சென்னை வரும் பிரதமர் மோடியை அதிமுகவின் இரு துருவங்களாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சந்திக்கிறார்கள் என்று அதிகார வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.
பிரதமர் மோடி இன்று (ஜூலை 28) மாலை சென்னையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கிறார். இதற்காக இன்று மாலை குஜராத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வரும் மோடி, அங்கிருந்து அடையாறு ஐ.என்.எஸ். படைத் தளத்துக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டரங்கத்துக்கு செல்கிறார் பிரதமர் மோடி,
செஸ் ஒலிம்பியாட் போட்டி விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் இணைந்து கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, விழாவை முடித்துவிட்டு ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார். அங்கே இரவு தங்குகிறார்.
இந்த நிலையில் அரசு விழாவுக்கு வரும் பிரதமர் மோடியின் பயணம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை ஆதரித்த தோழமைக் கட்சியான அதிமுகவுக்குள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு இடையே மோதல் கடுமையாக நடந்து வருகிறது. இந்த அதிகார யுத்தம் மோடியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுகவை வலிமைப்படுத்திட பாஜக தரப்பினரும் விரும்புவதால் எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர் செல்வத்துக்கும் இடையே பாஜக பஞ்சாயத்து செய்யக் கூடும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த பின்னணியில்தான் சென்னை வரும் பிரதமரை ஓ.பன்னீரும் எடப்பாடியும் தனித்தனியே சந்திக்க முயல்கின்றனர். அந்த வகையில் செஸ் விழா முடிந்து ஆளுநர் மாளிகைக்குத் திரும்பிய பின் இரவு பிரதமர் மோடியை ஓ.பன்னீர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன் டெல்லி சென்றபோதே பிரதமரை சந்திக்க முயன்றார். ஆனால் அப்போது அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க முடியும் என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.
எடப்பாடி பழனிசாமியை குறி வைத்து வருமான வரித்துறை ரெய்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை என சூடுபிடித்து வருகிறது. பன்னீர் செல்வமோ நானே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இருவரும் இன்று (ஜூலை 28) பிரதமரை சந்தித்தால் அது அதிமுகவில் பல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்.
-வணங்காமுடி