டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் சார்பாக இயக்குனர் சுசி கணேசனின் தில் ஹை கிரே திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது.
உத்தரபிரதேச காவல்துறையை கதைக்களமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் வினீத் குமார் சிங், அக்ஷய் ஓபராய் மற்றும் ஊர்வசி ரவுத்தேலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் உலகளாவிய பிரீமியர் நாளை வெளியாக உள்ள நிலையில் ஆடியோ டீசர் நேற்று இந்திய பெவிலியனில் ( TIFF) இந்திய அரசின் இணை செயலாளர் மற்றும் எம்.டி NDFC பிரிதுல் குமார் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் சுசி கணேசன், நடிகை ஊர்வசி ரவுடேலா மற்றும் இணை தயாரிப்பாளர் மஞ்சரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
படம் குறித்து பிரிதுல் குமார் பேசும்போது , “எங்களுக்கு சுமார் 65 படங்கள் தேர்வுக்கு வந்தன. திரைப்பட வல்லுனர்களோடு படங்களைப் பார்த்தோம் .அவற்றில் இந்த ஒரு படம் எல்லா விதத்திலும் பொருந்துவதோடு இந்தியாவின் கிரியேட்டிவ் எக்கானமியை சர்வதேச அளவில் வெளிப்படுத்த சரியானதென தேர்ந்தெடுத்தோம். மேலும் தொழில்நுட்ப ரீதியாகவும் , அனைத்து நடிகர்களின் நடிப்பும் அற்புதமாக இருந்தது . இந்த ஆடியோ டீஸர் யோசனையும் புதுமையானது.
இது பள்ளி நாட்களில் ஒலி நாடாக்களை மட்டுமே கேட்பதை நினைவுக்கு கொண்டுவந்தது. பல திரைப்பட வசனங்களை மனப்பாடம் செய்திருக்கிறோம். ஒலியை வைத்து காட்சியை நாம் கற்பனை செய்து கொள்வோம் . அதுபோல இது கண்டிப்பாக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும்” என்று தெரிவித்தார்.
இயக்குனர் சுசி கணேசன், ”இது ஒரு வரலாற்றுத் தருணம். ‘தில் ஹை கிரே’ ஆடியோ டீசரை அறிமுகப்படுத்த TIFF சரியான மேடையாக அமைந்தது. இது சினிமா ஆர்வலர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும். புதுப்புது ஐடியாக்கள் தான் சினிமாவை உயிர்ப்புடன் வைத்திருக்கும். ஷூட்டிங்கில் பதிவு செய்யப்பட்ட குரல்களுடன் ஒரு காட்சியை படமாக்கும்போது முழு செட்டும் அமைதியில் இருந்ததைக் கவனித்தேன். ஒவ்வொருவரும் குரலுக்கேற்றபடி கற்பனை செய்து கொண்டார்கள். ஆடியோ டீஸர் யோசனை அப்போது தோன்றியது தான்” என்றார்.
படத்தின் நாயகி ஊர்வசி ரவுத்தேலா “இந்த படம் துவங்கும் போது எனக்கு இப்படி ஒரு தளம் கிடைக்கும் என கனவிலும் நினைக்கவில்லை. மேக்கப்பை அதிகம் விரும்பும் நான் இந்த படத்தில் மேக்கப் இல்லாமலே நடித்தேன். நடிகர்களிடம் எப்படி வேலை வாங்க வேண்டுமென்பதை சுசி சாரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
கோவையில் பயங்கரம் : நீதிமன்றம் சென்று திரும்பியவர்களுக்கு அரிவாள் வெட்டு!
எதிர்காலத்தில் படங்களில் நடிக்க முடியாது: விஷாலுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!