கட்டுரை 1 – ஜெரிமி கோர்பின் என்ற அற்புதம்
**இடம்:** செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் பொதுச் சதுக்கம், மான்செஸ்டர் நகரம், இங்கிலாந்து.
**காலம்:** ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி, 1819ஆம் ஆண்டு.
1781ஆம் ஆண்டில், ஜேம்ஸ் வாட் பத்து குதிரைத் திறன்கொண்ட (7500 வாட்) நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நீராவியின் திறன், முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பல்வேறு துறைகளில் உபயோகப்பட ஆரம்பித்தது. விவசாயம், நெசவு, கப்பல் மற்றும் ரயில் போக்குவரத்து ஒரே வகையான வேலைகளை இயந்திரமயமாக்குவதன் மூலமாக உற்பத்தித்திறனை அதிகரிப்பது என இங்கிலாந்தில் தொழிற்புரட்சி கோலோச்ச ஆரம்பித்த நேரம் அது.
உற்பத்திப் பெருக்கம், தொழிலதிபர்களுக்கு லாபம், அரசு விரிவாக்கம் என மகிழ்ச்சி கீதம் ஒருபுறம்; இந்த உற்பத்தியைக் கொடுக்கும் பாட்டாளிகளின் உழைப்பைச் சுரண்டியதால் ஏற்பட்ட பட்டினி, பிணி மறுபுறம் என இருவகையான இங்கிலாந்து உருவாகிவந்த காலம் அது. தொழிற்புரட்சியும், காலனியாதிக்கமும், அடிமை வியாபாரமும் அரசியாருக்கு பொருள் சேர்த்த காலமும் அதுவே.
குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. 10 வயது குழந்தைகள்கூட நாளொன்றுக்கு பதினான்கு மணி நேரத்துக்கு மேலாக ‘உழைத்தால்’தான் பசியாற முடியும் என்ற ஒரு கொடூரமான நிலை நிலவியது. உழைப்பாளர்களின் நலன் பிரபுக்களால் சுரண்டப்பட்டது. பாட்டாளிகளின் உழைப்பும் ஊதியமும், முதலாளிகளால் சுரண்டப்பட்டதால் நாடு முழுவதும் சமமின்மை, வறுமை, பட்டினி, நோய். பொருளாதார நசிவினால் (economic depression) ஏழை மக்கள் நோய் பீடித்து செத்தொழிய ஆரம்பித்தனர்.
ஒருகட்டத்தில் பாட்டாளி மக்கள் ஒன்று திரண்டனர். ஏகாதிபத்திய சுரண்டலுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என ஹென்றி ஹண்ட் (Henry Hunt) என்பவரின் தலைமையில், உழைக்கும் மக்கள் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் பொதுச் சதுக்கத்தில் கூடினர். 60,000 பேர் கூடியதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. சில ஆவணங்கள் 80,000 என மதிப்பிடுகின்றன. இன்றைய அளவுக்கு தகவல் தொடர்பு இல்லாத 1819ஆம் ஆண்டில் சுய ஆர்வத்துடன் அரசியல் சுதந்திர வேட்கையினால் உந்தப்பட்டு 60,000 பேர் கூடியது ஆட்சிப்பீடத்துக்கு கிலி ஊட்டியது என்பதில் ஐயமில்லை.
பிரெஞ்சு புரட்சி நடந்துமுடிந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளே ஆகியிருந்த சமயமது. அவற்றின் புரட்சிகரமான விளைவுகள் பிரபுக்களின், அரசின் மனதில் இன்னமும் ‘பசுமையாக’ இருந்தது. செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் கூடிய 60,000 பேர் அவர்களுக்கு அச்சத்தையே ஊட்டியது. புரட்சி வெடிக்கும் என பயந்தனர்.
ஆனால் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் கூடிய கூட்டத்தின் நோக்கமோ வன்முறையல்ல. அன்றைய தொழிலதிபர்கள், பிரபுக்களின் தொழில் முறைகேடுகளுக்கு ஒத்துழையாமை, உழைப்பவர்களின் உரிமைக்கான குரல், அடிப்படை வசதிகள் போன்ற அரசியல் உரிமை கோரி அந்தக் கூட்டம் நடைபெற்றது.
1819ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இரண்டு சதவிகித மக்களுக்கே வாக்குரிமை இருந்தது. அதை எதிர்த்தும், அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் எனவும், நாடாளுமன்றத்தைச் சீர்திருத்தம் செய்யக்கோரியும், உழைக்கும் வர்க்கத்தினரின் அடிப்படை மனித உரிமைகளைக் காக்கக் கோரியும், குழந்தைகளைப் பாதுகாத்திடவும் அவர்களது புரட்சிக்குரல் ஒலித்தது.
பீட்டர்ஸ்பெர்க் கூட்டத்தில் பெண்கள் பெருவாரியான அளவில் கலந்துகொண்டனர். அவர்களில் பலர் அமைதியின் அடையாளமாகவும், வன்முறையை நிராகரிக்கும் நோக்கத்திலும் வெண்ணிற உடை அணிந்து தங்கள் நோக்கம் குழப்பம் செய்வதல்ல, மனித உரிமைக்கு ஆதரவானது என்று முழங்கினர்.
ஆனால், இப்போராட்டம் வன்முறைப்புரட்சியின் வித்தாக இருக்கும் என அரசும், தொழிலதிபர்களும் அஞ்சினர். ஏராளமான படைகள் கொண்டுவரப்பட்டு அங்கு கூடியிருந்த அப்பாவி மக்களின் மீது வன்முறை ஏவிவிடப்பட்டது. 500 பேருக்கும் மேல் படுகாயமடைந்தனர் எனவும், 11 பேர் கொல்லப்பட்டனர் என்றும் அரசு அறிக்கைகள் கூறின. ஆனால், உண்மையான எண்ணிக்கை அதிகம் என அங்கிருந்த சாட்சியங்கள் பதிவு செய்திருக்கிறது.
பிரிட்டனின் சமூக அரசியல் வரலாற்றில் இந்த மான்செஸ்டர் புரட்சி (அல்லது பீட்டர்லூ போர்க்களம்) பின்னாளில் தோன்றிய இங்கிலாந்து தேசத்தின் ஜனநாயகப் பண்புகளைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய புரட்சி நிகழ்வு என்றால் மிகையல்ல. இந்தப் படுகொலையினை நேரில் கண்டு துயருற்ற தாராளவாத வியாபாரி ஜான் எட்வர்ட் டைலர், ‘தி கார்டியன்’ நாளிதழை நிறுவிட உதவி செய்தார் என்பதும் ஒரு முக்கியமான செய்தி.
மான்செஸ்டர் படுகொலை பற்றி இத்தாலியில் வசித்து வந்த ஆங்கிலக்கவிஞர் ஷெல்லி கேட்டறிந்தபோது வந்த உணர்ச்சிகளை ஒரு கவிதையாக வடித்தெடுத்தார். அக்கவிதையின் தலைப்பு The Masque of Anarchy (தி மாஸ்க் ஆஃப் அனர்க்கி). 38 செய்யுள் (செய்யுளுக்கு நான்கு வரி வீதம்) அடங்கிய இக்கவிப்பிரதியே நவீன உலகத்தில் வன்முறையற்ற (அஹிம்சைப்) போராட்டத்தைப் பற்றிய முதல் குறிப்பாகும். ஜனநாயகச் சீர்திருத்தம் கோரி, ஒத்துழையாமை போற்றி, வன்முறையற்ற பாட்டாளி மக்களின் உரிமைப் போராட்டத்தைச் சித்தரிக்கும் உணர்ச்சிகரமான ஒரு செய்யுள் தொகுப்பு. பிரிட்டனின் புரட்சிக் கீதம் என்று சொல்லுமளவுக்கு பிரசித்தமானது.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, அஹிம்சை பற்றிய கருத்தாக்கம் குறித்துப் பேசும்போது ஷெல்லியின் மக்கள் கலகத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறார். ஷெல்லியின் வாழ்நாளில் அப்பிரதி பிரசுரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னாளில் பிரசுரிக்கப்பட்ட அப்பிரதியில் வரும் கடைசிச்செய்யுள் இங்கு முக்கியம். அந்தச்செய்யுளின் பொருள்:
**உறக்கத்திலிருந்து எழுந்த சிங்கம் போல் வீறு கொண்டு எழு**
**கட்டுக்கடங்கா எண்ணிக்கையில்**
**கண்ணயர்ந்த சமயத்தில் உன் மேல் விழுந்த சங்கிலிகளை**
**நீர்த்திவலைகளைப் போல் நிலத்தில் உதிர்.**
**நீயோ திரள், அவர்களோதுளி. **
(‘Rise like Lions after slumber
In unvanquishable number,
Shake your chains to earth like dew
Which in sleep had fallen on you –
Ye are many – they are few.’)
=========
**ஆண்டு:** 198 ஆண்டுகள் கழித்து 2017
**நாள்:** ஜூன் 07
**இடம்:** யூனியன் திருப்பள்ளி, இஸ்லிங்டன் ஏஞ்சல், வடக்கு லண்டன். மாலை நேரம்.
ஐக்கிய ராஜ்ஜியத்தின் தேர்தல் காய்ச்சலில் உந்தப்பட்ட நான், ஜெரிமி கோர்பினின் கடைசி உரையைக் கேட்பதற்காக அவருடைய தொகுதியில் உள்ள யூனியன் திருப்பள்ளியில் காத்திருந்தேன். அங்கே 60,000 பேர் திரளவில்லை. ஆனால், திரண்ட சில ஆயிரக்கணக்கான பேர்களில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம். பல இளைஞர்கள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர். இஸ்லிங்டன் ஏஞ்சல், நடுத்தர வெள்ளை இன மக்கள் வாழும் தொகுதி. அதே சமயத்தில் அங்கு ஏழை மக்களும் அரசு குடியிருப்பில் ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளனர். மக்கள் திரளில் அனைத்து வகையான மக்களையும் பெருவாரியாகக் காண நேர்ந்தது.
தேர்தல் பேருந்தில் குறித்த நேரத்துக்கு வந்த கோர்பின் திருப்பள்ளிக்கு வந்து பத்து நிமிடத்துக்கும் குறைவான ஓர் உணர்ச்சிகரமான உரையாற்றினார். உரையை முடிக்கும் முன், ஷெல்லியின் கடைசி செய்யுளை வாசிக்க ஆரம்பித்தார். அங்கு திரண்டிருந்த கூட்டம் அதைக் கேட்டவுடன் உணர்ச்சிப்பெருக்கால் ஆர்ப்பரித்தது (காணொளி [இங்கே](https://www.youtube.com/watch?v=16EzpUFKcHE)). ஒரு உறுதிமொழி போல, அங்கிருந்த அனைவரும் அச்செய்யுளை கோர்பினுடன் சேர்ந்து உரத்துச் சொன்னார்கள். என் பக்கத்தில் நின்றிருந்த இருபது வயது மதிக்கத்தக்க பெண் வாக்காளர், அந்தச் செய்யுளை உரக்கக்கூவி தனது ஆதரவைத் தெரிவித்தார்.
அந்தச் செய்யுளை ஒப்புவித்த நிகழ்வு கிட்டத்தட்ட ஒரு உணர்ச்சிகரமான நாடகப் பாணியில் இருந்தது. பொதுவாகவே உணர்ச்சிகளை வெளியே காண்பிக்க விரும்பாத ஆங்கில வாக்காளர்களின் மத்தியில் ‘நம் சமூகம், நம் மக்கள், நம் உரிமை’ என்னும் சோஷலிசத் தன்மை பளிச்செனத் தெரிந்தது. எனக்கு இந்த உணர்வு முற்றிலும் புதிதாகப்பட்டது. மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. இந்தத் தேர்தலோடு காணாமல் போய் விடுவார் என்று பாண்டித்தியம் சொல்லப்பட்ட கோர்பின் ஆர்ப்பாட்டம் இல்லாத நேர்மையான பிரசார உத்திகளின் மூலம் வாக்காளர்களைக் கட்டிப் போட்டிருந்தார் என்பதே உண்மை.
2017இல் நடைபெற்ற தேர்தலில் சமர்ப்பிக்கப்பட்ட லேபர் தேர்தல் அறிக்கையின் பிரசார வாசகம், ‘பலருக்காக; சிலருக்காக அல்ல’ (For the Many, not the few) என்னும் சொற்றொடர் ஷெல்லி எழுதிய செய்யுளின் கடைசி வரியான, ‘நீயோ திரள், அவர்களோ துளி’ என்பதின் திரிபு.
1819ஆம் ஆண்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார சமமின்மையும், பொருளாதார நலிவையும் ஐக்கிய ராஜ்ஜியம் 2017இல் மீண்டும் அனுபவிக்கத் தொடங்குகிறதோ என்றும் சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி, சமமின்மையினால் வாழ்க்கைத் தரத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. ஜெரிமி கோர்பின் தலைமையில் கூடிய கூட்டம் விரைவில் சோஷலிசம் ஆட்சியமைக்குமா என்பது ஒரு முக்கியக் கேள்வி ஒருபக்கம்.
உலகில் ஐந்தாவது பணக்கார நாடான ஐக்கிய ராஜ்ஜியத்தில் சாதாரண குடிமக்களின் வறுமை நிலை வெகுவாக அதிகரித்துள்ளதே கசப்பான உண்மையாகும். நிஜ ஐக்கிய ராஜ்ஜியம் ஏகப்பட்ட வலிகளோடு நொண்டிக்கொண்டு இருக்கிறது என்பதையே 2017 ஜூன் தேர்தல் வெளிக்காட்டியிருக்கிறது. எனவே, ஒப்பீட்டளவில் 1819ஆம் ஆண்டில் அனுபவித்த பொருளாதாரப் பிணி மீண்டும் திரும்பியிருக்கிறது என்றால் மிகையல்ல.
நிகழ முடியாத அற்புதம், வசீகரம் இல்லா தலைமை, நவீன அரசியல் உலகில் காலாவதியாகிப்போன பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டுள்ளவர் என்று பண்டிதர்களால் ஒழித்துக்கழிக்கப்பட்ட ஜெரிமி கோர்பின் எவ்வாறு லேபர் கட்சியின் தலைமைப் பதவியை மீண்டும் தக்கவைத்துள்ளார்; எவ்வாறு பிரிட்டிஷ் அரசியலையே தன்பக்கம் திரும்ப வைத்துள்ளார் என்ற கேள்விக்கு ஐக்கிய ராஜ்ஜியத்தின் பொருளாதாரச் சமமின்மைக் காரணங்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். இக்காரணங்களே, ஜெரிமியின் மீது ஊடகங்களின் கணிப்புக்கு எதிராக சாதாரண குடிமக்கள் நம்பிக்கை வைக்க பல காரணங்களாக உருவெடுத்துள்ளது. இதுபற்றி பின்வரும் வாரங்களில் பார்க்கலாம்.
உலகெங்கும், குறிப்பாக மேற்குலகில், வலதுசாரிகளின் எழுச்சி வலுப்பெற்றுவரும் சூழ்நிலையில் ஜெரிமியின் சோஷலிச சிந்தனைக்கு மக்கள் அரசியலில் வலுக்கும் ஆதரவு மிக முக்கியமான நிகழ்வாகும். சமீபத்தில் நடந்த பிரெஞ்சு தேர்தலில் சோஷலிசக் கட்சி சின்னாபின்னமாகிப் போனதை இங்கே கவனத்தில்கொள்ள வேண்டும். இடதுசாரிக் கொள்கைகளில் அவ்வளவாகப் பிடித்தமில்லாத ஐக்கிய ராஜ்ஜியத்தில் சோஷலிசக் கொள்கை மக்கள் மனத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருப்பது தேசிய, உலக அரசியலில் ஒரு முக்கிய நிகழ்வாக நான் பார்க்கிறேன். பணக்கார தேசத்தில் உள்ள விளிம்பு நிலை மக்கள் – தேர்தல் அரசியலின் உதவியோடு – ஜனநாயகத்தை தங்கள் பக்கம் மாற்ற முடியும் என்ற மகத்தான நம்பிக்கையை இந்தத் தேர்தல் ஏற்படுத்தியுள்ளது என்பது மிக முக்கியமான செய்தியாகும்.
(வெள்ளி சந்திப்போம்)
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி சண்முகவேலன்](https://twitter.com/muralisvelan?lang=en-gb). ஊடக மானுடவியலாளர், லண்டன் பல்கலைக்கழகம்.
லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும் – கட்டுரை 14 – முரளி சண்முகவேலன்