மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை: அமைச்சர் துரைமுருகன் டார்கெட்!

Published On:

| By Monisha

தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 12)  மணல் தொடர்பான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஜி20 மாநாட்டிற்கு பிறகு இந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்தியா கூட்டணிக் கட்சியினரை நோக்கி  அமலாக்கத்துறை சோதனை நடைபெற உள்ளது என்று தகவல் வெளியானது. இதை அடிப்படையாக வைத்து  ஆகஸ்டு 31, செப்டம்பர் 1  தேதிகளில் மும்பையில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ‘இனி மோடி அரசின் ஏஜென்சிகள் நம்மை நோக்கிப் பாய்வார்கள். சோதனைகள், கைதுகள்  எதற்கும்  தயாராக இருங்கள்’ என்று பேசியிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் சில நாட்களாகவே மீண்டும் ரெய்டுகள் நடக்கலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்திலும் அதிகாரிகள் வட்டாரத்திலும்  பரபரப்பாக பேசப்பட்டது.  ஏற்கனவே செந்தில்பாலாஜியை குறிவைத்து ரெய்டு நடத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்து எந்த அமைச்சர் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை பாயும் என்ற விவாதம் திமுகவுக்குள்ளேயே எழுந்தது.  கடந்த ஓரிரு நாட்களாக  தமிழ்நாட்டில் தனியார் டாக்சிகளை மத்திய அரசு ஏஜென்சிகள் புக் செய்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன.

இந்த பின்னணியில்தான் இன்று  (செப்டம்பர் 12) காலை முதல் பல்வேறு இடங்களில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ED officers raid

திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல், வேலூர் உள்ளிட்ட இடங்களில் மணல் குவாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.  புதுக்கோட்டையில் மணல் குவாரி தொழிலதிபரான எஸ் ஆர் எனப்படும் ராமச்சந்திரன் கார்ப்பரேட் அலுவலகம், அவரது வீடு உள்ளிட்ட  5  இடங்களில் அமலாகக்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள். இதேபோல திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் தொடர்பான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகிறார்கள்.

இதேபோல வேலூர் பள்ளி கொண்டா மணல் குவாரி, திருச்சி கொள்ளிடம் மணல் குவாரி, நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு மணல் சேமிப்புக் கிடங்கு உள்ளிட்ட    மணல் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் நீர்வளத்துறை செயற் பொறியாளர் திலகம் என்பவரது வீட்டிலும் இன்று காலை முதல் 5-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

மணல் குவாரிகளை மையமாக வைத்து நடக்கும் இந்த சோதனைக்கு பின்னால் பர்மிட் இல்லாத இடங்களில் மணல் எடுப்பது,  அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக மணல் எடுப்பது,  இதற்குப் பின்னால் நடக்கும் பண மோசடி ஆகியவை இருப்பதாக அமலாக்கத் துறை வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

இந்த சோதனைகள் அடிப்படையில் மணல் குவாரிகளை நிர்வகிக்கும்  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேல் அமலாக்கத்துறையின் அடுத்த கட்ட பாய்ச்சல் இருக்குமா என்ற பரபரப்பு திமுகவுக்குள் எழுந்திருக்கிறது.

வேந்தன், மோனிஷா

உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை!

100 மில்லியன் பார்வை…சாதனை படைத்த ’டிடி ரிட்டர்ன்ஸ்’!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel