மினி தொடர்: ஐக்கிய ராஜ்ஜியத்தில் சோஷலிச அற்புதம் சாத்தியமா? – முரளி சண்முகவேலன்

அரசியல் சிறப்புக் கட்டுரை

**கட்டுரை 2 – நரி வேட்டை அரசியல்**

“உன் பத்திரிகையைக் காட்டு, நான் உன் அரசியலைச் சொல்கிறேன்” என்று ஒரு பிரயோகம் பிரிட்டனில் பரவலாக உண்டு.

பிரிட்டனில் (இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் பகுதிகளை உள்ளடக்கியது) ஒருவர் ஏழையா, பணக்காரரா; கல்லூரிக்குச் சென்று படித்திருக்கக்கூடுமா அல்லது பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவரா; வலதுசாரியா, இடதுசாரியா என்பதை அறிய அவர் படிக்கும் பத்திரிகையின் பெயரைப் பார்த்தால் போதும். அதுவே காட்டிக்கொடுத்துவிடும். நான் ஒருமுறை, மாறுதலுக்காக ‘டைம்ஸ்’ பத்திரிகை வாங்கிப் படித்துக்கொண்டிருந்தபோது எனது நண்பர் ஆச்சர்யத்துடன், ‘ஓ… டைம்ஸ் பத்திரிகை வாசகரா? ஆச்சர்யமாக இருக்கிறதே!’ என்று முறுவலித்தார். ‘டைம்ஸ்’ பத்திரிகை பிரிட்டிஷ் காலனியத்தையும், ஆங்கிலப் பாரம்பர்யத்தையும், அரச குடும்பத்தையும் ஆதரிக்கும் வெள்ளை இன நடுத்தர மக்கள் வாசிக்கும் பத்திரிகை என்ற பெயர்பெற்றது.

யூ கவ் (YouGov), நீல்ஸன் (Neilsen) போன்ற கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் பிரிட்டனில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளின் வாசகர்களின் எண்ணிக்கையையும் அவர்களின் தினசரி நுகர்வையும் தொடர்ந்து கணக்கிலெடுத்து வெளியிடுகின்றன.

உதாரணமாக பத்தி பத்திரிகையான ‘சன்’ நாளிதழ் வாசகர்களின் பிரதான உணவு என்ன (பன்றி சாப்ஸ், வறுத்த உருளை சிப்ஸ்); பிரதான வளர்ப்புப் பிராணி எது (நாய்); பிடித்த விளையாட்டு எவை (டார்ட்ஸ், குதிரையேற்றம்) என்ற அளவுக்கு நுண்ணிப்பாக இக்கருத்துக்கணிப்பு வெளியிட்டு வாசகர்களின் வாழ்வு நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. அல்லது, கிளிஃப் ரிச்சர்ட் இசை கேட்கும் வாசகர்கள் வலதுசாரி ஆதரவாளராக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்று சொல்லுமளவுக்கு இக்கருத்துக்கணிப்புகள் ‘முன்னேறி’யுள்ளது.

இக்கணிப்புகளைக் கூர்ந்துகவனித்தால் பிரிட்டனில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளின் அரசியல் நிறத்துக்கும், அப்பத்திரிகைகளைப் படிக்கும் வாசகர்களின் அரசியல் பிடிப்புக்கும், தினசரி கேளிக்கைக்கும், வாழ்க்கைத் தரத்துக்கும், பொதுவான நுகர்வுக்கும் இடையே உள்ள உறவு புலப்படும்.

இந்த உறவு இங்குள்ள அரசியல்வாதிகளால், ஊடகப் பண்டிதர்களால், வியாபாரிகளால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. இவற்றின் முக்கியத்துவத்தை பிரிட்டனின் பிரசித்திபெற்ற ‘நரி வேட்டை’ அரசியலின் மூலம் விளங்க முயற்சிக்கலாம்.

Is a Socialist Miracle Possible in the United Kingdom? part 2

‘நரி வேட்டை’ என்பது ஐக்கிய ராஜ்ஜியத்தில் (இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து பகுதிகளை உள்ளடக்கியது) தொன்றுதொட்டு நடந்துவருகிற ஒரு வேட்டை விளையாட்டு. குறிப்பாக நகரங்களுக்கு வெளியேவும், மலை வயல் பகுதிகளில் நடைபெறுகிற விளையாட்டு.

நரி வேட்டை என்பது ஆங்கிலப் பண்பாட்டின் ஒரு சின்னம் என்பது ஒரு காரணம் என்றாலும் பண்ணைகளில், கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளைக் பாதுகாத்துக்கொள்ள நரி வேட்டை அவசியம் என கிராமப் பகுதிகளிலுள்ள வெள்ளை இன மக்கள் வாதிடுகின்றனர். ஆனால், நகரத்தில் உள்ள படித்த (வெள்ளை மற்றும் மற்ற இன) மக்களோ நரி வேட்டை காட்டுமிராண்டித்தனமானது என்று எதிர்த்து வந்துள்ளனர். லேபர் கட்சியின் தலைமையின்கீழ் 2005இல் இவ்வேட்டைக்கு இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்டது (ஸ்காட்லாந்தில் 2002). ஆனால் பெருவாரியான கிராம மக்கள், விவசாயிகள், இந்தத் தடையை தங்களின் இன அடையாளத்துக்கு நேர்ந்த அவமானமாகக் கருதுகின்றனர்.

நகரத்து ‘முற்போக்குவாதி’களுக்கு மண்ணின் பெருமை என்ன தெரியும் என்று ‘ஊர்க்காரர்கள்’ குமுறுவதும் வழக்கம். நரி வேட்டையை எதிர்க்கும் பிரிட்டன் நகரத்துவாசிகள் தொழிற்புரட்சியின் உற்பத்திகள் என்பது இங்கு முக்கியம். நகரத்து மக்கள்தொகை என்பது நகரத்துத் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்டது என்பதும் முக்கியம். இம்மக்கள் பொதுவாகவே தங்களின் உரிமைக்குப் போராடிய சோஷலிச, இடதுசாரியின் ஆதரவாளர்கள். இதுவே லேபர் கட்சியின் பூமி.

ஆக, நரி வேட்டையின் எதிர்ப்பாளர்கள் இடதுசாரிகள் – லேபர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று பொதுவாகச் சொல்வதில் பிழையில்லை. நகரவாசிகள், நரிகளால் தங்கள் கால்நடைகளைப் பறி கொடுக்காதவர்கள் என்பதிலும் உண்மையில்லாமல் இல்லை.

நரி வேட்டையை ஆதரிப்பவர்களோ கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர்கள் – வயல்வெளி வைத்திருக்கும் கிராமப்புறவாசிகள் அல்லது பண்ணை வீடு வைத்திருக்கும் செல்வந்தர்களாக இருக்க வேண்டும். இந்த இரு குழுக்களுமே வெள்ளை இனத்தினர் எனக் கணிப்புகளும் மக்கள்தொகை கணக்குகளும் தெரிவிக்கிறது.

எனவே, மான்செஸ்டர் புரட்சியின் விளைவாக தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் தோற்றுவிக்கப்பட்ட ‘தி கார்டியன்’ நாளிதழ் நரி வேட்டைக்கு எதிரான நிலையில் இருப்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. அதேபோல பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் பெருமை கொண்டுள்ள டைம்ஸ், நரி வேட்டையை ஆதரிப்பதிலும் ஆச்சர்யமில்லை.

இவ்வாறாக பல நூற்றாண்டுகளாக பிரிட்டனின் பத்திரிகை வரலாறும், வாசகர்களின் அரசியல் நிறமும் தெளிவாக வரையறுக்கப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போதும் தங்களின் நிறங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் பிரிட்டன் பத்திரிகைகள் தயங்குவதே கிடையாது. ஆனால், இவை யாவும் ஜெரிமி கோர்பினின் தலைமைக்குப் பின்னர் மாறிப்போனது.

பொதுவாக லேபர் கட்சி மீது கரிசனம் காட்டும் தி கார்டியன், இண்டிபெண்டண்ட், தி மிர்ரர் ஆகிய மூன்று பத்திரிகைகளும் ஜெரிமி கோர்பினுக்கு எதிராக எழுத ஆரம்பித்தன. ஜெரிமி தலைமைக்குத் தகுதியானவர் அல்ல என்று அவர் கட்சித் தலைமை பொறுப்பேற்ற தினத்தில் இருந்து மிகவும் வெடிப்போடும், கசப்புணர்வோடும் செய்திகள் வெளிவந்தன. இப்பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் கிட்டத்தட்ட வெறுப்புப் பிரசாரத்தொனியில் அமைந்தது என்றால் மிகையல்ல.

Is a Socialist Miracle Possible in the United Kingdom? part 2

(Jeremy Corbyn)

மற்றப் பத்திரிகைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்: டைம்ஸ், ஃபைனான்சியல் டைம்ஸ், டெலிகிராஃப், சன், டெய்லி எக்ஸ்பிரஸ், டெய்லி மெய்ல் ஆகிய பத்திரிகைகள் ஜெரிமியைக் கிட்டத்தட்ட ஒரு எதிரியாகவே சித்தரித்து செய்திகள் வெளியிட்டன. பிரிட்டனின் விழுமியத்துக்கு எதிரான சோவியத் கால கம்யூனிஸ்ட் கட்சிக்காரரைப் போல, ஊடகங்களில் ஜெரிமி கோர்பின் சித்திரிக்கப்பட்டார்.

பிரிட்டன் அரசாட்சியின் மீது பெருமைகொண்ட நாடு; இடதுசாரி எழுச்சி அங்கு எழ சாத்தியக் கூறு மிகக்குறைவு (இனிமேல் எப்படியோ – அது பற்றி பின்னால் பார்க்கலாம்). இந்தச் சூழ்நிலையில் ஜெரிமி கோர்பின் இங்கிலாந்தை மற்றுமொரு ரஷியாவாக ஆக்க முயல்கிறார் என்ற ரீதியில் செய்திகள் வெளியிடப்பட்டன. அவரை லெனின் போல சித்தரித்து படச்செய்தி வெளியிடப்பட்டது.

தேர்தலுக்கு ஒரு வருடம் முன்னர் லண்டன் ஸ்கூல் ஆஃப் இகனாமிக்ஸின் ஊடகத்துறை ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டது. நான் மேற்குறிப்பிட்டது போல ஜெரிமினுக்கு எதிராக வலதுசாரிப் பத்திரிகைகள் மட்டுமல்ல; இடதுசாரி, முற்போக்குவாதப் பத்திரிகைகளும் ஜெரிமிக்கும் பகைமை பாராட்டியதைக் குறிப்பிட்டது இந்த அறிக்கை. பொதுவாக நடுவுநிலைமை வகிக்கும் ஊடகம் என பெயர் பெற்றிருக்கும் பிபிசி-யும் இதற்கு விதிவிலக்கல்ல. பிபிசி-யின் பதிவுகளும், தொலைக்காட்சிச் செய்திகளும் ஆரம்பம் முதலே ஜெரிமிக்கு எதிராக இருந்து வந்ததை ஊடக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, பிபிசி அரசியல் நிருபர் லாரா குஸென்பர்க் தயாரித்த ஜெரிமி பற்றிய செய்திகள் ‘பிழையோடு’ இருப்பதாக பிபிசி ட்ரஸ்ட் – ஒரு வாசகரின் புகாருக்குப் பின்னர் ‘ஒப்புக்கொண்டது’

அமெரிக்க ஊடகங்கள், அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக எப்படித் திரண்டனவோ, அதைப்போலவே ஜெரிமிக்கு எதிராக பிரிட்டனில் உள்ள (கிட்டத்தட்ட) அனைத்து ஊடகங்களும் திரண்டன என்பது ஒரு விந்தையான ஒற்றுமை. ஏனெனில் இருவரின் கொள்கைகளும் நேரெதிர்.

ஆக, ஒட்டுமொத்த ஊடகங்களும் ஜெரிமிக்கெதிராக திரண்டதை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது? இவற்றை மீறி ஜெரிமிக்கு – குறிப்பாக இளைஞர்களின் வாக்கு அதிகமாகக் கிடைத்தது எவ்வாறு? வரும் வெள்ளிக்கிழமை பார்க்கலாம்.

கட்டுரையாளர் குறிப்பு:

Is a Socialist Miracle Possible in the United Kingdom? part 2

முரளி சண்முகவேலன், ஊடக மானுடவியலாளர்.

லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.

[கட்டுரை 1 – ஐக்கிய ராஜ்ஜியத்தில் சோஷலிச அற்புதம் சாத்தியமா?]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *