மினி தொடர் : ஐக்கிய ராஜ்ஜியத்தில் சோஷலிச அற்புதம் சாத்தியமா? – முரளி சண்முகவேலன்

அரசியல் சிறப்புக் கட்டுரை

கட்டுரை 5 – அரசியல் மேலாளர்கள், தொழில் தலைவர்கள்

அமெரிக்காவின் துணை அதிபராக அல் கோர் பதவியேற்ற போது அவர் [சொன்ன ஒரு](https://books.google.co.uk/books) அறிக்கை “நமக்கு(ம்) வாடிக்கையாளர் உள்ளனர். அவர்களின் பெயர், அமெரிக்க மக்கள்.”

உலகம் முழுவதும் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் குறிப்பாக – தகவல் மற்றும் நிதி முதலீட்டியத்தின் நிர்வாகிகள், இப்போது [தலைவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.](https://www.forbes.com/sites/davidkwilliams/2017/01/03/top-10-list-americas-most-influential-business-leaders-today/#408b42596e67)

இந்த இரு குறிப்புகளும், இந்த மினி தொடருக்கு முக்கியமானது. எந்த வகையான சமூக அரசியல் நிகழ்வுகள் இக்குறிப்புகளுக்குப் பின்னால் பொதிந்திருக்கின்றன என்று பார்க்கலாம்.

லாபம் சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகிகளை தலைவர்கள் எனச் சொல்வதும்; குடிமக்களை வாடிக்கையாளர் போல ‘மரியாதையாக நடத்த வேண்டும்’ என்பதையும் பல பொது மன்றங்களில் நாம் அடிக்கடிக் கேட்கிறோம். இது வெறும் மொழி மாற்றம் மட்டுமல்ல: நமது கண் முன்னால் நிகழ்ந்து கொண்டிருக்கிற முக்கியமான அரசியல்/கலாச்சார மாற்றத்தைச் சுட்டுகிறது. அது என்ன மாற்றம்?

பொருள்சார் முன்னேற்றம் லாப நோக்கோடு இயங்கும் வியாபாரச் சூழ்நிலையிலேயே நிகழமுடியும். இம்முன்னேற்றமே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. எனவே வியாபாரத் தன்மை இல்லாத அரசு வீண்.

உற்பத்தி உள்பட்ட அனைத்து வியாபாரங்களும் நடைபெற வாடிக்கையாளர் அவசியம். எனவே, வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்துவதிலேதான் ஒரு வியாபாரத்தின் வெற்றி தோல்வி, லாப நட்டம் தீர்மானிக்கப்படுகிறது – என ஒரு பொதுப்புத்தி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுப்புத்தியை அரசு இயந்திரமும், பொது மற்றும் சேவைத் துறைகளும், உள்வாங்கி – குடிமக்களை ஒரு வாடிக்கையாளரைப் போல் நடத்தினால் நாடு நலமுறும், செழிக்கும். அனைவரும் மகிழ்வுறுவர்.

Is a Socialist Miracle Possible in the United Kingdom part 5

சுருக்கமாகச் சொன்னால், அரசுகள் வியாபாரங்களுக்கு உரிய தன்மைகளோடு நடத்தப்பட வேண்டும். அரசுகளை திறன்பட மேலாண்மை (manage) செய்வதின் மூலம் குடிமக்களின் தேவைகளை முற்றிலும் நிவர்த்தி செய்ய முடியும். இதன் மூலம் பொருள் ஈட்டும் தொழில் தலைமைகளை (business leadership) வெற்றிகரமாக உருவாக்கி அரசின் மீது ஆளுமை செய்ய முடியும்.

இந்த வாதத்தின் வாயிலாக அரசின் பொதுத்துறை, அது அளிக்கும் அத்தியாவசியச் சேவைகள் ஆகியவை ஒரு சுமை எனவும், ‘வாடிக்கையாளர்களுக்கு’ எதிரானது என்ற கருத்தாக்கமும் விதைக்கப்படுகிறது.

குடிமக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கிட ‘வியாபாரத்திலிருந்து வாடிக்கையாளருக்கு’ (business to consumer) என்ற வடிவமே நேர்த்தியானது என்ற நவதாராள பொருளாதாரக் கொள்கையும் நுட்பமாக திணிக்கப்படுகிறது.

அரசு இயந்திரங்களும், அரசின் தலைமைகளும் நிர்வாகிகளாக மாறி வருவது இன்று உலகெங்கும் உள்ள இயல்பாக மாறிவிட்டது. இவற்றின் முக்கிய விளைவு: அரசியல் கருத்தாக்கங்கள் மறைந்து உலகெங்கும் உள்ள பெரும்பான்மையான அரசுகள் ஒரு பன்னாட்டு நிறுவனத் தன்மையுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த புதுவகையான ஒருமைத் தன்மை உலகமயமாக்கலையும் தகவல் தொடர்பு முதலீட்டியத்தின் வேகத்தையும் விரைவுபடுத்தி இருக்கிறது.

ஒரு அரசு வலது சாரியா, இடது சாரியா, சோஷலிசமா, கம்யூனிசமா – என்பது இப்போதைய உலகில் ஒரு பொருட்டல்ல. சீனா, ஐக்கிய ராச்சியம், ஃப்ரான்ஸ், அமெரிக்கா, இந்தியா – என வளர்ந்த, வளரும் நாடுகளின் பொருள் உற்பத்தி, வியாபாரக் கொள்கைகள் நவ தாராளம் என்ற ஒரே குடையின் கீழ் வருகின்றன. எனவே அனைத்து அரசுகளும் ஒரே மாதிரியான வியாபாரத் தன்மையுடன் இயங்குகின்றன. இதனாலேயே பன்னாட்டு வியாபார ஒப்பந்தங்கள், நிதி வர்த்தகங்கள், தொழில்நுட்ப பரிமாற்றம், தகவல் தொடர்பு பகிர்வு எல்லாம் சாத்தியமாகிறது. இதற்கு சில விதிவிலக்குகளும் உண்டு.

எடுத்துக்காட்டாக நவ தாராளத்தில் (மூன்றாவது உபாய பாணியில்) பிடியில் இருந்து வரும் ஐக்கிய ராச்சியத்தில் குடி மக்களுக்கான மருத்துவச் சேவை இன்றளவும் அரசினால் பொதுத்துறையாகவே நடத்தப்பட்டு வருகிறது. மேற்கு ஐரோப்பாவில் இன்றளவும் இருக்கும் அரசு அளிக்கும் தரமான இலவச மருத்துவம் என்பது வியாபாரத் தன்மையற்ற மகத்தான பொதுச் சேவையாகும்.

Is a Socialist Miracle Possible in the United Kingdom part 5

தேசிய பொதுநலச் சேவை (National Health Service) என்பது ஐக்கிய ராச்சியத்தின் நவீன மதம் என்றும் சொல்லும் அளவுக்கு புனிதமானதாக உருவாக்கப்பட்டுள்ளது. பெரும் பொருள் ஈட்டும் வியாபாரிகளைத் தவிர இலவச மருத்துவத்துக்கு எதிரானவர்கள் மிகக் குறைவு. கிட்டத்தட்ட ஒவ்வொரு நபரும் பெருமிதம் கொள்ளும் பொதுத்துறை ஐக்கிய ராஜ்ஜியத்தின் மருத்துவம் என்றால் மிகையல்ல. தொடர்ச்சியாக வந்த அரசுகள், மறைமுகமாக மருத்துவத் துறையை தனியாருக்குக் கூறு போடுவதும் அவ்வப்போது நடைபெறுகிறது. இத்தேர்தலில் கோர்பினுக்கு ஆதரவு கூடியதில் அரசு மருத்துவத் துறையை, தனியார் மயமாக்கப்பட மாட்டாது என்று அளித்த உறுதியும் ஒரு காரணம்.

இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலோ எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மருத்துவத் துறையில் உள்ள தனியார்களின் கட்டுப்பாடும், பொது மருத்துவத்தின் மீது உள்ள அலட்சியமும் மாறப் போவதில்லை. அரசு [மருத்துவத்துறைகளின் செயல்பாடுகளோ](https://www.youtube.com/watch?v=MNfBJa-VrBk) படு மோசம். தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் ‘உதவியோடு’ இறந்தவர்கள் அதிகம். இப்படி வருபவர்களை அனுமதியின்றி இறக்க வைப்பதற்கு கறக்கப்படும் கட்டணம் பற்றி கேட்டாலோ தலை சுற்றுகிறது.

குடிமக்களின் உடல் நலம், சந்தைப் பொருளாதாரத்தில் ஒரு பண்டமாக்கப்பட வேண்டுமா என்ற விவாதம் இந்தியாவில் எழுவதே இல்லை. மாறாக தனியார் மருத்துவமே (கல்லூரிகள் உள்பட) தீர்வு என்பது நமது மூளையில் ஆழப்பதிந்து விட்டது: மருத்துவம் என்பது வியாபாரம், குடிமக்களின் உடல் வியாபாரப் பண்டம். வியாபாரிகளின் நிர்வாகிகளாக அரசு மாறிவிட்ட பிறகு, தொழில் தலைமைகள் (business leaders) அரசுக்கு ஆணை போடும் எஜமானர்களாகி விட்டனர்.

அரசின் கொள்கைகளோ வியாபாரிகளின் தலைமைக்கு உதவினால் ஒழிய பொருள் உற்பத்தி பெருக்க முடியாது (படிக்க மூன்றாவது உபாயத்தின் காவலர்கள்). இந்த சூழ்நிலையில், அரசியல் தலைமை என்ற பதத்தின் தன்மைகள் முற்றிலுமாக மாறிவிட்டது.

வாக்கு அரசியலில் வெற்றி பெற முடியாது போன அண்ணல் அம்பேத்கர், வாக்கு அரசியலுக்கே வராத ஈ.வெ.ரா பெரியார், நிறவெறிக்கெதிராகப் போராடி மாய்ந்த ஸ்டீவ் பிக்கோ, மால்கம் எக்ஸ் – போன்றவர்களில் ஒருவர் கூட இன்றைய உலகமயமாக்கப்பட்ட ‘ஜனநாயக அரசுகளின்’ தலைவராகத் தேறுவார்களா என்பது சந்தேகமே.

வியாபார மேலாளர்கள் சமூகத் தலைவர்களாக வெற்றிகரமாக உருமாற்றம் அடைய ஆரம்பித்தது (business managers have become social leaders) [மூன்றாவது உபாயத்தின்] ஒரு முக்கிய விளைவு. அரசு இயந்திரத்தை ஒரு நிர்வாகத் தரகராக மாற்ற, உலகெங்கும் உள்ள கல்வி நிறுவனங்களை வியாபாரத் தலைவர்கள் குறிவைத்தனர்.

கல்வியின் பயன் பொருளீட்டுதல் மட்டுமே; பல்கலைக்கழகங்களின் வெற்றியானது வேலை தேடித்தருவதில் மட்டுமே என்ற பொதுப்புத்தியை நம்மிடம் வெற்றிகரமாக வியாபாரிகள் வித்திட்டு விட்டனர் என்று சொன்னால் மிகையாகாது.

எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் உள்ள கல்வி சாலைகளின் நோக்கம் என்னவாக இருக்கிறது? பரந்த வாசகத் தன்மையும், சமூக நோக்கையும் வளர்க்கும் நோக்கில் மாணவர்கள் இருக்கிறார்களா என்றால், முற்றிலும் இல்லை என்பதே கசப்பான உண்மை.

வளர்ந்த நாடுகளில் உள்ள நிலையும் நன்றாக இல்லை. கடந்த இருபதாண்டுகளில் கலை, மொழி, மானுட, சமூகவியல் கல்விகளுக்கான இளங்கலை வகுப்புகள், ஆய்வுத் துறைகள், ஆசிரியர்கள் நியமனம் எல்லாம் உலகெங்கும் சுருங்கிக் கொண்டு வருகிறது.

Is a Socialist Miracle Possible in the United Kingdom part 5

ஜப்பானில் உள்ள மொத்தம் 60 பல்கலைக்கழகங்களில் 26 பல்கலைக்கழகங்கள் கலை, மானுட, சமூகவியல் சம்பந்தமான பாடங்களை [நிறுத்த அல்லது குறைத்துக் கொள்ள அந்நாட்டு அரசு முடிவு](https://www.timeshighereducation.com/news/social-sciences-and-humanities-faculties-close-japan-after-ministerial-intervention) எடுத்துள்ளது. அமெரிக்காவிலும் இறங்கு முகமே. ஒன்றிய அரசின் நிதியானது [2009-ஆம் ஆண்டில் இருந்து குறைந்த வண்ணம் இருக்கிறது.](http://www.nytimes.com/2013/12/02/us/humanities-studies-under-strain-around-the-globe.html?mcubz=0)

பிரிட்டனிலோ இந்த நிலை இன்னும் மோசம்: 2010-ஆம் ஆண்டில் ப்ரௌன் பிரபுவின் ([Lord Browne](https://en.wikipedia.org/wiki/John_Browne,_Baron_Browne_of_Madingley)) அறிக்கை [உயர்கல்வியில் முக்கியமான மாற்றங்களை](https://www.theguardian.com/education/2010/oct/12/browne-review-universities-set-fees) பரிந்துரைத்தது. கன்சர்வேட்டிவ் ஆட்சி இவற்றை உடனடியாக செயல்படுத்தியது: இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பல அம்சங்கள் பிரிட்டனின் கல்வித்துறையை முற்றிலும் நிலைகுலையச் செய்யக்கூடியவை. இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் என்னவெனில்: அறிவியல், என்ஜினியரிங், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகிய கல்விக்கு அரசின் நிதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு – கலை, மானுட, சமூகவியல் தொடர்பான பாடங்களுக்கான ஆசிரியர்களின் பதவிகள் மற்றும் நிதி ஆகியவை குறைக்கப்படும்; அல்லது சிறிது சிறிதாக நிறுத்தப்படும். கல்லூரி பட்டப்படிப்புக்கான மாணவர்கள் செலுத்தவேண்டிய ஆண்டுக் கட்டணத்தை பல்கலைக்கழகங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். 6000 பவுண்டுக்கு (கிட்டத்தட்ட 6 லட்சம் ரூபாய்) அதிகம் வசூலிக்கும் பட்சத்தில் அரசுக்கு 1000 பவுண்டு வரி செலுத்திட வேண்டும், அவ்வளவே. மேலும் இளங்கலை கலை, மானுட, சமூகவியல் படிப்புக்கு அரசு உதவிடக் கூடாது.

இதை எதிர்த்து லண்டனில் மாணவர்கள் ஒன்று திரண்டனர். ‘அரசியல் அக்கறையற்ற நுகர்வுப் பண்டங்களே மாணவர்கள்’ என்ற அரசியல் வியாபாரிகளின் நினைப்பை இந்தப் போராட்டம் மாற்றியது. கிட்டத்தட்ட [50,000 பேர் பங்கு கொண்ட இந்தப் போராட்டம்](https://www.theguardian.com/education/2010/nov/10/student-protest-fees-violent) வன்முறையாக வெடித்தது. மாணவர்களின் இந்த அதிருப்தியும் கோர்பின் எழுச்சிக்கு ஒரு காரணம். நிற்க.

பிரபு ப்ரௌனின் உயர்கல்வி அறிக்கை.

இந்த அறிக்கையை எழுதிய பிரபு ப்ரௌன் பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி. பெட்ரோலிய வியாபாரத்தின் தலைவர்

ஒரு சமூகத்தின் அறிவின் ஊற்றான பல்கலைக்கழகங்களின், ஆய்வு நிறுவனங்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பது எப்படி சாத்தியம் ஆயிற்று?

பின் காலனீயத்துவ சிந்தனையாளரான எட்வர்ட் சையித்திடம் இதற்கான பதில் உள்ளது. 1993-ஆம் ஆண்டு [‘அறிவுஜீவிகளின் பங்கு’](http://www.mohamedrabeea.com/books/book1_10178.pdf) என்ற தலைப்பில் பிபிசியின் ரீத் உரையில் [(Reith lecture on The Role of the Intellectual)](http://www.bbc.co.uk/programmes/p00gxr1s) ஒட்டு மொத்த நவீனச் சமூகத்தின் சிந்தனைச் சீர்கேடு பற்றி மிக நுட்பமாக குறிப்பிடுகிறார். இச்சீர் கேட்டிற்குக் காரணம், மாறி வரும் அறிவுஜீவிகளின் தன்மைகளெனெ அடையாளம் காட்டுகிறார்.

சையித்தைப் பொறுத்தவரை, **அறிவுஜீவி சமூகத்தின் குரலைப் பிரதிபலிப்பவர் அல்ல. பெரும்பான்மை விருப்பத்தின் பிரதிநிதியும் அல்ல. அவர் சார்ந்துள்ள சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்புபவர். அப்படி எழுப்பப்படும் கருத்து, சமூகத்தில் உள்ள** பெரும்பான்மையானவர்களில் கருத்துக்கு எதிரானதாக இருந்தாலும் மன உறுதியுடன், அஞ்சாது தனது கருத்துகளை முன் வைப்பவரே அறிவுஜீவி.

அதிகார பீடத்திடம் மெய்யுரைப்பவரே (Speaking Truth to Power) உண்மையான அறிவுஜீவி. புரட்சி, சமூக மாற்றம், அநீதிகளுக்கு எதிராக திரள்வது – ஆகிய மனநிலைகளை மக்களிடம் தோற்றுவிக்கக்கூடிய தன்மை படைத்தோராக இந்த அறிவுஜீவி இருக்க வேண்டும்.

எனவே அறிவுஜீவி என்பவர் ஒரு கருத்தாக்கத்தின் பிரதிநிதி. அவர் சமர்த்தர் அல்ல: மயக்கும் திறன் கொண்டவரோ, எல்லாக் கேள்விகளுக்கும் பதில் வைத்திருப்பதாகச் சொல்லப்படும் வேதப் புத்தகமோ அல்ல. நம்முடன் உரையாடுபவர், நம்மோடு சேர்ந்து கேள்வி எழுப்புபவர். அக்கேள்விகள் நமக்கு விருப்பமற்றதாகக் கூட இருக்கலாம்.

ஆனால் தற்போதைய அறிவுஜீவிகளின் பங்கு இம்மாதிரி இல்லை என்று சையித் சுட்டிக்காட்டுகிறார். இதற்கு ஒரு உதாரணமாக ஊடக பண்டிதர்கள் என்றழைக்கப்படும் மீடியா இண்டெலெக்சுவல்ஸ் (media intellectuals) என்னும் இனத்தைப் பார்க்கலாம். தமிழ் தொலைக்காட்சிகளில் இந்தப் பண்டிதர்களை நாம் தினமும் பார்க்கிறோம் / கேட்கிறோம். நம்மில் பலர் இவர்களை அறிவுஜீவுகள் பட்டியலில் சேர்க்க விரும்ப மாட்டோம். ஆனால் பொதுப்புத்தி அதுவல்ல: நாம் விரும்புகிறோமோ இல்லையோ இவர்களின் குரல்களே தினமும் தமிழ்நாட்டில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த மாதிரியான ‘சமூக ஆர்வலர்களையே’ தொழில்சார் அறிவுஜீவிகள் (professional intellectuals) என்று எட்வர்ட் சையித் குறிப்பிடுகிறார். இவர்களின் பட்டியல் நீளமானது. ஊடகத்துறையையும் தாண்டியது.

கம்ப்யூட்டர் விற்பன்னர், ஆலோசகர்கள் (consultants and advisors), பொதுவான மேலாளர்கள் (generic managers) – பட்டய கணக்கர்கள், பங்குச்சந்தை தரகர்கள், நவீன உலகத்தின் அறிவுஜீவிகளின் உதாரணமாக இவர்களை சையித் குறிப்பிடுகிறார். குறிப்பாக, தினசரி ஊடகத் துறையில் தோன்றி வெவ்வேறு துறை குறித்து அயராது கருத்துகளைக் கக்கும் பொது அறிவுஜீவிகளை கவலையுடன் அடையாளப்படுத்துகிறார். இதே மாதிரியான அறிவுஜீவிகள் அரசுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். பன்னாட்டு வளர்ச்சி நிறுவனங்களில் உள்ள ஆலோசகர்களையும் (International development consultant) இந்தப் பட்டியலில் சொல்லலாம்.

இன்றைய உலகில் உற்பத்தி மற்றும் தகவல் பரிமாற்றம் செய்யும் துறைகளில் வேலை செய்வோர் எல்லாம் அறிவுஜீவிகளாகி விட்டனர் என்று சையித் குறிப்பிடுகிறார். மேலும் இந்த மாதிரியான பண்டிதத்தனம் ஆழமானதல்ல என்பதாலும், அவைகளின் அடிப்படைத் தன்மை வியாபாரமாக இருப்பதால் தொழில்சார் அறிவுஜீவிகளின் அடிப்படைத் தன்மைகளில் ஒன்றும் பெரிய வேறுபாடு இருப்பதில்லை. எனவே, நேற்றைய சமூக ஆர்வலர் இன்றைய சுற்றுப்புற சூழல் வாதியாக முடியும். நேற்று ரியாலிட்டி டிவி நட்சத்திரம், இன்று அவரே அரசியல் தலைவர். மொந்தை வேறு, கள் ஒன்றே.

லண்டனில் மூன்று நாள் முன்பு, ஈஸி ஜெட் என்ற பட்ஜெட் விமான சேவையின் நிர்வாக இயக்குனர் [கரோலின் மக் கோல்](https://www.ft.com/content/272cc80e-912c-381a-8088-38a197a7986a), ஐக்கிய ராஜ்ஜியத்தின் [ஐடிவி என்ற தொலைக்காட்சி](https://www.itv.com/) ஊடகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். விமான சேவைக்கும், தொலைக்காட்சி ஊடகத்திற்கும் என்ன தொடர்பு? ஒன்றுமில்லை தான்.

ஆனால் இரண்டு நிறுவனங்களின் அடிப்படை வியாபாரத் தன்மைகளும் முறைகளும் (features and processes) ஒன்று. எனவே நிர்வாக தலைவர் எந்த நிறுவனத்துக்கும் தலைவராகலாம். பெட்ரோலிய நிறுவனத்தின் முன்னாள் ‘தலைவர்’ பிரபு ப்ரௌன் – ஐக்கிய ராச்சியத்தின் எதிர்காலக் கல்வி, ஆய்வைப் பற்றிக் கூட கொள்கை முடிவு செய்யலாம். ப்ரௌனைப் பொறுத்தவரையில் கல்வியும் பிரிட்டிஷ் பெட்ரோலியமும் அடிப்படையில் ஒரு வியாபார நிறுவனம். எனவே, அவற்றின் உற்பத்தி விதிகளும் ஒன்றே.

அதனால் தான், 2008 ஆம் ஆண்டின் நிதி நெருக்கடியில் பெரிதும் சர்ச்சைக்குள்ளான கோல்ட்மேன் சாக்ஸ் என்னும் நிதி முதலீட்டிய நிறுவனம் ஒபாமாவின் தேர்தலுக்கும் நிதி அளித்தது; ட்ரம்புக்கும் தொடர்ந்து ஆலோசனை சொல்லி வருகிறது. உண்மையான அறிவுஜீவிகளும், மாற்றம் குறித்து கேள்வி எழுப்பும் கருத்தாக்கங்களும் மறைந்து வருகிற நவ தாராள அரசியல் உலகில் அரசும், அரசியல்வாதிகளும் ஒரு வங்கி நிர்வாகிகளுக்கான தன்மையுடவர்களாக சுருங்கிவிட்டனர் என்பதே உண்மை.

ஐக்கிய ராச்சியத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் இந்த நிலைதான்.

தங்களை ஒரு வாடிக்கையாளரைப் போலப் பாவித்து, மேற்கத்திய அரசுகள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்த அடிப்படை அக்கறையின்மை (அல்லது வியாபாரத்தன்மை) அங்குள்ள ஏழை மக்களை வெகுவாகத் தாக்க ஆரம்பித்திருக்கிறது. எனவே தங்களை குடிமக்களாக கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்ற குரல் மக்களிடமிருந்து ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

கட்டுரையாளர் குறிப்பு :

Is a Socialist Miracle Possible in the United Kingdom part 5

முரளி சண்முகவேலன், ஊடக மானுடவியலாளர்.

லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.

கட்டுரை 1. [ஐக்கிய ராஜ்ஜியத்தில் சோஷலிச அற்புதம் சாத்தியமா?]

கட்டுரை 2. [நரி வேட்டை அரசியல்]

கட்டுரை 3. [மூன்றாவது உபாயத்தின் காவலர்கள்]

கட்டுரை 4. [திறனாளர்களும் தொழிலாளர்களும்]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *