நடிகர் விஜய் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், கட்சியை வலுப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டுள்ளார்.
அந்தவகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னை பனையூரில் இன்று (பிப்ரவரி 19) நடைபெற்றது.
இந்த கூட்டம் எதற்காக என்று வெற்றிக் கழக வட்டாரத்தில் விசாரித்தபோது, ” தமிழக வெற்றிக் கழகம் என தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்த கையோடு, அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக கட்டமைப்பு ரீதியாக மாற்றுவதில் பல சவால்கள் உள்ளன.
விஜய் மக்கள் இயக்கத்தில் உறுப்பினராக இருக்கிற பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியில் இணைவார்களா என்ற கேள்வி இருக்கிறது. அதோடு தமிழக வெற்றிக் கழகத்துக்கு புதிய உறுப்பினர்களும் சேர்க்க வேண்டியுள்ளது.
தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகளை கட்சியின் நிர்வாகிகளாக எப்படி வகைப்படுத்துவது என்பதும் இன்றைய கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விஜயகாந்த் தனது நற்பணி மன்றங்களை தேமுதிக என்ற அரசியல் கட்சியை உருவாக்கியபோது எப்படி மாடிஃபிகேஷன் செய்தார் என்பது உள்ளிட்ட விவரங்களையும் விஜய் ஆராய்ந்து வருகிறார்.
இந்த விவகாரங்கள் இன்றைய கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கூட்டம் தொடங்கியபோது விஜய் நேரடியாக வரவில்லை. புஸ்ஸி ஆனந்த் தான் கூட்டத்தை ஒருங்கிணைத்துள்ளார்” என்கிறார்கள்.
வேந்தன், செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ்நாடு பட்ஜெட் 2024: சென்னை… டிராபிக் ஜாம்- அகலப்படுத்தப்படும் சாலைகள்!
TN Budget : கீழடிக்கு ரூ. 17 கோடி ஒதுக்கீடு!