ED ரெய்டா?: துரைமுருகன் சொன்ன பதில்!

அரசியல்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று மணல் குவாரிகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் அதுதொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் குறிப்பிட்ட அளவை விட கூடுதலாக மணல் அள்ளப்படுவதாகத் தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 12) சென்னை, வேலூர், திருச்சி கோவை என தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள மணல் குவாரிகள், மணல் விற்பனை செய்யப்படும் இடங்கள், மணல் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது.

புதுக்கோட்டையில் மணல் குவாரி தொழிலதிபரான எஸ்ஆர் எனப்படும் ராமச்சந்திரன் கார்ப்பரேட் அலுவலகம், அவரது வீடு உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம், வேலூர் பள்ளி கொண்டா மணல் குவாரி, திருச்சி கொள்ளிடம் மணல் குவாரி, நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு மணல் சேமிப்புக் கிடங்கு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் அண்ணாநகர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. பிற்பகல் சென்னை எழிலகத்தில் உள்ள கனிமவளத் துறை அலுவலகத்திலும் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாநகரில் ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் சோதனை நடக்கிறது. முகப்பேர் கிழக்குப்பகுதியில் உள்ள நீர்வளத்துறை செயற் பொறியாளர் திலகம் வீட்டில் அமலாக்கத் துறை அலசி ஆராய்ந்து வருகிறது.

துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தசூழலில் மணல் குவாரிகளை நிர்வகிக்கும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் ரெய்டு குறித்து கேள்வி எழுப்பினர்.

இன்று வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகனிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர்.

மணல் குவாரிகளில் ஈடி இறங்கியிருக்கிறதே என்ற கேள்விக்கு, “அப்படியா… எனக்குத் தெரியாதே?” என்று தனது வழக்கமான பாணியில் பதிலளித்துவிட்டுச் சென்றார் துரைமுருகன்.
பிரியா

உருட்டல் மிரட்டலுக்கு பயப்படமாட்டோம் : அண்ணாமலைக்கு சேகர்பாபு பதில்!

சுசி கணேசனின் ’தில் ஹை கிரே’: ஆடியோ டீசர் ஸ்பெஷல் என்ன?

+1
0
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *