் உள்ள அனைவரும் பொய்யர்கள், நீங்கள் அதற்காக அவமானப்பட வேண்டும். உங்கள் ஊடகத்தை நான் வெறுக்கிறேன்’ என்று கூறியது, அமெரிக்க ஊடக ஜாம்பவான்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

அதேபோல, வெள்ளை மாளிகையின் தொன்றுதொட்டு வரும் ஜனநாயக மரபான ஜனாதிபதி- பத்திரிகையாளர்களின் வார சந்திப்பு இனி நடைபெறாது (‘அதற்கு தேவை ஒன்றுமில்லை’) என, ட்ரம்ப் வட்டாரத்திலிருந்து ஒரு செய்தி வலம்வர ஆரம்பித்திருக்கிறது. இது உண்மையானால், அமெரிக்க ஊடக சுதந்திரத்துக்கு ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய இடியாகும். ட்விட்டர் இருக்கும் வரை தனக்கு ஊடகங்களின் உதவி தேவையில்லை எனவும் மக்களிடம் நேரடியாகப் பேசுவதே ஜனநாயகம் – அதையே விரும்புவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி எழும் முக்கியக் கேள்வி: மேற்குலக ஊடகங்கள், சாதாரண மக்களின் நாடித்துடிப்பை அறிந்துவைத்திருக்கிறதா? பிபிசி, தி கார்டியன், வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ், லாஸ்ஏஞ்சல்ஸ் டைம்ஸ் (ட்ரம்ப் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று சொன்ன ஒரே பத்திரிகை) போன்ற அனைத்து ஊடகங்களின் மீதும் இக்குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஊடக நடுநிலை என்பது சாத்தியமா? தேவையா?

அமெரிக்கத் தேர்தலும், ட்ரம்பின் அதிர்ச்சி வெற்றியும் மேற்குலக அரசியல் சித்தாந்த நெருக்கடியை உணர்த்தும் ஒரு ஆடி. டொனல்டு ட்ரம்ப், அந்த ஆடியில் தெரிகிற ஒரு முக்கிய அறிகுறி. இதை உள்வாங்கிக் கொள்ள ட்ரம்ப் என்ற மனிதரை அலசினால் மட்டும் போதாது. அமெரிக்க/மேற்கு சமுதாயத்தின் அரசியல், பொருளாதார சித்தாந்தங்கள் திவாலாகி வருவதையே இந்த அதிர்ச்சி வெற்றி உணர்த்துகிறது.

ஜனநாயகம் (மக்கள் சபை, நீதியமைப்பு, அரசு நிர்வாகம்) என்னவோ தொடர்ந்து நிலையாக, பிரச்னையில்லாமல் மேற்கில் நடக்கலாம். ஆனால் மக்களுக்கு பயனுள்ளதாகவும் தொடர்புள்ளதாகவும் ஜனநாயகம் இருக்கிறதா? ஏழை மக்களின் வாழ்வாதார உரிமைகள் ஜனநாயகத்தில் ‘விதிப்படியும்’, ‘சட்டபூர்வமாகவும்’ நிராகரிக்கப்பட்டால் அப்படிப்பட்ட அமைப்பில் மக்களுக்கு எவ்வாறு நம்பிக்கையிருக்கும்?

கேள்விகள் பல: இப்பத்தியில் எழுப்பப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் பதிலோ, நீண்ட ஆய்வுக் கட்டுரையோ எழுதும் நோக்கம் கிடையாது; முடியாது. ஆனாலும் இக் கேள்விகளையும், இவை உருவான சமூகச் சூழலையும் நாம் அறிய முயற்சிப்பதும், ஒரு விவாதத்தை தொடங்குவதும் முக்கியமான ஆரம்பமாக இருக்கும்.

ஜனவரி 20 முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இக்கேள்விகள் குறித்த அலசல்களை முன்வைப்பதும், அதன்மூலமாக மேற்குலகம் சந்தித்துவரும் அரசியல் நெருக்கடிகளை புரிந்துகொள்வதற்கான ஒரு எளிய முயற்சியாக மின்னம்பலத்தில் ஒரு மினி தொடர் வெளிவரவுள்ளது.

கட்டுரையாளர் குறிப்பு: முரளி சண்முகவேலன்

Shock victory and commoners Part 1 by Murali Shanmugavelan

[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் சோஷலிச அற்புதம் சாத்தியமா? – மினி தொடர்- முரளி சண்முகவேலன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *