சவுதி இளவரசர்- ஈரான் அதிபர் போன் உரையாடல்: இஸ்ரேல்-ஹமாஸ் போரில் திருப்பம்!

Published On:

| By Aara

saudi prince iran president phone call on israel hamas war

ஹமாஸ் அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதல் காசா நகரையே சிதைத்து சின்னாபின்னமாக்கியுள்ள நிலையில்… கடைசி ஹமாஸ் பயங்கரவாதி அழியும் வரை எங்கள் போர் தொடரும் என்று கூறியுள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு.

மேலும் போர் காலம் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு போர் அமைச்சரவையும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நெதன்யாஹுவின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் முக்கிய திருப்பமாக  ஈரான் அதிபர்  சவுதி அரேபிய பட்டத்து இளரவசர் இருவரும் பாலஸ்தீன நிலை பற்றி முதன் முறையாக தொலைபேசி உரையாடல் நடத்தியிருக்கிறார்கள். ஈரான் அதிபர் இப்ராஹிம் ராய்சி, மற்றும் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் நேற்று (அக்டோபர் 11) பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் பற்றி விவாதித்தனர். சீனாவின் முயற்சியின் பேரில் இந்த இரு தலைவர்களும் பேசியதாக அரேபிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இருவருக்கும் இடையே நடக்கும் முதல் தொலைபேசி உரையாடல் இது என்பது குறிப்பிடத் தக்கது. சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையே பல முரண்பாடுகள் நிலவிய நிலையில் இப்போது பாலஸ்தீனத்து மக்களை கருதி இந்த உரையாடல் நடந்துள்ளது.

சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று இரவு  போன் செய்துள்ளார். அப்போது அவர்கள் காசா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தற்போது இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதல் பற்றியும், பாலஸ்தீனத்து மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடி பற்றியும் விவாதித்ததாக சவுதி அரசின் அதிகாரபூர்வ  செய்தி நிறுவனம் (SPA) தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்து மக்களைக் காப்பாற்ற சர்வதேச நாடுகளுடனும், வளைகுடா நாடுகளுடன் இணைந்து செயல்படுவதாக அப்போது சவுதி இளவரசர் உறுதியளித்துள்ளார் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானிய அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏவும் இந்த போன் உரையாடல் பற்றி அறிவித்தது, இருவரும் பாலஸ்தீனத்திற்கு எதிரான போர்க்குற்றங்களை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி விவாதித்தாக ஈரான் அரசு கூறியுள்ளது.

இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களின் தாயகமான சவூதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே சமீபமாக ஓர் இணக்கப் போக்கு ஏற்பட்டு வந்தது. இதை வளைகுடா நாடுகள் அதிர்ச்சியோடும் அச்சத்தோடும் பார்த்து வந்தன. இந்நிலையில் இந்த போக்குக்கு தற்போதைய இஸ்ரேல்-ஹமாஸ் போர் கடும் அடியை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஈரான் அதிபர் மட்டுமல்லாமல் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனும் சவுதி இளவரசருடன் இஸ்ரேல் விவகாரம் குறித்து போனில் பேசியிருக்கிறார். இதனால் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தரவேண்டிய ஒரு தார்மீக நெருக்கடிக்கு சவுதி அரேபியா தள்ளப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

ஈரான் அதிபரின் இந்த சாமர்த்தியமான செயலால், சவுதி அரேபியா தற்போது பாலஸ்தீன மக்களை காப்பாற்ற  வெளிப்படையாக வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் வளைகுடா அரசியலை ஊன்றி கவனிப்பவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

ஜப்பான் நிறுவனத்தின் முதல் இந்திய தூதர் தமன்னா

நாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel