Disrespect to the President Droupadi Murmu

ஜனாதிபதிக்கு அவமரியாதை… பெண் என்பதாலா? பழங்குடி என்பதாலா? : தலைவர்கள் கண்டனம்!

அரசியல்

அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கும்போது குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவமதிக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நாட்டில் சமுதாய வளர்ச்சிக்காக தொண்டாற்றியவர்களை கெளரவிக்கும் விதமாக மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ் மற்றும் சரண் சிங், பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதன், மறைந்த முன்னாள் பீகார் மாநில முதலமைச்சர் கர்பூரி தாக்கூர், பாஜக தலைவராகவும் துணை பிரதமராகவும் பணியாற்றிய எல்.கே.அத்வானி ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உட்பட 5 பேருக்கு பாரத ரத்னா விருது | Bharat Ratna Award to 5 people including Agricultural Scientist MS Swaminathan - hindutamil.in

இதனையடுத்து கடந்த மார்ச் 30ஆம் தேதி பாரத ரத்னா விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது அத்வானி தவிர மற்ற நால்வரின் குடும்பத்தினரிடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்காத பாஜக மூத்த தலைவர் அத்வானியின் வீட்டிற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று (மார்ச் 31) வழங்கினார். அப்போது பிரதமர் மோடி, துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், வெங்கையா நாயுடு ஆகியோர் உடனிருந்தனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், விருது வழங்கும் போது, அத்வானி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் அமர்ந்திருக்க, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மட்டும் நின்றிருந்த புகைப்படம் சர்சையை ஏற்படுத்தியது.

இதனை குடியரசுத்தலைவருக்கு ஏற்பட்ட அவமதிப்பு என இந்தியா கூட்டணி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது முதல் முறையல்ல!

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “நாட்டின் ஜனாதிபதி நிற்கிறார், பிரதமர் மோடி அமர்ந்திருக்கிறார். பழங்குடியின பெண் ஜனாதிபதியை மீண்டும் பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார்.

இது முதல் முறையல்ல – புதிய நாடாளுமன்றம் தொடங்கப்பட்டபோது, அவரை அழைக்கவில்லை, ராமர் கோயிலின் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கூட குடியரசுத் தலைவரைக் காணவில்லை.

பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மனநிலை பெண்களுக்கு எதிரானது மற்றும் தலித் விரோதமானது என்பதை இந்த சம்பவங்கள் காட்டுகின்றன” என்று விமர்சித்துள்ளது.

பெண்மணி என்பதாலா? அல்லது பழங்குடி என்பதாலா?

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர், மேனாள் துணைபிரதமர் ஆகியோருக்கு தேசத்தின் முதல் குடிமகளான குடியரசுத் தலைவரை எங்ஙனம் மதிக்க வேண்டும் என்பது தெரியாதா? தேசத்தின் தலைமை, குறிப்பாக அரசின் தலைமை, குடியரசுத் தலைவர் தான் என்பதை வரையறுத்துக் கூறும் அரசமைப்புச் சட்டத்தையேனும் மதிக்க வேண்டும் என்பது கூட தெரியாதா?

இந்த அவமதிப்பு – இவர் பெண்மணி என்பதாலா? அல்லது இவர் பழங்குடி என்பதாலா? அல்லது அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா? இப்படியொரு படம் வெளியானது அறியாமல் நிகழ்ந்ததா? திட்டமிட்டே நடந்ததா? குடியரசுத் தலைவரை நிற்கவைத்து படம்பிடித்து வெளியிடுவது என்னவகை பண்பாடு? பெரும் அதிர்ச்சியளிக்கிறது” என திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சாதி மற்றும் பாலினப் பாகுபாடுக்கு சான்று!

அதேபோன்று திமுக எம்.பி கனிமொழியும் தனது எக்ஸ் பக்கத்தில்,”நம் நாட்டின் குடியரசுத் தலைவர் மீது காட்டப்படும் அப்பட்டமான அவமரியாதைக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கின்றேன்.

பாஜக ஆட்சியின் கீழ், நமது தேசத்தின் அரசியலமைப்புத் தலைவரைக் கூட சாதி மற்றும் பாலினப் பாகுபாடு எவ்வாறு தொடர்கிறது என்பதற்கு இந்தப் படம் ஒரு அப்பட்டமான சான்றாக விளங்குகிறது” என்று அவர் விமர்சித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அருணாச்சல பிரதேசத்தின் 30 இடங்களின் பெயர்களை மாற்றி அறிவித்த சீனா!

”அரசியல் கட்சிகள் மீது கெடுபிடி கூடாது” : ஐ.டி.க்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *