பிடிஆர் பேசியதாக கூறப்படும் ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலையையும், விசாரணை கோரிய எடப்பாடியையும் எச்சரித்து திமுகவின் முரசொலி இன்று (ஏப்ரல் 29) அறிக்கை விடுத்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் இரண்டு ஆடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த ஆடியோக்களில் அவர் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றன. எனினும் அந்த 2 ஆடியோக்களுக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

ஆடியோ: விசாரணை கோரிய எடப்பாடி
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அப்போது, தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பேசியது போல் வெளியான ஆடியோவின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதை பற்றிய உண்மை நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் பிடிஆர் தெளிவான விளக்கம் தந்த பின்னரும் விசாரணை நடத்தக்கோரும் எடப்பாடி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், பொன்னையன் குறித்து பேசிய ஆடியோவின் உண்மைத் தன்மையும் விசாரிக்கலாமே என்று திமுகவின் முரசொலி பத்திரிகையில் சிலந்தி பல கேள்விகள் எழுப்பியுள்ளார்.

ஜெயக்குமார் ஆடியோ
அதில், எடப்பாடிக்கு அவரது கட்சியின் செய்தி தொடர்பாளராக இப்போது விளங்கிக்கொண்டிருக்கிற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது என்ன கோபமோ? பிடிஆர் ஆடியோ குறித்து முழுமையான விசாரணை கோரினால் நிச்சயம், ஜெயக்குமாரும், ஒரு பெண்ணின் தாயாரும் பேசியதாக கூறப்பட்டு வெளிவந்த ’ஆடியோ’ விவகாரமெல்லாம் மீண்டும் வெளிவரும். அதற்கு விசாரணை கோருவார்கள் என்பதெல்லாம் எடப்பாடிக்கு தெரியாதிருக்க நியாயமில்லை” என்று குறிப்பிட்டுள்ளது.
என்ன தகுதி இருக்கிறது?
அதேபோல, ”அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அரசு கேபிள் நிறுவனத்தில் இருந்தபோது, சம்பத் என்பவரிடம் கோடிக்கணக்கான ரூபாய்கள் கொடுக்கல், வாங்கல்கள் குறித்து பேசியதாக வெளியானது. அந்த ஆடியோ குறித்து அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி விசாரித்திருக்கலாமே?
ஆனால் அப்படிப்பட்ட உடுமலை ராதா கிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகுபார்த்த எடப்பாடிக்கு இன்று வாய் திறந்து கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

கண்ணாடி வீட்டில் கல்லெறியும் எடப்பாடி
மேலும், “சமீபத்தில் நாஞ்சில் கோலப்பனுடன் எடப்பாடி பழனிசாமி கோஷ்டியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன் பேசியதாக வெளியிடப்பட்ட ஆடியோவில், “எடப்பாடி தரப்பில் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க காரணம் பணம் பெரிய அளவில் இருப்பது தான்” என்றும், கொள்ளையடிச்சு கோடீசுவரன் ஆனவங்க… அவங்க பணத்த காப்பாத்திக்கிறதுக்காக டெல்லியை பிடிச்சுக்கிட்டு ஆடுறானுங்க..” என்று திடுக்கிட வைக்கும் செய்திகள் வெளிவந்து வைரலானது.
இதை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து தற்போது பிடிஆர் ஆடியோ விஷயத்தில் கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறியும் செயலில் எடப்பாடி ஈடுபட்டுள்ளார்” என்று முரசொலி பகடி செய்துள்ளது.

பிஜேபியின் ஆடியோ!
அதுபோலவே கைக்கடிகாரத்துக்கு போலி பில் காட்டி மாட்டிக்கொண்ட பேர்வழி பிட், பிட்டாக ஆடியோ வெளியிடப்படும் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார் என்றும், மல்லாந்து படுத்து எச்சிலை உமிழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் அண்ணாமலையை சாடியுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் ஆடியோக்கள், வீடியோக்கள் வகைவகையாக வெளிவந்ததை பட்டியலிட்டால் பக்கங்கள் பத்தாது.
கர்நாடகாவில் பிஜேபி நடத்திய ஆப்ரேஷன் கமலா எப்படி எல்லாம் நடத்தப்பட்டது, யார் யாரிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டது என்பன போன்ற ஆடியோக்கள் புற்றீசல் போல் பல நேரங்களில் வெளிவந்தன.
சமீபத்தில் கர்நாடக முதல்வராக உள்ள பசவராஜ் பொம்மை ஆட்சியை கிண்டலடிக்கும் விதமாக அவரது அமைச்சரைவையில் உள்ள சட்ட அமைச்சர் மதுசாமி பேசிய ஆடியோவும் வைரலானது.

அதில் ”இங்கு அரசாங்கம் நடைபெறவில்லை, ஏதோ மேனேஜ் செய்து கொண்டிருக்கிறோம்” என்று மதுசாமி பேசிய ஆடியோ தேசிய அளவில் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது.
வெட்டி ஒட்டி ஜோடிக்கப்பட்ட ஆடியோக்களை வைத்து அரசியல் நடத்த நினைக்கும் பட்சத்தில், காலப்போக்கில் மக்கள் மறந்து விட்ட பல ஆடியோ, வீடியோக்களை எழுந்து நின்று பேச வைப்போம்” என்று முரசொலி எச்சரித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
Comments are closed.