கட்டுரை 3. மூன்றாவது உபாயத்தின் காவலர்கள்
ஐக்கிய ராச்சியத்திலுள்ள பெருவாரியான ஊடகங்கள் லேபர் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் தலைமைக்கு எதிரான நிலைப்பாடுடன் இருந்ததைப் போன வாரம் பார்த்தோம்.
ஜெரிமி தலைமைப் பதவிக்கு தகுதியானவர் அல்ல என்றும், இன்றைய சமூகத்துக்கு ஒத்துவராத கருத்தாக்கங்களை தனது அரசியல் கொள்கைகளாக வைத்திருக்கிறார் என்றும் ஊடகங்கள் மட்டுமல்ல, அவரது கட்சியில் உள்ள செல்வாக்கு மிக்க தலைவர்களும் வெளிப்படையாக கருத்துத் தெரிவித்தவண்ணம் இருந்தனர்.
முன்னாள் பிரதமர் டோனி ப்ளேர், “லேபர் வாக்காளர்கள், வரும் தேர்தலில், திறந்த மனதுடன் கன்சர்வேட்டிவ் (பழமைவாத) அல்லது லிபெரல் டெமாக்ரடிக் (சுதந்திர சனநாயக) கட்சிகளுக்கு வாக்களிப்பது பற்றி சிந்திக்க வேண்டும்” என [வெளிப்படையாகவே ஜெரிமி கோர்பினின் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தார்](http://www.independent.co.uk/voices/tony-blair-jeremy-corbyn-labour-tories-general-election-landslide-time-say-sorry-apology-a7787741.html). கட்சியின் மற்றொரு பழுத்த தலைமை, டோனி ப்ளேரின் சகா, பீட்டர் மேண்டல்சன் ஒரு படி மேலே சென்று, [“ஜெரிமி கோர்பினின் தலைமை சிதைந்து சீக்கிரம் முடிவுக்கு வர ஒவ்வொரு நாளும் நான் முயற்சி செய்கிறேன்”](https://www.theguardian.com/politics/2017/feb/21/peter-mandelson-i-try-to-undermine-jeremy-corbyn-every-day) என்று கூறினார்.
இந்த வெறுப்புக்கும், கசப்புணர்வுக்கும் காரணம் தனிமனித விருப்பு வெறுப்பல்ல. ஜெரிமி கோர்பின் மீதோ, அவரது அரசியல் வாழ்வு குறித்தோ எவரும் குற்றம் சொல்லிவிடமுடியாது. பிறகு ஏன் பகைமை பாராட்டும் இந்தக் கசப்புணர்வு? இது சோஷலிச, இடதுசாரி கருத்தாக்கத்தின் மீது தொடுக்கப்பட்ட போர்.
இப்போரில் சுதந்திர தாராளவாத ஊடகங்கள், சமத்துவம் பேசும் பண்டிதர்கள், அறிவுஜீவிகள், லேபர் கட்சி தலைவர்கள் – அனைவரும் ஒரே கோட்டில் சேர்ந்து ஜெரிமியை, அதாவது சோஷலிச, இடதுசாரி கருத்தாக்கத்தை எதிர்த்தது தான் இங்கு மிக முக்கியம். ஜெரிமியின் மீதான எதிர்ப்பு ஒரு குறியீடு, ஒரு அடையாளம் – அவ்வளவே. இந்த மினி தொடரின் நோக்கம் கூட ஜெரிமியின் மீதான துதி அல்ல. அவரை ஒரு முகமூடியாக வைத்து அவருக்குப் பின்னால் நடத்தப்படும் கருத்தாக்கப் போர் பற்றியது.
வரலாற்று ரீதியாக, தொழிலாளர் உரிமைகளுக்கும், ஏழை மக்களுக்கும் ஆதரவாக அறியப்பட்ட லேபர் கட்சியின் சோஷலிசக் கொள்கைகளை டோனி ப்ளேரின் தலைமையில் லேபர் தலைவர்களே குழிதோண்டி புதைத்தது ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வு. இது லண்டனில் எங்கோ ஒரு கட்சியில், லேபர் பிரபுக்கள் செய்த முடிவல்ல. 1990-களில் உலகெங்கும் இது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது. அமெரிக்காவில் கிளிண்டனின் தலைமையிலான ஜனநாயகக் கட்சி இதைச் செய்தது.
1999-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், பிரதமர் டோனி ப்ளேர், ஜெர்மனியின் தலைவர் ஜெரார்ட் ஷ்ரோடர், டச்சுப் பிரதமர் விம் கோக், இத்தாலிய நாட்டின் பிரதமர் மாசிமோ ட’அலேமா, அமெரிக்காவின் அன்றைய முதல் பெண்மனி ஹிலரி கிளிண்டன், பில் கிளின்டனின் அரசியல் குரு அல் ஃப்ரம் (Al From) ஆகியோர் வாஷிங்டனில் ஒரு அரசியல் கருத்தாக்கத்தை முன் வைத்தனர். நேட்டோவின் ஐம்பதாவது ஆண்டு விழாவின் [பின்புலத்தில் நடந்த அக்கருத்தரங்கம்](https://www.youtube.com/watch?v=iWulr4PV58E), முற்போக்கான மூன்றாவது உபாயம் (Progressive Third Way) என்ற கருத்தாக்கத்தை உலக அரசியல் அரங்குக்கு வார்த்தளித்தது.
மூன்றாவது உபாயத்தை ஒரு வரியில் விளக்க வேண்டுமானால் இடது, வலது சாராத நட்ட நடு நிலையில் சாதுர்யமாக நின்று முதலீட்டியத்தை எதிர்க்காமல், கீழ்த்தட்டு மக்களுக்கு ஆதரவு தர வேண்டும். இந்த [மூன்றாவது உபாயம்](https://www.britannica.com/topic/third-way) பற்றி அதிகம் தெரிந்து கொள்ள, சமூகவியலாளர் ஆண்டனி கிட்டன்ஸை (Anthony Giddens) தெரிந்து கொள்வது அவசியம்.
லண்டன் ஸ்கூல் ஆஃப் இகனாமிக்சின் இயக்குனராகவும், மதிப்புமிக்க சமூகவியல் பேராசிரியருமான [கிட்டன்ஸ்](http://www.open.edu/openlearn/society/politics-policy-people/politics/anthony-giddens-biography), 1998-ல் மூன்றாவது உபாயம் என்ற தலைப்பில் தனது கருத்தாக்கத்தை ஒரு புத்தகமாகப் பதிப்பித்தார். கிட்டத்தட்ட [160 பக்கங்கள்](https://www.amazon.co.uk/Third-Way-Renewal-Social-Democracy/dp/0745622674) உள்ள இப்புத்தகமே அடுத்த இருபது வருடங்களுக்கு மேற்குலக அரசியலில் (குறிப்பாக அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம்) பெரும் செல்வாக்கோடு நடை போட்டது.
மூன்றாவது உபாயம் என்னும் மந்திரம் 1990-களில் ரொனால்ட் ரீகன், மார்க்கரெட் தாட்சரின் பொருளாதாரக் கொள்கைகளின் நேரடித் தாக்கம் கொண்டது. அதே சமயம், வறுமை சமத்துவமின்மை அதிகரிக்க ஆரம்பித்த போது கிளின்டன், டோனி ப்ளேர் போன்ற வசீகரத் தலைமைகள் வறியோருக்கு பொருளாதாரம், வேலை வாய்ப்பு பற்றி முழங்க ஆரம்பித்த சமயம். ஆனால் அதே சமயத்தில் இரண்டு பெரிய மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. ஒன்று தகவல் தொடர்பு சார்ந்த இணையப் புரட்சி; இரண்டு அவற்றால் உந்தப்பட்ட உலகமயமாக்கல்.
இவை இரண்டும் உலகைப் புரட்டிப் போடும் வல்லமை கொண்டவை என்பதை இந்த இளைய தலைமுறைத் தலைவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். உலகமயமாக்கல், தகவல் புரட்சி இரண்டையும் முன்னிருந்து துவக்கி, இன்றுவரை அதனைத் தொடர்ந்து நடத்தி வருவது தனியார் முதலீட்டியமே (இணையத்தின் ஆரம்பம் அமெரிக்க ராணுவமாக இருந்த போதிலும் அவை கல்விசாலைகள் வழியாக சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள தனியார்களிடம் கொண்டு செல்லப்பட்டது).
ஒரு சமூகவியலளாராக, ஆண்டனி கிட்டன்ஸும் இதை உணர்ந்திருந்தார். சமூகப் பிரக்ஞையுள்ள சனநாயகச் (social democracy) சிந்தனையுள்ள லேபர் கட்சி, அமெரிக்காவில் உள்ள ஜனநாயகக் கட்சி ஆகியவை உலகமயமாக்கலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மூன்றாவது உபாயத்தில் வலியுறுத்தினார். உலகமயமாக்கல் என்ற நிகழ்வு, நமது சமூகங்களை – வலது, இடது என்ற பாரம்பரியமான அரசியல் கருத்தாக்கத்திலிருந்து விலக்கி முற்றிலும் புதிதான சமூக அரசியல் அனுபவங்களை தரத் தொடங்கியிருப்பதாக கிட்டன்ஸ் நம்பினார்.
நமது தினசரி நாளில் உள்ள அரசியலை, மிகத்தொலைவில் உள்ள நடப்புகள் இப்போது தீர்மானிக்கின்றன; ஆட்டுவிக்கின்றன.
இது உலகமயமாக்கலினாலும், தகவல் புரட்சியினாலும் வந்த விளைவுகள். இவற்றை நாம் ஒதுக்குவது சமூக யதார்த்தத்தை புறக்கணிப்பதாகும், என ஒரு சமூகவியலாளராக கிட்டன்ஸ் தனது வாதத்தை முன்வைத்தார்.
இந்த ‘இரு விளைவுகளினால்’ புது விதமான தனித்துவம் (new individualism) உருவாகி வருகிறது எனக்குறிப்பிட்ட கிட்டன்ஸ் அத்தனித்துவத்தை சுயநலம் என்று ஒதுக்கிவிடக்கூடாது. உதாரணமாக உலகமயமாக்கலின் விளைவாக எங்கோ இருக்கும் ஒருவர் மற்றொரு மூலைக்கு தனது உற்பத்தியை விற்று லாபம் சம்பாதிப்பதை ஒரு அரிய சந்தர்ப்பமாகவே கருதவேண்டும்.
அதே போல, வெவ்வேறு மூலைகளில் இருப்பவர்கள் தங்களது அரசியல், பாலியல் அடையாளங்களால் ஒன்று கூடுவதும், புதிய சமூகத்தை வார்த்தெடுப்பதும் இந்த ‘இரு விளைவுகளின்’ பயனாகும். நாடு கடந்து, கண்டம் கடந்து உருவாகும் இவ்விதமான புது உறவுகள் (அவற்றின் அரசியல் விளைவுகள்), காலம் காலமாக நிலவி வரும் உள்ளூர் சமூக ஒற்றுமைக்கு முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு பெண் தனக்கான அரசியல் மற்றும் சமூக ஒற்றுமையை (political and social solidarity), இணைய உலகத்தில் எங்கோ இருந்து பெறலாம். இப்படிப் பெறுவதால், அரசியல் மற்றும் சமூக ஒற்றுமையை வளர்த்தெடுப்பதில் உள்ளூர் அரசின் சமூகத்தின் பங்கு குறைந்து போகலாம். அதாவது ‘இரு விளைவுகளினால்’ நவீன அரசுகள் சோஷலிசக் கருத்தாக்கங்களை மேலிருந்து திணிக்கமுடியாது என்பது மூன்றாவது உபாயம் என்ற கருத்தாக்கத்தில் உள்ள ஒரு முக்கியமான கரு.
உலகமயமாக்கலை பயன்படுத்த வேண்டுமெனில், தனியார் முதலீடுகளோடு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டுமே தவிர, அரசின் முதலீடுகள் தனியாருக்கு போட்டியாகக் கூடாது (collaboration not competition). இதன் விளைவாகவே 90-களில் லண்டன் படிப்படியாக உலக செல்வந்தர்களின் கேளிக்கை நகரமாக மாறியது. நியுயார்க்கும் அப்படியே என்றாலும், லண்டனில் முதலீடு செய்வதும் அதற்கு வரிச்சலுகை பெறுவதும் ஊரறிந்த ரகசியம்.
இந்த முதலீட்டியத்தில் வருகின்ற தனி நபர் வருவாய்ப் பெருக்கம், வேலைவாய்ப்புப் பெருக்கம், வரிப் பெருக்கம் – ஆகிய ஒவ்வொன்றும் சோஷலிசம் அல்லாத சமூகப் பிரக்ஞை சார்ந்த சனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதே கிட்டன்ஸின் கோட்பாடு. உலகமயமாக்கல், தகவல் புரட்சி சார்ந்த பொருள் உற்பத்தியை ஆதரிக்கும் அதே சமயத்தில், அவற்றின் விளைவுகள் சாமானியரையும் சென்றடைவதே மூன்றாவது உபாயத்தின் கோட்பாட்டு உத்தியாகும். இது முற்றிலும் பொய்யாகவில்லை.
உதாரணமாக டோனி ப்ளேர் கீழ்நிலைப் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயித்ததின் மூலம் தனியார் முதலீட்டியத்தில் வந்த வேலை வாய்ப்பு ஏழை மக்களுக்கு சாதகமாக அமைந்ததை – மூன்றாவது உபாயத்தின் பயனாகச் சொல்லலாம்.
கிட்டன்ஸ், மூன்றாவது உபாயத்தில் ஒருசில முக்கியமான விதிகளை முன்வைக்கிறார். அவற்றில் சில: இந்த கருத்தாக்கம் நவதாராளத்துக்கு வக்காலத்து வாங்கும் சமூகப் பார்வையல்ல; அதே சமயத்தில் சோஷலிச சிந்தனைகளில் இருந்து விலகிப் போக ஒரு சந்தர்ப்பமாக மூன்றாவது உபாயத்தைப் பார்க்கக்கூடாது.
ஆனால் நடந்தது அதுவல்ல. 2008-ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி உணர்த்தும் உண்மை – டோனி ப்ளேர், கிளிண்டன், ஒபாமா, புஷ் போன்றவர்களின் அரசுகள் வங்கியாளர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளைக் கொடுத்து சாமானியர்களின் வாழ்வைக் குலைத்தன. அது மட்டுமல்லாமல், அந்த செல்வந்தர்களுக்கு அரசுகள் தொடர்ந்து உதவி செய்தன. சட்டத்திற்குப் புறம்பாக அவர்கள் செயல்பட்டபோதும், அவர்களில் ஒருவரைக் கூட இதுவரை கைது செய்து முறையான விசாரணை செய்யவில்லை.
பின்னாளில் கிட்டன்ஸ், ஒரு கட்டுரையில், லேபர் கட்சியின் மூன்றாவது உபாயம் என்ற அரசியல் கோட்பாடு முடிவுக்கு வந்துவிட்டது என்று குறிப்பிடுகிறார். லேபர் கட்சியின் அன்றைய இளம் தலைவர்கள் முதலீட்டியத்துக்கு அளவிட முடியாத ஆதரவை அளித்ததும், அதனால் கீழ்த்தட்டு மக்கள் தொடர்ந்து இருபது ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டதும் லேபர் கட்சி (அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி, ஃப்ரான்சில் சோஷலிசக் கட்சி) செய்த துரோகம்.
இந்தப் பின்புலத்தில் தான் தொழிலாளர்கள் நலனை ஆதரிப்பதாகக் கூறும் லேபர் கட்சியின் டோனி ப்ளேர் போன்ற இளம் பிரபுக்கள் ஜெரிமி கோர்பினின் அரசியலை அழித்தொழிப்பதில் அக்கறை காட்டினர்.
இத்தேர்தலின் அங்கீகாரத்திற்குப் பின், ஜெரிமி பற்றி – அல்லது மூன்றாவது உபாயத்தின் மரணத்தைப் பற்றி அல்லது சோஷலிசத்தின் எழுச்சி பற்றி – டோனி ப்ளேர் ஒரு வார்த்தை சொல்லவில்லை. மேண்டல்சன், ஜெரிமியைக் குறைத்து மதிப்பிட்டதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் அவர்கள் ஜெரிமியைக் குறைத்து மதிப்பிடவில்லை. மக்களின் அதிருப்தியை, அவர்களின் வறுமையை, சமூகத்தில் நிலவும் சமமின்மையை அவர்கள் குறைத்து மதிப்பிட்டனர்.
எனவே தான் இப்போது ஜெரிமிக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம், மேற்குலகில் கிட்டத்தட்ட மரித்துப் போன சோஷலிச அரசியலுக்கு கிடைத்த சுவாசமாகப் பார்க்கப்படுகிறது.
(வெள்ளியன்று சந்திப்போம்)
கட்டுரையாளர் குறிப்பு: முரளி சண்முகவேலன்
ஊடக மானுடவியலாளர்
லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
[கட்டுரை 1. ஐக்கிய ராஜ்ஜியத்தில் சோஷலிச அற்புதம் சாத்தியமா?]
[கட்டுரை 2. நரி வேட்டை அரசியல்]