உருட்டல் மிரட்டலுக்கு பயப்படமாட்டோம் : அண்ணாமலைக்கு சேகர்பாபு பதில்!

அரசியல்

என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாவது கட்ட பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இந்த யாத்திரை மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

சனாதன விவகாரத்தில் நேற்று (செப்டம்பர் 12) தமிழ்நாடு முழுவதும் அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரி அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில் இன்று இவ்வாறு கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 94 மாணவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (செப்டம்பர் 12) சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், 1000 க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் எத்தனை கோயில்களுக்கு முதலமைச்சர் சென்றிருக்கிறார் என தெலங்கானா, புதுச்சேரி தமிழிசை சௌந்தரராஜன் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சேகர்பாபு, “தெலுங்கானாவுக்கும் புதுச்சேரிக்கும் தான் ஆளுநரே தவிர, தமிழக பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளர் அல்ல. இதை கேட்கின்ற தார்மீக உரிமை அவருக்கு இல்லை.

அவர் சார்ந்து இருக்கின்ற/ ஆளுநராக இருக்கின்ற மாநிலங்களில் இது போன்ற கும்பாபிஷேக நடவடிக்கையை முன்னெடுத்தால் இது போன்ற கேள்விகளை கேட்பதற்கு தகுதி உடையவர்களாக நினைக்கலாம்.

போகிற போக்கில் ஏதாவது சிண்டு முடிஞ்சு வைக்கும் வேலையை புதுச்சேரியிலும் தெலுங்கானாவிலும் வைத்துக் கொள்ள கேட்டு கொள்கிறேன் என்று கூறினார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்  திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று கோயிலுக்கு சென்று பணியை செய்யும் போது எந்தவித பிரச்சனைக்கு அவர்கள் உள்ளானாலும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். என் மண், என் மக்கள் எடுபடவில்லை அதற்காக ஏதாவது பிரச்சனையை பாஜக கையில் எடுக்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம், போராட்டம் இவற்றின் மூலம் எங்களை அச்சுறுத்த முடியாது என்றும், இது சமத்துவமான ஆட்சி. அனைத்து அமைச்சர்களுக்கும் சமத்துவம் பற்றி பேசும் உரிமை உண்டு. இது போன்ற போராட்டத்தை 45 ஆண்டாக சந்தித்து வருகிறேன்.
உருட்டல் மிரட்டலுக்கு பயந்து எங்கள் பணிகளை செய்யாமல் இருக்க மாட்டோம். துறையின் செயல் என்பது முதலமைச்சரின் ஆணை. முதலமைச்சரை பொறுத்தவரை 45 க்கும் மேற்பட்ட இந்து சமய அறநிலையத் துறை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்” என்று கூறினார்.

சுசி கணேசனின் ’தில் ஹை கிரே’: ஆடியோ டீசர் ஸ்பெஷல் என்ன?

அண்ணாமலையை ஏன் கைது செய்யலை? சென்னை மாநகர கமிஷனருக்கு ஸ்டாலின் கேள்வி! 

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *