ஒரு கட்சியில் இருந்து இன்னொரு அரசியல் கட்சிக்கு பிரமுகர்களும், நிர்வாகிகளும் மாறுவது வழக்கமான காட்சிதான். ஆனால் நேற்று (ஜூன் 25) சேலத்தில் நடந்த ஒரு நிகழ்வு கடலூர் திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காரணம், திமுகவின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சி.வி. கணேசனின் மாப்பிள்ளை பொன்னார் சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அக்கட்சியில் சேர்ந்ததுதான்.
ஜூன் 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு அதிமுகவின் எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளரான திருச்சி சீனிவாசனுடன் அமைச்சர் சி.வி. கணேசனின் மாப்பிள்ளை பொன்னார் சேலம் நெடுஞ்சாலை நகரில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்குச் சென்றார்.
பொன்னாருக்கும் திருச்சி என்பதால் இருவருக்கும் இடையே அறிமுகம் உண்டு. அந்த அடிப்படையில் சீனிவாசனோடு சேலத்துக்கு சென்றார் பொன்னார்.
ஏற்கனவே அமைச்சர் கணேசனின் மாப்பிள்ளை அதிமுகவில் சேர விரும்புவதை எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு சென்று நேரம் கேட்டிருக்கிறார் சீனிவாசன்.
அதைக் கேட்டு அதிர்ச்சியோடு ஆச்சரியப்பட்ட எடப்பாடி, ‘அமைச்சர் கணேசனின் மாப்பிள்ளையா? அவர் பொண்ணைக் கட்டிய மாப்பிள்ளையா?’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். அதற்குப் பிறகுதான் நேரம் கொடுத்தார்.
இதையடுத்துதான் அமைச்சர் கணேசனின் மாப்பிள்ளை பொன்னார் சேலத்தில் எடப்பாடியின் வீட்டில் அவரை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அவரை அதிமுகவுக்கு வரவேற்ற எடப்பாடி, ‘நல்லா கட்சிப் பணி செய்யுங்க, இங்க உழைப்புக்கு உரிய மரியாதை பலன் உண்டு, திமுக மாதிரி இல்ல’ என்று சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார்.
ஓர் அமைச்சரின் மாப்பிள்ளையே திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தது கடலூர் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து கடலூர் திமுகவில் விசாரித்தபோது,
“அமைச்சர் கணேசன் தனது மகன் வெங்கடேசனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்று அவரது மாப்பிள்ளைக்கு வருத்தம்.
மாவட்டத்தில் அமைச்சர் செல்லவேண்டிய பல்வேறு நிகழ்வுகளிலும் அமைச்சரின் மகன் கலந்துகொண்டு வருகிறார்.
சில நாட்களுக்கு முன் திமுக கடலூர் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக அமைச்சரின் மகன் வெங்கடேசன் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தான் நிர்வகித்து வந்த திமுக தொடர்பான வாட்ஸ் அப் க்ரூப்களை எல்லாம் கலைத்துவிட்டார் அமைச்சரின் மருமகன் பொன்னார்.
சில நாட்கள் யோசித்தவர் தனது நண்பரான திருச்சி சீனிவாசன் மூலமாக திடீரென அதிமுகவில் சேர்ந்துவிட்டார்” என்கிறார்கள்.
அமைச்சர் தரப்பில் விசாரித்தபோது, “இதனால் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை” என்கிறார்கள்.
ஒரே குடும்பத்தில் மாமனார் திமுக அரசில் அமைச்சர், மாப்பிள்ளை அதிமுகவில் என்பதுதான் இப்போது கடலூரில் பேச்சாக இருக்கிறது.
–வேந்தன், வணங்காமுடி
தூய்மை பணியாளர்களுக்கு புதிய ஆணையம் கோரி ஆளுநரிடம் முறையீடு!
தமிழக காங்கிரஸ் தலைவர்: மாற்றப்படுகிறாரா அழகிரி?